-->

TNPSC Current Affairs Important Notes: 17.09.2020

ரஷியா கரோனா தடுப்பூசி: இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம்
 • ரஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கவும், ஆய்வு செய்யவும் டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷியாவின் கமாலேயா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வு மையம் கரோனாவுக்காக ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் ஆய்வு செய்யவும் தயாரிக்கவும் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்ததையடுத்து, 10 கோடி தடுப்பூசிகளை வழங்க ரஷியா முடிவு செய்துள்ளது. சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தவுடனும், இந்திய ஒழுங்குமுறை ஆணையங்களால் பதிவு செய்த பிறகும் இந்த ஆண்டு கடைசியிலிருந்து தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்படும் என்று ரஷிய நேரடி முதலீடு நிதியம் (ஆர்டிஐஎஃப்) தெரிவித்துள்ளது
தன்னார்வ அமைப்புகளுக்கு 3 ஆண்டில் ரூ. 58 ஆயிரம் கோடி வெளிநாட்டு நிதி
 • நாடு முழுவதும் 2016 முதல் 2019 வரை தன்னார்வ அமைப்புகள் ரூ. 58 ஆயிரம் கோடி வெளிநாட்டு நிதி பெறப்பட்டுள்ளது. இதில், 2016-2017 வரை ரூ. 18,337.66 கோடி, 2017-2018 வரை ரூ. 19,764.64 கோடி, 2018-2019 வரை ரூ. 20,011.21 கோடி தன்னார்வ அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதிகள் அனைத்தும் வெளிநாட்டு நிதி பெறுவதற்காக பதிவு செய்யப்பட்ட 22,400 தன்னார்வ அமைப்புகளால் பெறப்பட்டுள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம்-2010 இன் 11 வது பிரிவின் கீழ் வெளிநாட்டு நிதி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மதம், சமூகம், பொருளாதாரம், கல்வி அல்லது கலாச்சாரம் ஆகிய பணிகளுக்காக பயன்படுத்தலாம்.
ரூ.12,845 கோடிக்கான துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் ஓ. பன்னீர்செல்வம்
 • தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-2021-ஆம் ஆண்டுக்கு ரூ.12,845 கோடிக்கான துணை நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, 2020-2021 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்துள்ளேன். துணை மானியக் கோரிக்கைகளை விளக்கிக் கூறும் விரிவானதொரு அறிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.  இத்துணை மதிப்பீடுகள், மொத்தம் 12,845.20 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன
அந்தமான்: போர்ட் பிளேர் விமான நிலையத்தில் புதிய முனையம்
 • போர்ட் பிளேர் விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு மத்தியில் நிறைவடையும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள இந்திய விமான நிலைய ஆணையம், போர்ட் பிளேயரில் விமான நிலைய முனைய கட்டடம் அமைக்கும் பணி 65 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு மத்தியில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த புதிய முனைய கட்டடம் தரைத்தளம், முதல் தளம், மேல்தளம் என்று மூன்று அடுக்குகளாக அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தரைத்தளம் தொலைநிலை வருகை, புறப்பாடு மற்றும் சேவை பகுதிக்காகவும், மேல்தளம் புறப்படும் பயணிகளுக்கான நுழைவு வாயில் மற்றும் வருகை பயணிகளுக்கு வெளியேறும் வாயிலாகவும், முதல் தளம் சர்வதேச பயணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது. கடற்கரையையொட்டி அமைவதால், சிப்பி வடிவில் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில் இந்த முனையம் அமைக்கப்பட உள்ளது.
இந்தியாவில் இதுவரை 224 செயலிகளுக்குத் தடை: மத்திய அமைச்சர் தகவல்
 • இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் 69 ஏ பிரிவின் கீழ் டிக்டோக், ஹலோ உள்ளிட்ட 224 செயலிகளின் பயன்பாடுகளை இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேசிய பாதுகாப்பு விஷயங்கள் மேம்படும், மேலும் எந்தவொரு இந்தியரின் தகவல்களும் வெளிநாட்டினருக்கு கிடைக்காமல் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், டிக்டோக், யூசி உலாவி, ஷேரீட், வெச்சாட், கேம்ஸ்கேனர் மற்றும் மி கம்யூனிட்டி உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு அரசாங்கம் தடை விதித்தது. இந்த மாத தொடக்கத்தில், பிரபல இணைய விளையாட்டான பப்ஜி உள்பட 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னிமலை: அகழாய்வுப் பணியில் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு
 • சென்னிமலை அருகே நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. தாழிக்குள் இருந்த எலும்புகள் ஆய்வுக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் 2,300 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் பல்வேறு கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
 • தற்போதைய ஆய்வில் செங்கற்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட தொழிற்கூடம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கல்மணிகளும், பிராமி எழுத்துக்களையும் கண்டு பிடித்துள்ளனர். இந்த அகழாய்வு பணி வருகிற 30-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது என இந்தியத் தொல்லியல் துறையின் திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தெரிவித்தார்.
