முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரணம்
- இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017 வரை பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி (வயது 84). மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், பதவி ஓய்வுக்குப்பின் டெல்லியில் வசித்து வந்தார். இவர் கடந்த மாதம் 9-ந் தேதி தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது மூளையில் ரத்தம் உறைந்தது. எனவே மறுநாள் டெல்லி ஆர்.ஆர். ராணுவ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் 22 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த பிரணாப் முகர்ஜி 31.08.2020 அன்று மாலை 4.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக விளங்கிய பிரணாப் முகர்ஜி, மத்திய அரசில் முக்கிய துறைகளின் மந்திரி, மாநிலங்களவை தலைவர், திட்டக்குழு துணைத்தலைவர் என அரசின் உயர் பதவிகளை அலங்கரித்து உள்ளார். இறுதியாக கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை ஜனாதி பதியாகவும் பதவி வகித்தார்.
- இவரது உயரிய மக்கள் சேவையை பாராட்டி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கவுரவித்தது.
118 புதிய மருத்துவ ஊர்திகள் சேவை: முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- தமிழகமெங்கும் 90 ஆம்புலன்சுகள் உள்பட 118 புதிய மருத்துவ ஊர்திகளின் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பொதுமக்களுக்கு அவசர காலங்களில் உயிர்காப்பதில் சிறப்பாக சேவையாற்றி வரும் 108 அவசரகால ஊர்தி சேவையை மேலும் வலுப்படுத்துவதற்காக, நடப்பாண்டில் 500 புதிய அவசரகால ஊர்திகள் ரூ.125 கோடி செலவில் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
- இதனை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், 108 அவசரகால ஊர்தி சேவைக்காக உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 90 புதிய அவசரகால ஊர்திகள்; ரத்ததான முகாம்களில் சேகரிக்கப்படும் ரத்தத்தை, அரசு ரத்த வங்கிகளுக்கு எடுத்துச் சென்று சேமிக்கும் வகையில் 10 அரசு மருத்துவமனைகளில் உள்ள அரசு ரத்த வங்கிகளின் பயன்பாட்டிற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன 10 ரத்ததான ஊர்திகள், ஜி எண்டர்டெய்ன்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 45 அவசரகால ஊர்திகள் வழங்க இசைவளித்து, முதற்கட்டமாக வழங்கியுள்ள 18 அவசரகால ஊர்திகள் என மொத்தம் 118 ஊர்திகளின் சேவையை முதல்-அமைச்சர் 31.08.2020 அன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
- நாட்டிலேயே முதல் முறையாக 108 அவசரகால ஊர்தியின் பெண் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட எம்.வீரலட்சுமி, ஒரு ஊர்தியை இயக்கினார்.
தேவகோட்டை அருகே 17 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மதுரை கோயில் திருப்பணிக்கு கிராமத்தை தானமாக வழங்கப்பட்ட செய்தியை உள்ளடக்கிய 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டை தொல்லியலாளா்கள் கண்டெடுத்துள்ளனா். ஆய்வில், 4 அடி உயரமும், ஒன்றே கால் அடி அகலமும் கொண்ட கல்வெட்டின் மேல் பகுதியில் திரிசூலமும், அதன் இரு பக்கங்களிலும் சந்திரன், சூரியன் சின்னமும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழே 24 வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது.
- ஸ்வஸ்திஸ்ரீ என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கும் இக்கல்வெட்டு, சக ஆண்டு 1564 விய வருடம், பங்குனி மாதம் 14 ஆம் நாள் வெட்டப்பட்டுள்ளது. இதன் பொது ஆண்டை(பொது ஆண்டு என்பது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சக ஆண்டுடன் 78 ஆண்டுகளை கூட்டும் போது கிடைக்கக் கூடியது ஆகும்) கணக்கிடும் போது கி.பி.1642 ஆகும். அப்போது மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கா் மன்னருக்கு புண்ணியமாக கூத்தன் சேதுபதியின் மகன் தம்பி சேதுபதித் தேவா் மதுரை மீனாட்சி சொக்கநாதா் சன்னிதியில் மகாகோபுர திருப்பணிக்கு செளிகை பிள்ளைகுடி என்ற இக்கிராமத்தைத் தானமாக வழங்கியச் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
லடாக்கின் பாங்கோங் அருகே இந்திய - சீன படைகளுக்கு இடையே மீண்டும் மோதல்
- சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியான லடாக்கின் பாங்கோங் அருகே இந்திய - சீனப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய - சீனப் படைகளுக்கு இடையே கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக உருவான போர்ப் பதற்றம் கடந்த நூறு நாள்களில் பலகட்டப் பேச்சுவார்த்தைகளின் பயனாக ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.
நாட்டின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 7 சதவீதத்தை எட்டும்
- இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 7 சதவீதத்தை எட்டும் என பிரிக்ஒா்க் தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் வசூலும் நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் பெருமளவில் குறைந்து போயுள்ளது. அதிலும் குறிப்பாக, வருமான வரி (தனிநபா் வருமான வரி மற்றும் பெருநிறுவன வருமான வரி) வருவாய் 30.5 சதவீதம் குறைந்துள்ளது.
- அதேபோன்று, ஜிஎஸ்டி வசூலும் கிட்டத்தட்ட 34 சதவீதம் சரிந்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 7 சதவீதத்தை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
- பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது இரண்டு மடங்காக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என பிரிக்ஒா்க் தெரிவித்துள்ளது.
இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி: -23.9% ஜிடிபி
- இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருளாதார நிலைமை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்தியப் புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எதிர்மறையான போக்கில் -23.9 சதவிகிதத்துக்கு சரிந்துள்ளது. முதல் காலாண்டு தொடக்கத்தில் 3.1 சதவிகிதமாக இருந்த ஜிடிபி, கரோனா பொது முடக்கம் காரணமாக இந்தப் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5.2 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- 1996-இல் காலாண்டு ஜிடிபி விவரங்களை வெளியிடத் தொடங்கியதிலிருந்து, இதுதான் மிகவும் மோசமான வீழ்ச்சியாகும். மேலும் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களால் கணிக்கப்பட்டதைக் காட்டிலும் மோசமான சரிவாக இது அமைந்துள்ளது.
- ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் ரஷியாவின் பொருளாதாரம் -8.5 சதவிகிதத்துக்கு சரிந்துள்ளது. ஆனால், சீனா 3.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சீனாவில் கரோனா உச்சத்திலிருந்த ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் -6.8 சதவிகிதத்துக்கு சரிந்தது.
594 கி.மீ., நீள கங்கா அதிவிரைவு சாலை அமைக்கிறது உ.பி., அரசு
- உ.பி.,யில் 594 கி.மீ., நீளத்திற்கு கங்கா அதிவிரைவு சாலையை அம்மாநில அரசு அமைக்க உள்ளது. இச்சாலை பிரக்யாராஜில் இருந்து மீரட் வரை செல்லும். 2023ம் ஆண்டிற்குள் முடிவடைய உள்ள இத்திட்டத்திற்கு சர்வேதேச ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கங்கா அதிவிரைவு சாலை ஆறு வழிச்சாலையாகவும், தேவைப்பட்டால் எட்டு வழிச்சாலையாகவும் அமைய உள்ளது. இது மாநிலத்தின் மேற்கு பகுதியையும் கிழக்கு பகுதியையும் இணைக்கிறது. உ.பி., யில் புர்வான்சல், பந்தல்கான்ட், கோரக்பூர் அதிவிரைவு சாலைகளுக்கு அடுத்து நான்காவதாக கங்கா அதிவிரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளது. இது மீரட் அருகே சங்கர்பூர் கிராமத்திலிருந்து துவங்கி பிரயாக்ராஜ் மாவட்டத்தின் சோரன் அருகே முடிவடைகிறது.
- இதற்காக உ.பி., அரசு 37,350 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. 2019ம் ஆண்டு நடந்த கும்பமேளா விழாவின் போது மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கங்கா அதிவிரைவு சாலை திட்டத்தை அறவித்திருந்தார். இதை அவரது கனவுத் திட்டம் என குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி
- 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் சரிவைச் சந்திக்காத ஒரே துறையாக வேளாண் துறை ஜொலித்துள்ளது. 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதார வரலாற்றில் இல்லாத அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எதிர்மறையான போக்கில் -23.9 சதவிகிதத்துக்கு சரிந்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் இந்தப் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
கரோனா பாதித்த இந்தியாவின் முதல் பெண் இருதய நோய் நிபுணர் மறைவு
- கரோனாவால் பாதிக்கப்பட்ட 103 வயதான இந்தியாவின் முதல் பெண் இருதயநோய் நிபுணர் டாக்டர்.பத்மாவதி சிவராமகிருஷ்ணா 30.08.2020 அன்று உயிரிழந்தார். 1967 இல் பத்ம பூஷண் மற்றும் 1992 இல் பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் பெற்றவரான டாக்டர். பத்மாவதி சிவராமகிருஷ்ணா கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 11 நாட்களாக தில்லியில் உள்ள தேசிய இருதய நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை திடீரென மாரடைப்புக்குள்ளான அவர் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சுவாசித்து வந்தார். பின் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்தார்.
- இந்திய இருதயத்துறையின் தாய் என அழைக்கப்படும் பத்மாவதி சிவராமகிருஷ்ணா 1917ஆம் ஆண்டு தற்போதைய மியான்மரில் பிறந்தவர். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 1942ஆம் ஆண்டு இந்தியாவிற்கு குடியேறினார். ரங்கூனில் பட்டம் பெற்ற அவர் தனது உயர்படிப்புகளை வெளிநாடுகளில் பயின்றார். இந்தியா திரும்பியதும், தில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
- 1962 ஆம் ஆண்டில், டாக்டர்.பத்மாவதி அகில இந்திய இதய அறக்கட்டளையை நிறுவி, 1981 ஆம் ஆண்டில் தேசிய இதய நிறுவனத்தை நவீன இதய மருத்துவமனையாக அமைத்தார்.
'லெபனானில் ஆண்டு இறுதியில் பாதி மக்கள் பட்டினியில் கிடப்பார்கள்'
- 2020ஆம் ஆண்டின் இறுதியில் லெபனான் நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் உணவுப் பஞ்சத்தைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக ஐநா அவையின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் எச்சரித்துள்ளது.
- லெபனானில் உணவுப் பாதுகாப்பு” என்னும் தலைப்பின்கீழ் அறிக்கை வெளியிட்ட ஐநா, “லெபனானின் முக்கிய துறைமுகமான பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தால் உணவுதானிய இறக்குமதி தடைப்பட்டுள்ளது. பெரும்பாலும் உணவு தானியத் தேவையில் இறக்குமதியைச் சார்ந்துள்ள லெபனானுக்கு இது மோசமான செய்தியாகும்.” எனத் தெரிவித்துள்ளது.
- தானிய சேமிப்புகளை அதிக்கப்படுத்த வேண்டிய கட்டாயத்தை லெபனான் அரசு உணர வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது. லெபனானில் 2019 ஆம் ஆண்டில் 2.9% ஆக இருந்த பணவீக்கம் 2020 ஆம் ஆண்டில் 50%க்கும் மேல் இருக்கும் என்று ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
- கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருந்ததை விட சராசரி உணவு விலை 141% அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் ஏறத்தாழ 68.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
லெபனான் பிரதமராக முஸ்தஃபா ஆதிப் அறிவிப்பு
- லெபனானின் புதிய பிரதமராக ஜெர்மனிக்கான அந்த நாட்டுத் தூதர் முஸ்தஃபா ஆதிப் அறிவிக்கப்பட்டுள்ளார். பெய்ரூட்டில் ஆகஸ்ட் 4-ம் தேதி நிகழ்ந்த வெடிவிபத்து சம்பவத்தால், ஹசன் தியாப் தலைமையிலான அரசுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இந்த அழுத்தம் காரணமாக ஆகஸ்ட் 11-ம் தேதி ஹசன் தியாப் தலைமையிலான அரசு ராஜிநாமா செய்தது. இதைத் தொடர்ந்து, ஜெர்மனிக்கான லெபனான் தூதர் முஸ்தஃபா ஆதிப் தற்போது பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். 128 நாடாளுமன்ற வாக்குகளில் 90 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன செயற்கைகோள் தரவுகளை விலைக்கு வாங்கிய பாகிஸ்தான்
- காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நிலை கொண்டுள்ள இந்திய ராணுவ முகாம்கள் குறித்த துல்லியமான தகவல்களை பெறுவதற்கு, சீனாவின் ஜிலின் - 1 செயற்கை கோள் தரவுகளை பாகிஸ்தான் விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான ஜிலின் -1 செயற்கைக்கோள் தரவை வாங்க பாகிஸ்தான், சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
- சீனாவின் வர்த்தக ரீதியான ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளான ஜிலினை சாங் குவாங் சேட்டிலைட் டெக்னாலஜி நிறுவனம் இயக்கி வருகிறது. புவி வட்டப் பாதையில் சுற்றி வரும் ஜிலின் செயற்கைகோள், பத்து செயற்கைக்கோள்களின் நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறை பூமியின் எந்த இடத்தையும் இதன் மூலம் மீண்டும் கண்காணிக்க முடியும்.
- ஜிலின் செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் அளிக்கும் பஞ்ச்ரோமடிக் படம் மூலம் 0.72 மீட்டர் மற்றும் மல்டி ஸ்பெக்ட்ரல் படம் மூலம் 2.88 மீட்டர் அளவு வரை, துல்லியமாக இடத்தை அடையாளம் காண உதவும்.
Post a Comment