வெள்ளி கிரகத்துக்கு விண்கலம்; இந்தியாவுடன் இணைந்த பிரான்ஸ் நிறுவனம்
- 'வீனஸ்' எனப்படும் வெள்ளி கோளுக்கு பயணம் மேற்கொள்ளும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் திட்டத்தில் இணைந்து செயல்பட உள்ளதாக பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்சின் விண்வெளி ஆய்வு நிறுவனமான சி.என்.இ.எஸ். வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: வீனஸ் எனப்படும் வெள்ளி கோளுக்கு 2025ல் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான கருவிகளை தயாரிக்கும் பணியில் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான 'ராஸ்காஸ்மோஸ்' மற்றும் பிரான்சின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி அமைப்பான சி.என்.ஆர்.எஸ். ஈடுபட உள்ளன.
- இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவனுடன் சி.என்.இ.எஸ். தலைவர் ஜீனா யீவ்ஸ் லீ கால் விரிவான பேச்சு நடத்தியுள்ளார். இந்தியா மேற்கொள்ளும் விண்வெளி ஆய்வு திட்டங்களில் ஈடுபட பிரான்ஸ் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. முதல் முறையாக பிரான்சின் விண்கலம் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட உள்ளது.
இந்திய ரயில் திட்டங்களுக்கு புதிய வளர்ச்சி வங்கி ரூ.5,466 கோடி கடனுதவி
- இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இரண்டு ரயில் திட்டங்களுக்கு, 'பிரிக்ஸ்' அமைப்பின், புதிய வளர்ச்சி வங்கி, 5,466 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க உள்ளது.
- பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா நாடுகள் அடங்கியது, பிரிக்ஸ் அமைப்பு. இந்த அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டது, என்.டி.பி., எனப்படும் புதிய வளர்ச்சி வங்கி. உறுப்பு நாடுகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்கு, இந்த வங்கி, கடனுதவி அளித்து வருகிறது. சீனாவின் ஷாங்காயை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த வங்கியின் நிர்வாகக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இரண்டு திட்டங்களுக்கு, கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு, 2018-ல் ஏற்கனவே கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, மும்பையின் மேற்கு மற்றும் கிழக்கு புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 1,778 கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்படுகிறது. மொத்தம், 14.47 கி.மீ., துாரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
- இதைத் தவிர, தேசியத் தலைநகர் டில்லியில் இருந்து, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத், மீரட்டை இணைக்கும் வகையிலான, மண்டல பறக்கும் ரயில் திட்டத்துக்கு, 3,688 கோடி ரூபாய் கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 82.15 கி.மீ., நீளத்துக்கு அமைய உள்ள இந்த ரயில் திட்டத்தில், 14.12 கி.மீ., ரயில் பாதை, பூமிக்கு அடியில் இருக்கும். இந்த ரயில் பாதையில், 180 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்.
இந்தியா, வங்கதேசம் இடையே டிசம்பரில் உச்சிமாநாடு
- இந்தியா-வங்கதேசம் இடையே உச்சிமாநாடு காணொளி வாயிலாக டிசம்பர் மாதம் நடைபெறும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டில்லியில் நடந்த உயர்மட்ட கண்காணிப்புக் குழுவின் ஆலோசனையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் வங்கதேச வெளியுறவு அமைச்சர் பங்கேற்றார். கூட்டத்தில் டிசம்பர் மாதம் இருநாட்டு பிரதமர்களும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தின் போது ஏற்றுமதியை அதிகரிக்க கட்டணத் தடைகளை வங்கதேசம் கோரிக்கை வைத்தது. இரு நாடுகளுக்கு ம் பொதுவான ஆறுகளில் இருந்து நதீநீர் பங்கீடு தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைகள் குறித்தும் பேசப்பட்டது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பு
- இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ( என்சிஆர்பி ) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 4,05,861 குற்றங்கள் பதிவாகி உள்ளன. ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இது 2018 ஆம் ஆண்டை விட ஏழு சதவீதத்திற்கும் மேலானது.
அதிநவீன பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
- பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் பெற்றது. ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில், மொபைல் லாஞ்சர் மூலம், இந்த சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது. டிஆர்டிஓவின் பிஜே-10 திட்டத்தின் கீழ் இந்த சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இந்த ஏவுகணையில் உள்ள ஏர் பிரேம் மற்றும் பூஸ்டர் ஆகியவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவையாகும்.
- இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள டிஆர்டிஓ தலைவர் சதீஷ்ரெட்டி, இந்த ஏவுகணையில், வருங்காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை சேர்ப்பதற்கு இன்று நடந்த சோதனை உதவும் எனக்கூறியுள்ளார்.
Post a Comment