ஆயுர்வேத கல்வி - ஆராய்ச்சி மைய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
 • ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய மசோதா 2020, மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் கடந்த மார்ச் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதன் மூலம், குஜராத் ஜாம் நகரில் நவீன ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்(ITRA) அமையவும், அதற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்(INI) அந்தஸ்து கிடைக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்கும் மசோதா பேரவையில் நிறைவேற்றம்
 • தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடைமையாக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடைமையாக்கும் மசோதா, தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு, எதிர்ப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.
 • உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதையடுத்து அவர் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட பகுதியில் உள்ள “வேதா நிலையம்” இல்லத்தை நினைவில்லமாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு பொது அறிவிக்கை வெளியிட்டது.
2021-ல் சாலைப் போக்குவரத்துத்துறை வருவாய் 35-40% குறையும்
 • 2021-ஆம் ஆண்டு நிதியாண்டில் சாலைப் போக்குவரத்துத்துறை வருவாய் 35 முதல் 40 சதவிகிதம் வரை குறையும் என்று முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் (ஐ.சி.ஆர்.ஏ.) தெரிவித்துள்ளது. முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் அளித்த தகவலின்படி,  50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகளை இயக்குவதால் கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும். எனினும் இதன் மூலம் 2021 நிதியாண்டில் சாலைப் போக்குவரத்து கழகத்திற்கான வருவாய் 35 முதல் 40 சதவிகிதம் குறைய வாயுப்புள்ளது. இத்தகைய வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பயணக் கட்டணங்களை உயர்த்தி மாநில அரசுகள் சாலைப் போக்குவரத்துத்துறைக்கு உதவ முன்வரவேண்டும். எந்தவொரு குறிப்பிடத்தக்க பணப்புழக்க பற்றாக்குறையையும் தவிர்ப்பதற்காக மோட்டார் வாகன வரி (எம்விடி) ஒத்திவைத்தல் மற்றும் பணியாளர் சம்பளம் போன்ற நிலையான செலவுகளில் மாநில அரசுகள் மாற்றங்களை கொண்டுவர வாய்ப்புள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
 • உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 
 • தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முக்கிய மசோதாக்களின் வரிசையில், உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலம் நீடிக்கும் மசோதாவை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா மூலமாக, தனி அலுவலர்களின் பதவிக்காலம் 2020 டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஊரடங்கில் 2 கோடி கட்டடத் தொழிலாளர்களுக்காக 5,000 கோடி நிவாரணம்
 • தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கங்வார் பேசியதாவது, கரோனா பெருந்தொற்றால் பல்வேறு தரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கில் வேலையிழந்த 2 கோடி கட்டடத் தொழிலாளர்களுக்கு 5,000 கோடி ரூபாய் நிவாரணமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர ஊரடங்கில் ஊதியமின்றி தவித்து வந்த 2 லட்சம் தொழிலாளர்களுக்கு ஊதியமாக ரூ.295 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 4,800 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவகம்
 • கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,484 மீட்டர் உயரத்தில் ஐக்கிய அரபு அமீகரத்தின் பிரபல ரஸ் அல் கைமா பகுதியில் ஒரு நவீன உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. 
 • ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கே உள்ளது மிகவும் பிரபலமான சுற்றுலா நகரம் ரஸ் அல் கைமா. மலைப்பகுதி என்பதால் இங்கு வழக்கமாகவே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்நிலையில் இப்பகுதியில் சுமார் 5,000 அடி உயரத்தில் ஒரு உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பதற்கு முன்னரே இதற்கு வரவேற்பு குவிந்துள்ளது. 
திருவள்ளுவர் பல்கலை.யை 2-ஆகப் பிரித்து விழுப்புரத்தில் புதிய பல்கலை.: பழனிசாமி அறிவிப்பு
 • திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
 • தமிழக அரசு, பல உயர்கல்வி நிறுவனங்களை தொடர்ந்து உருவாக்கியும், பல உயர் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்தியும் வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் மற்றும் மூலைமுடுக்கில் உள்ள ஏழை, எளிய மாணாக்கர்களின் உயர்கல்வி கனவு நனவானது. இதன் காரணமாகத்தான் அகில இந்திய அளவில் 26.3 விழுக்காடு என இருக்கும் மாணவர் சேர்க்கை விகிதம், தமிழ்நாட்டில் மிக அதிகமாக, அதாவது 49 விழுக்காடு என்ற அளவில் உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டத்துறை அமைச்சரின் கோரிக்கை மற்றும் விழுப்புரம் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். இப்பல்கலைக்கழகம் நடப்பாண்டிலேயே செயல்பட துவங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மணாலி - லே இடையே உலகின் மிக நீண்ட சுரங்கப்பாதைப் பணி நிறைவு
 • மணாலி - லே பகுதியை இணைக்கும் உலகின் மிக நீண்ட அடல் சுரங்கப் பாதையை அமைக்கும் பணி சுமார் பத்து ஆண்டுகளில் நிறைவு பெற்றுள்ளது. முன்னதாக இது 6 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்துக்குள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
 • அடல் சுரங்கப் பாதை, மணாலி -  லே பகுதிகளை இணைக்கும், உலகிலேயே மிக நீண்ட சுரங்கப் பாதை, பூமியில் இருந்து சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைக்க ஆறு ஆண்டுகளுக்கும் குறைவாக திட்டமிடப்பட்டது, ஆனால், இந்த சுரங்க பாதையை அமைக்க 10 ஆண்டுகள் ஆகியுள்ளது என்று மூத்த பொறியாளர் கே.பி. புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
 • மணாலியில் இருந்து லேஹ் செல்வதற்கான தொலைவில் 46 கிலோ மீட்டர் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 4 மணி நேரப் பயணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்றும் புருஷோத்தமன் கூறியுள்ளார். சுரங்கப் பாதையின் அகலம் 10.5 மீட்டராகும். இதில் இரண்டு பக்கத்திலும் 1 மீட்டருக்கு நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
வரதட்சிணை கொடுமை: அதிகபட்ச தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த அரசு பரிந்துரை
 • வரதட்சிணை கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
 • பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழித்திடும் வகையிலும், முன்னோடியாக, 1992-ம் ஆண்டில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டது.
 • இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஒரு முன்னோடித் திட்டமாக 6.3.2019 முதல் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு, சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
 • பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக காவலன் செயலி, மகளிர் உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 போன்றவையும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, குற்றங்கள் வெகுவாக தடுக்கப்பட்டுள்ளன.
ஈரோடு நகரின் 149 ஆவது பிறந்த நாள்
 • எ.எம்.மெக்ரிகர் என்ற ஆங்கிலேயர் தலைமையில் 7 நியமன உறுப்பினர்கள் கொண்ட ஈரோடு நகர பரிபாலன சபை 1871 செப்டம்பர் 16 ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதுவே ஈரோடு வளர்ச்சிக்கு கால்கோள் நாட்டப்பட்ட நாள். அந்த வகையில் 'மஞ்சள் மாநகரம்' என்றழைக்கப்படும் ஈரோடு இன்று 149ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
 • 24 கொங்கு நாடுகளில் ஒன்றான பூந்துறை நாட்டின் பழம்பெரும் 32 ஊர்களில் ஈரோடும் ஒன்று. அதில் 4 கட்டமனையாக(மாகாணம்) 24 நாடுகளையும் பிரித்ததில், கட்டமனையின் தலைநகராக ஈரோடு விளங்கியது. இங்கு ஒரு பெரிய மண் கோட்டை கட்டப்பட்டது. அதில் சிறுபடையும், தளவாய் கந்தாசாரம், சேனபாகம், சேர்வைகாரர், அட்டவணை போன்ற அதிகாரிகளும் இருந்தனர். மதுரை நாயக்கர், மைசூர் உடையார், திப்பு, ஹைதர் கம்பெனிப் போர்களில் ஈரோடு கோட்டை மிக முக்கிய இடம் பெற்றது. இவற்றால் ஈரோடு பெரும் அழிவைக் கண்டது. 2,000 வீடுகள் இருந்த ஈரோட்டில் ஆள் அரவமற்ற, 400 வீடுகளே எஞ்சின என்கிறார் ஸ்வார்ட்ஸ் பாதிரியார்.

ஸ்ரீரங்கம் கோயிலில் விசித்திர மீன் சிற்பம்
 • ஸ்ரீரங்கம் கோயில் கல்வெட்டில் விசித்திரமான மீன் சிற்பம் இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. மிகவும் பழமையான திருத்தலமான ஸ்ரீரங்கம் கோயில் கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் அனைத்தும் உயிரோட்டமானவை. அந்த வகையில் ஸ்ரீசக்கரத்தாழ்வாா் சன்னதி நுழைவு வாயில் மேல் புறத்தில் உள்ள கல்வெட்டில் புடைப்புச் சிற்பமாக ஒரு மீன் செதுக்கப்பட்டுள்ளது. அந்த மீனுக்கு இருபுறமும் செதில்கள் இல்லை. அதன் மூக்கு கொக்கி வடிவில் உள்ளது. மேலும் அதன் வாயில் உள்ள பற்கள் பெரிதாக உள்ளன. இந்த வகை மீன் முற்காலத்தில் இருந்து அழிந்திருக்கலாம் என கோயிலுக்கு வந்தோா் தெரிவித்தனா்.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting