-->

TNPSC Current Affairs Important Notes: 18.09.2020

பிரதமர் மோடி எழுதிய ‘தாய்க்கு கடிதங்கள்’ புத்தகம்
 • பிரதமர் மோடி இளம் வயதில் இருந்தே தனது எண்ணங்களை கடிதமாக எழுதும் பழக்கம் கொண்டவர். ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஒவ்வொரு தலைப்பில் தனது எண்ணங்களை கடிதமாக அன்னை தெய்வத்துக்கு என்ற பெயரில் குஜராத்தி மொழியில் கடிதமாக எழுதி வந்தார். அவ்வாறு அவர் எழுதி வந்த கடிதங்களை பாவனா சோமாயா என்ற எழுத்தாளர் ஆங்கிலத்தில் ‘தாய்க்கு கடிதங்கள்’ என்ற பெயரில் மொழி பெயர்த்து உள்ளார். அந்த புத்தகம் வெளியாகி உள்ளது. 
 • அந்த புத்தகத்தில் தன்னை பற்றியும் மோடி எழுதி இருக்கிறார். அதில், தான் தொழில்முறை எழுத்தாளர் அல்ல என்றபோதிலும் தன்னால் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் என்றும், அதன்படி தனது மனதில் உள்ள எண்ணங்களை கடிதங்களாக எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
வண்டலூர், பல்லாவரத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
 • முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் மற்றும் பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் வண்டலூர்-கேளம்பாக்கம்-மாம்பாக்கம் சாலை இணையும் சந்திப்பில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி. சாலையுடன் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் ரூ.80 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார்
அமெரிக்க மாகாணங்களை புரட்டி போட்ட ‘சால்லி’ புயல்
 • காலநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவை அடிக்கடி பயங்கர புயல்கள் தாக்கி வருகின்றன. அந்த வரிசையில் அட்லாண்டிக் பெருங்கடலில் தோன்றிய ‘சால்லி’ என்ற சக்தி வாய்ந்த புயல் அமெரிக்காவின் அலபாமா மற்றும் புளோரிடா மாகாணங்களை தாக்கியது.
2021 தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி : ஹர்ஷ வர்தன்
 • உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் கரோனா தடுப்பூசி தயாரிப்பிற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, மேம்பட்ட திட்டமிடலுடன் அவர்கள் அந்த நடவடிக்கைகளை கவனித்து வருகின்றனர். மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கரோனா தடுப்பூச்சி கிடைக்கும் என்று நம்புகிறோம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.
செளதியில் 1.2 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடம் கண்டுபிடிப்பு
 • செளதி அரேபியாவில் 1.2 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மற்றும் விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. செளதி அரேபியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள தபூக் மாகாணத்தின் ஒரு பழங்கால ஏரியில் மனித மற்றும் விலங்குகளின்  கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்ட செளதி அரேபியா  அரேபிய தீபகற்பத்தில் பழமையான வசிப்பிடத்தின் முதல் அறிவியல் சான்றுகள் என இதனைக் குறிப்பிட்டுள்ளது. 
 • றநகர் பகுதியில் உள்ள இந்த வறண்ட ஏரியைச் சுற்றிலும் மனிதர்கள், யானைகள் மற்றும் மான்கள் போன்ற விலங்குகளின் கால்தடங்கள் கிடைத்துள்ளன. இதுவரை  சுமார் 233 யானைகளின் புதைபடிவங்கள், ஏழு மனிதர்கள், 107 ஒட்டகங்கள் மற்றும் மான் பிற விலங்குகளின் தடயங்களை அகழ்வாராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.
ஒருநாள் தரவரிசை: முதல் இரு இடங்களில் தொடர்ந்து நீடிக்கும் கோலி & ரோஹித்
 • ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் கோலி, ரோஹித் ஆகிய இரு இந்திய வீரர்களும் முதல் இரு இடங்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்கள். 871 புள்ளிகளுடன் கோலி முதல் இடத்திலும் 855 புள்ளிகளுடன் ரோஹித் 2-ம் இடத்திலும் உள்ளார்கள்
அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிப்பு: சட்ட மசோதா நிறைவேறியது
 • தேசிய அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இதற்கான சட்ட மசோதா பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது. 
 • பொறியியல், தொழில்நுட்பம், அவை தொடர்பான அறிவியல் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காகவும், அவற்றில் ஆராய்ச்சிகளைத் தொடர்வதிலும் முன்னேற்ற வழிமுறைகளைக் காண்பதற்காகவும் அண்ணா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகமானது 13 உறுப்புக் கல்லூரிகள், கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியின் அனைத்துத் துறைகள், குரோம்பேட்டையிலுள்ள தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ள கல்லூரிகள், கல்வி நிறுவநங்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
 • அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை சென்னையில் இருந்து நிர்வகித்து வருவது பல்கலைக்கழகத்தின் அதிக நேரத்தையும் ஆற்றலையும் எடுத்துக் கொள்கிறது. இணைப்புப் பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை சிறந்த முறையில் கண்காணிப்பதற்கும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர்கல்வி, ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதற்காகவும் புதிய இணைவு வகை பல்கலைக்கழகத்தை தோற்றுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 • இந்தப் பல்கலைக்கழகமானது இணைவு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைக் கொண்டு செயல்படும். இப்போதுள்ள பல்கலைக்கழகமானது, அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்ற பெயரில் மாற்றியமைக்க அரசு தீர்மானித்துள்ளது என சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. 
கூடுதல் தகவல்:
 • அண்ணா பல்கலைக்கழகமானது கடந்த 1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் நினைவாக இந்தப் பெயரை அப்போதைய அதிமுக அரசு சூட்டியது.
 • கிண்டி பொறியியல் கல்லூரி 1794-ஆம் ஆண்டும், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி 1944-ஆம் ஆண்டும், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி 1949-ஆம் ஆண்டும், கட்டடக் கலை மற்றும் திட்டமிடல் கல்வி நிறுவனம் 1957-ஆம் ஆண்டும் உருவாக்கப்பட்டன.
 • அண்ணா பல்கலைக்கழகமானது 189 ஏக்கரில் பரந்து விரிந்து கட்டடங்களும், பசுமை நிறைந்த மரங்களுடனும் இருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது வளாகம் சென்னை குரோம்பேட்டையிலும், மூன்றாவது வளாகம் தரமணியிலும் செயல்ப்டடு வருகிறது. 
 • தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் 2001-ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. இதன்பின்பு, 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் மண்டல வாரியாக புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. 2012-ஆம் ஆண்டில் ஒரே பல்கலைக்கழகமாக மீண்டும் உருவாக்கப்பட்டது.
 • இப்போது அண்ணா பல்கலைக்கழகத்துடன் 593 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன.   கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு, அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம், இப்போது அதே அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டு புதியதொரு பல்கலைக்கழகமாக உருவெடுக்கப் போகிறது.
பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை திறந்து வைத்தார் மோடி
 • பீஹாரில் கோசி ஆற்றுக்கு குறுக்கே பிரமாண்ட ரயில் பாலம் கட்டும் திட்டத்திற்கு 2003 - 2004 ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 516 கோடி ரூபாய் மதிப்பில் 1.9 கி.மீ. நீளத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த கோசி ரயில் பாலத்தை பிரதமர் மோடி 18.09.2020 அன்று திறந்து வைத்தார். வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் இந்த பாலம் திறக்கப்படுவது பீஹார் வரலாற்றில் சிறப்புமிக்க தருணமாகும். இதன்மூலம் 86 ஆண்டு கனவு நிறைவேற உள்ளது. பிராந்திய மக்களின் காத்திருப்புக்கு பலன் கிடைக்க உள்ளது. இந்த திட்டத்துடன் மேலும் 12 ரயில் திட்டங்களையும் பிரதமர் அறிமுகம் செய்துவைக்க உள்ளார்.
தைவான் - அமெரிக்க உயர் அதிகாரிகள் சந்திப்பு; சீனா எதிர்ப்பு
 • ஒரு காலத்தில் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்த தைவான் பின்னாளில் சுதந்திரமடைந்தது.தற்போது ஹாங்காங்போல சீன கம்யூனிச அரசிடமிருந்து விடுதலை பெற்று 'ஒரு நாடு, இரு சட்டம்' என்கிற ரீதியில் தைவான் தனிநாடாக செயல்பட்டு வருகிறது. ஹாங்காங்கைப்போல தைவானையும் கையகப்படுத்த சீன அரசு தற்போது முயன்று வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் தைவான் முன்னாள் அதிபர் லீ டெங் ஹூய் மரணமடைந்தார். 97 வயதான லீ, தைவானின் மூத்த அதிபர் ஆவார்.
 • கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து அமெரிக்க முக்கிய அதிகாரி கெய்த் க்ராச் தைவானுக்கு வருகைதர உள்ளார். அமெரிக்கா, தைவான் நட்புறவு குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட உள்ளது. இந்த சந்திப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
நம்பகமான செய்திகளில் பத்திரிகைகளுக்கே முதலிடம்!
 • நம்பகமான செய்தி களை தரும் ஊடகங்களில், பத்திரிகைகள் முதலிடம் பிடித்திருப்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ஊடக ஆலோசனை நிறுவனமான, ஆர்மேக்ஸ் மீடியா, 17 மாநிலங்களில், நகர்ப்புறங்களைச் சேர்ந்த, 15 வயதிற்கு மேற்பட்ட, 2,500 பேரிடம், செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு நடத்தியது. அதன் அடிப்படையில் 'செய்திகளின் நம்பகத்தன்மை குறியீடு' ஆய்வறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
 • ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர், பத்திரிகைகள் தான் நம்பகமான செய்திகளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, செய்திகளின் நம்பகத்தன்மை குறியீட்டில், பத்திரிகைகள், 62 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளன. வானொலி மற்றும் 'டிவி' செய்திகள், முறையே, 57 மற்றும் 56 சதவீதத்துடன், அடுத்த இரு இடங்களை பெற்று உள்ளன.
'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
 • உலக வங்கி, 174 நாடுகளில், கல்வியறிவு பெற்ற குழந்தைகள், அவர்களின் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில், ஆண்டுதோறும், மனித மூலதன குறியீட்டு பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி இந்தாண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மனித மூலதன குறியீட்டில், இந்தாண்டு இந்தியாவின் பங்கு, 0.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 2018ல், ௦.44 சதவீதமாக இருந்தது. இந்த வகையில், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாடுகளில், இந்தியா, 116வது இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு, 115வது இடத்தில் இருந்தது.
வந்தே பாரத் திட்டத்தில் 14.12 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்
 • வந்தே பாரத் திட்டம் 2020, மே 7ம் தேதி துவங்கப்பட்டது. இதுவரை 14 லட்சத்து 12 ஆயிரத்து 834 இந்தியர்கள், நாடு திரும்பி உள்ளனர். கொரோனா சூழலில் தங்கள் வீட்டிற்கு பத்திரமாக திரும்ப விரும்பும் இந்தியர்கள் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகின்றனர். வந்தே பாரத் திட்டத்தின் 6வது கட்டப்பணி அக்டோபர் .,24 வரை உள்ள நிலையில், 1007 சர்வதேச விமானங்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு
 • விண்வெளித்துறையின் வேண்டுகோளை ஏற்று ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் 961 ஹெக்டேர் நிலத்தை அடையாளம் கண்டறிந்துள்ளது. இன்னும் 6 மாத காலத்தில் அந்த நிலத்தை தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்படடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 961 ஹெ க்டர் நிலத்தில் 431 ஹெ க்டர் நிலத்தில் அளவிடும் பணி நிறைவடைந்துள்ளது. மீதி நிலத்திற்கு அளவிடும் பணி தற்போது நடந்து வருகிறது' இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக 1,000 செவிலியர்கள் உயிரிழப்பு
 • கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதும் இதுவரை, 1,000 செவிலியர் உயிரிழந்திருக்கிறார்கள்' என, செவிலியருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து சிகிச்சை அளிப்பதில் செவிலியர்களின் பங்கு மிக முக்கியமானது. உலக முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான செவிலியர் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், உலக முழுவதும் கொரோனா வைரசுக்கு இதுவரை 1,000 செவிலியர் உயிரிழந்துள்ளனர். இந்த இறப்புகள் அனைத்தும் சுவாச கோளாறு காரணமாக நடந்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் சுகாதாரப் பணியாளர்களை காக்க அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சர்வதேச செவிலியர் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting