குவைத் மன்னர் மறைவு: அக்டோபர் 4 - துக்க நாளாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு
- ஷேக் சபா என்று பரவலாக அறியப்பட்ட குவைத் அரசா், கடந்த 2006-ஆம் ஆண்டு அரியணையேறினாா். குவைத் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் பெயா் பெற்றதுபோலவே, வளைகுடா நாடுகளிடையே ஏற்படும் அரசியல் சச்சரவுகளைத் தீா்த்து வைப்பதில் அவா் முக்கிய பங்காற்றி வந்தாா். இந்நிலையில் குவைத் அரசா் ஷேக் சபா அல்-அகமது அல்-ஜபா் அல்-சபா (91) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது மறைவைத் தொடர்ந்து இந்தியாவில் அக்டோபர் 4-ஆம் தேதி துக்க நாளாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சீனாவின் தியான்வென்-1 அனுப்பியது செல்ஃபி
- செவ்வாய்க் கோளுக்கு ஜூலை 23 ஆம் தேதி சீன அனுப்பப்பட்ட விண்கலம் எடுத்து அனுப்பிய முதல் சுயப்புகைப்படத்தை வியாழக்கிழமை சீன விண்வெளித்துறை வெளியிட்டுள்ளது. சீனாவின் முதல் செவ்வாய்க் கோளுக்கான விண்கலமான தியான்வென் - 1, இந்திய நேரப்படி கடந்த ஜூலை 23 அன்று காலை 4.41-க்கு வென்சாங் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
- தியான்வென் - 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட 36 நிமிடம் 11 வினாடியில் வளிமண்டல சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த விண்கலமானது இதுவரை 18.8 லட்சம் கிலோமீட்டர் வெற்றிகரமாக பயணம் செய்துள்ளதாகவும், அந்த விண்கலம் எடுத்த முதல் சுயப்புகைபடத்தையும் வெளியிட்டது சீன விண்வெளித்துறை. இந்த விண்கலம், 2021 முதல் செவ்வாய் கோளில் அய்வு செய்யப்படும் தகவல்களை பூமிக்கு அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிடம் இலங்கை ரூ.7,500 கோடி கேட்கிறது
- இலங்கை அரசு, அன்னியச் செலாவணி பரிமாற்றத் திட்டத்தின் கீழ், மேலும், 7,500 கோடி ரூபாய் தரும்படி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் சுற்றுலா வருவாய் குறைந்ததை அடுத்து, இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பும் குறைந்துள்ளது.இதன் காரணமாக, தர நிர்ணய நிறுவனமான, மூடிஸ், சமீபத்தில், இலங்கையின் கடன் தகுதியை குறைத்தது.
- இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக, இந்திய ரிசர்வ் வங்கியிடம், ஜூலை மாதம், அன்னியச் செலாவணி பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன்படி, 3,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு, அமெரிக்க டாலர்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. தற்போது, மேலும், 7,500 கோடி ரூபாய் மதிப்பிற்கு, டாலர்களை வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும். வரும், 2022 நவம்பருக்குள், இந்திய ரிசர்வ் வங்கியிடம் பெற்ற டாலர்களை, தற்போதைய ரூபாய் மதிப்பின் அடிப்படையில், இலங்கை அரசு திரும்ப வழங்கி விடும்.
இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பு: அமெரிக்க பார்லி.யில் மசோதா தாக்கல்
- இந்தியாவுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த, ஒரு அமைப்பை உருவாக்கக்கோரி, அமெரிக்க பார்லிமென்ட் செனட் சபையில், மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபையின், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தட்ப வெப்ப மாற்றத்துக்கான வெளியுறவு கமிட்டியின் உறுப்பினர் ராபர்ட் மினின்டெஸ் தாக்கல் செய்துள்ள மசோதாவில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்தியாவுடன், எரிசக்தி பரிமாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களில், அமெரிக்காவின் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம்.இதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
- இந்த அமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களில், இரு நாடுகளும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.மேலும், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தையில், அமெரிக்க நிறுவனங்கள் முதலீடுகள் செய்வதை ஊக்குவிப்பது, இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க உதவுவது ஆகிய பணிகளிலும் ஈடுபட வேண்டும். இந்தியா தலைமையிலான, சர்வதேச சூரிய ஒளி மின்சக்தி கூட்டணியில், அமெரிக்காவும் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி,பிரதமருக்கான பிரத்யேக விமானம் இந்தியா வந்தடைந்தது
- இந்தியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பயணிக்க ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே அமெரிக்க அதிபர் வெளிநாடு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விவிஐபி விமானங்களை போலவே இந்தியாவும் விமானங்கள் வாங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தமிட்டது. அதன்படி அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட போயிங் 777-300 ER ரக இரண்டு விமானங்களை போயிங் நிறுவனம் தயாரித்து வருகிறது.
- இந்நிலையில் இந்தியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களுக்காக உருவாக்கப்பட்ட விவிஐபி ‛ஏர் இந்தியா ஒன்'-ன் முதல் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது. இந்த பிரத்யேக விமானத்தின் விலை சுமார் ரூ.1400 கோடியாகும்.
சிறப்பம்சங்கள்:
- 143 டன் எடை கொண்ட இந்த விமானம் 43,100 அடி உயரம் வரை பறக்கும் திறன்கொண்டது. படுக்கை அறை, கூட்ட அரங்கு, மருத்துவக்குழு தங்கும் அறை, அறுவை சிகிச்சை அறை, சமையல் அறை, பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. * பிரம்மாண்டமான இந்த விமானத்தில் GE90-115BL இரட்டை இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய விமான எஞ்சின்களில் இந்த ரகமும் ஒன்று.
- அமெரிக்க அதிபருக்காக பயன்படுத்தப்படும் போயிங் 747-200பி விமானத்தில் இருக்கும் அதே ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு கவச தொழில்நுட்பம் இந்த விமானங்களிலும் கொடுக்கப்பட இருக்கிறது.
- ஏர் இந்தியா ஒன் விமானத்தின் ஸ்பெஷலே ஏவுகணையால் அதைச் சுட்டுவீழ்த்த முடியாது. ஏவுகணைப் பாதுகாப்பு தொழில்நுட்பம் எனப்படும் Large Aircraft Infrared Countermeasures (LAIRCAM) மற்றும் Self-Protection Suites (SPS) தொழில்நுட்பத்தை இந்த விமானம் கொண்டுள்ளது. இந்தியாவில் (SPS) தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட முதல் இந்திய விமானங்கள் இவைதான். (SPS) தொழில்நுட்பம் பொருத்தப்பட்டால், எதிரிகளின் ரேடார்களைச் செயலிழக்க வைக்கமுடியும்.
- இந்த விமானங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை இடைநிறுத்தாமல் பயணிக்கும் திறன் கொண்டவை. இந்த விமானங்களை நன்கு பயிற்சிபெற்ற விமானப்படை விமானிகள் இயக்கவுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்
- தேசிய அளவில் உள்ள ரேஷன் கார்டு தாரர்கள் தங்களது சொந்த மாநிலத்தைவிட்டு இடம்பெயரும்போது, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு தானியங்களை தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறத்தக்க வகையிலும், புலம்பெயர் குடும்பங்கள் தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள ரேஷன் கார்டு விவரங்களின் அடிப்படையில் உணவு தானியங்கள் பெறத்தக்க வகையிலும், “ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 01.10.2020 அன்று தொடங்கி வைத்தார்.
ஆர்மீனியா-அஜர்பைஜான் மோதலுக்கு இந்தியா கவலை
- மேற்கு ஆசிய நாடுகளான ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே நகர்னோ-கராபக் மலைப்பிராந்தியம் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இருநாட்டு ராணுவம் இடையே நடந்து வரும் மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்த மோதலுக்கு இந்தியா ஆழ்ந்த கவலை வெளியிட்டு உள்ளது.
71-வது நிறுவன நாள் சீனாவுக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து
- சீனா, இந்தியா இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து உள்ளது. இந்தநிலையில், சீனா நிறுவப்பட்டதன் 71-வது நிறுவன நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சீனாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
Post a Comment