ரூ.55 ஆயிரம் கோடி மதிப்பில் இந்திய கடற்படைக்கு 6 புதிய நீர்மூழ்கி கப்பல்கள்
- ரூ.55 ஆயிரம் கோடி மதிப்பில், இந்திய கடற்படைக்கு 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டில் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. தற்போது இந்திய கடற்படை, 6 அணுசக்தி தாக்குதல் நீர் மூழ்கி கப்பல்கள் உள்பட 24 புதிய நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்திய கடற்படையிடம் 15 மரபு சார்ந்த நீர் மூழ்கி கப்பல்களும், 2 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. ஆனாலும் சீனாவுடன் ஒப்பிடுகையில் நம்மிடம் இடைவெளி நிலவுவதால், அதை ஈடுகட்ட இந்தியா விரும்புகிறது.
- இந்த நீர் மூழ்கி கப்பல் கட்டும் திட்டத்துக்காக ராணுவ அமைச்சகம், உள்நாட்டில் 2 கப்பல் கட்டும் நிறுவனங்களையும், 5 வெளிநாட்டு ராணுவ நிறுவனங்களையும் பட்டியலிட்டு வைத்துள்ளது. இது ‘மேக் இன் இந்தியா’ என்னும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் கூட்டு திட்டமாக நிறைவேற்றப்படும். எல் அண்ட் டி குழுமம் மற்றும் அரசு துறை நிறுவனமான மசாகான் டாக்ஸ் நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்கள்தான் இறுதி செய்து பட்டியலிடப்பட்டுள்ள இந்திய நிறுவனங்கள் ஆகும். வெளிநாட்டு நிறுவனங்கள் பட்டியலில் ஜெர்மனியின் தைசென்குரூப் மரைன் சிஸ்டம்ஸ், ஸ்பெயினின் நவந்தியா, பிரான்சின் நவல் குழுமம் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.
மனதின் குரல்’ நிகழ்ச்சியில் ராஜபாளையம் நாய் பற்றி புகழ்ந்த மோடி
- ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியபோது பிரதமர் மோடி இந்திய இன நாய்கள் பற்றி குறிப்பிட்டார். அவர் நமது ராஜபாளையம் நாய் பற்றி குறிப்பிட தவறவில்லை. இதையொட்டி கூறும்போது, “இந்திய இன நாய்கள் நல்லவை, திறமையானவை. அவற்றில், முடோல் ஹவுண்ட், இமாச்சலி ஹவுண்ட் சிறந்த வம்சாவளியை கொண்டவை. ராஜபாளையம், கண்ணி, சிப்பிபாறை, கொம்பை ஆகியவை அற்புதமான இந்திய இனங்கள். அவற்றை குறைந்த செலவில் வளர்க்கலாம். இந்திய சூழலுக்கு ஏற்றதாக இருக்கும். இப்போது நமது பாதுகாப்பு முகமைகளும் இந்த நாய்களை தங்கள் அணியின் ஒரு பகுதியாக சேர்க்கின்றன” என குறிப்பிட்டார். இதே போன்று இந்திய பொம்மைகள் பற்றி பேசியபோது, தஞ்சாவூர் பொம்மைகளையும் அவர் குறிப்பிட்டார். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் உலக பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.7 லட்சம் கோடிக்கும் மேல் வர்த்தகம் : உலகின் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியா மாற முடியும்
- உலகின் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியா மாற முடியும், அதற்கான திறமையும், திறனும் உள்ளது என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். சீனா மிகப்பெரிய தயாரிப்பாளராக, ஏற்றுமதியாளராக உள்ள உலக பொம்மை வர்த்தகத்தில், இந்தியாவின் பங்களிப்பை உயர்த்துவதை நோக்கமாக கொண்ட ஒரு கூட்டத்துக்கு சமீபத்தில் தலைமை ஏற்றேன். நமது நாட்டில் உள்ளூர் பொம்மைகளின் வளமான பாரம்பரியம் இருக்கிறது. நம் நாடு, நல்ல பொம்மைகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த பல திறமையான கைவினைஞர்களை கொண்டுள்ளது. நமது நாட்டின் பல பகுதிகள் பொம்மை மையங்களாக உருவாகி இருக்கின்றன.
- கர்நாடக மாநிலத்தில் ராமநகரம் சன்னபட்னா, ஆந்திராவில் கிருஷ்ணாவில் கோண்டபள்ளி, தமிழகத்தில் தஞ்சாவூர், அசாமில் துபாரி, உத்தரபிரதேசத்தில் வாரணாசி போன்ற பல இடங்கள் இப்படி உள்ளன. உலகளாவிய பொம்மை வர்த்தகத்தின் மதிப்பு ரூ.7 லட்சம் கோடிக்கும் மேல் என்பதை அறியும்போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் இதில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவு. இந்த நாட்டின் இளம் திறமையாளர்களை நான் அழைக்கிறேன். இந்தியாவில் விளையாட்டுகளை உருவாக்குங்கள். இந்தியாவை அடிப்படையாக கொண்ட விளையாட்டுகளை உருவாக்குங்கள். இந்த விளையாட்டு தொடங்கட்டும். உலக பொம்மைகள் மையமாக இந்தியா மாறும். அதற்கான திறனும், திறமையும் உள்ளது.
முன்னாள் தூதர் சங்கர்பாஜ்பாய் மரணம்
- கே.சங்கர் பாஜ்பாய் என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் 1928 மார்ச் 30 அன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பிறந்தார்.இவரது இயற்பெயர் காத்யாயனி ஷங்கர்பாஜ்பாய் அனை வராலும் சங்கர்பாஜ்பாய் என அறியப்படுகிறார். வெளியுறவுத்துறையின்கீழ் நீண்ட காலம் தூதராக பணியாற்றிய பெருமையுடையவர் சங்கர்பாஜ்பாய். அமெரிக்கா சீனா,பாகிஸ்தான் துருக்கி ஆகிய நாடுகளில் இந்தியாவுக்கான தூதராக பணியாற்றி உள்ளார். 1952 ம் ஆண்டின் சிவில் சர்வீஸ் பணியில் சேர்ந்தார்.இந்தியா-பாகிஸ்தான் இடையேயானே போரின் போது இளம் அதிகாரியாக பாகிஸ்தானில் பணிபுரிந்துவந்துள்ளார்.1966 ஆம் ஆண்டில், பாஜ்பாய் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப் கானுடன் உச்சிமாநாட்டிற்காக தாஷ்கண்டிற்கு சென்றார். முன்னாள் பிரதமர் ராஜிவ் கடந்த 1985 ம் ஆண்டில் அமெரிக்காவிற்கு சென்றிருந்த போது அமெரிக்காவிற்கான இந்திய தூதராக பணியாற்றி உள்ளார். 1986 ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றபின்னர் கல்வி சேவையில் களம் இறங்கினார். 2002 ம் ஆண்டில் தனது கல்விபயணத்தை முடித்து கொண்டார். தொடர்ந்து இந்தியாவில் 2008 முதல் 2010 ம் ஆண்டு வரையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவராக பணியாற்றி உள்ளார். 92 வயதான இவர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
பொருட்களில் நாட்டின் பெயர்; ஆசியானுக்கு இந்தியா வலியுறுத்தல்
- 'எந்தப் பொருளாக இருந்தாலும், அது எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்பட வேண்டும்' என, ஆசியான் அமைப்பின் கூட்டத்தில், இந்தியா வலியுறுத்தியுள்ளது. சீனப் பொருட்கள் குவிக்கப்படுவதை தடுக்க, இது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள, ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பு மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக அமைச்சர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்தது.
- இதில் பங்கேற்ற மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் பேசியதாவது: தாராள வர்த்தக ஒப்பந்தத்தை நாங்கள் மதிக்கிறோம். அதை நேரத்தில், சீனா தன் பொருட்களை இந்தியாவில் குவிப்பதை ஏற்க முடியாது. தரமற்ற, மிகவும் குறைந்த விலையுள்ள பொருட்கள் குவிக்கப்படுவதால், உள்நாட்டு உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்படுகிறது. அதையடுத்தே, எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பிட வேண்டும் என்பதை, நாங்கள் கட்டாயமாக்கி உள்ளோம். வேறு சில நாடுகள் வழியாகவும் தன் பொருட்களை சீனா குவித்து வருகிறது. அதனால், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற விதிமுறையை ஆசியான் நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும்.
- ஆசியான் மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில், சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இரு தரப்புக்கும் பலனளிப்பதாக இந்த ஒப்பந்தம் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
சீனாவின் எதிர்ப்பை மீறி தென் சீன கடலில் போர்க்கப்பலை நிறுத்தியுள்ள இந்தியா
- கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின், சீனாவின் எதிர்ப்பையும் மீறி, தென் சீன கடலில் இந்தியா போர்க்கப்பலை நிறுத்தி உள்ளது. சீனாவின் எதிர்ப்பையும் மீறி, தென் சீன கடலில், இந்தியா ஒரு போர்க்கப்பலை நிறுத்தி உள்ளது. மேலும் அந்தமான் நிகோபார் தீவுக்கு அருகிலுள்ள மலாக்கா நீரிணையிலும் இந்திய போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா தொடந்து கவனித்து வருகிறது. மிக் -29 ரக போர் விமானங்கள் முக்கிய விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதல் பயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். ரூ.1,245 கோடி மதிப்பில், ஆளில்லா வான்வழி கண்காணிப்பு வானகங்களை வாங்கி, 10 கடற்படை கப்பல்களில் நிலைநிறுத்தவும் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2 குழந்தைக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை: உ.பி., முதல்வர் அதிரடி
- உ.பி.,யில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதன் மீதான பேச்சுக்கள் சமீப நாட்களாக எழுந்துள்ளன. மக்கள் தொகை அதிகரிப்பால் உ.பி.,யின் சிறுபான்மையினர், பெரும்பான்மையினராகி வருவதாக அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி கருத்து கூறி இருந்தார். இதற்காக, அங்கு இவ்வருட இறுதியில் வரவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் சில முக்கிய மாற்றங்கள் செய்யத் திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, இரண்டு குழந்தைகளுக்கும் அதிகம் பெற்றவர்களை தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அம்மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி 18,000 கோடி டாலரை எட்டும்
- இந்தியாவின் மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 18,000 கோடி டாலரை (ரூ.13.50 லட்சம் கோடி) எட்டும் என மின்னணு மற்றும் கம்யூட்டா் சாப்ஃட்வோ் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஎஸ்சி) தெரிவித்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் அவற்றின் ஏற்றுமதி 16 மடங்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மின்னணு சாதனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு உரிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தும் பட்சத்தில், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் அவற்றின் ஏற்றுமதி 18,000 கோடி டாலரை எட்டும் நிலை ஏற்படும். மின்னணு பொருள்களின் ஏற்றுமதி தற்போதைய நிலையில் 1,100 கோடி டாலராக மட்டுமே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக கூற்றின்படி, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான மொபைல்போன் தயாரிப்புக்கான திட்டங்களையும், ரூ.40,000-ரூ.45,000 கோடி மதிப்பிலான உபகரண தயாரிப்புக்கான திட்டங்களையும் நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
அந்நியச் செலாவணி கையிருப்பு 53,754 கோடி டாலராக அதிகரிப்பு
- நடப்பாண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 229 கோடி டாலா் அதிகரித்து 53,754 கோடி டாலரை எட்டியுள்ளது. இதற்கு முந்தைய ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்த கையிருப்பானது 294 கோடி டாலா் குறைந்து 53,525 கோடி டாலராக (ரூ.40.18 லட்சம் கோடி) காணப்பட்டது. ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் செலாவணி கையிருப்பானது 362 கோடி டாலா் உயா்ந்து வரலாற்று சாதனை அளவாக 53,819 கோடி டாலரை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 262 கோடி டாலா் அதிகரித்து 49,417 கோடி டாலராக இருந்தது. அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு 33 கோடி டாலா் குறைந்து 3,726 கோடி டாலரானது. சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 20 லட்சம் டாலா் உயா்ந்து 148 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 60 லட்சம் டாலா் அதிகரித்து 463 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது.
செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா சாம்பியன்
- செஸ் ஒலிம்பியாட் தொடரின் 44வது சீசன் ஆன்லைனில் நடந்தது. 163 அணிகள் களமிறங்கின. இதன் பைனலில் இந்திய அணி, வலிமையான ரஷ்யாவை எதிர்கொண்டது. பைனல் இரண்டு சுற்றுக்களாக நடந்தது. ஒவ்வொரு சுற்றிலும் 6 போட்டிகள் நடந்தது. முதல் சுற்றில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளும் டிரா ஆக, 3.0-3.0 என சமன் ஆனது. அடுத்து இரண்டாவது சுற்று நடந்தது. இதில் ஆனந்த், ஹரிகா, விதித் தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். ஹம்பி, நிகால் சரின், திவ்யா தோல்வியடைய, இந்தியா 1.5-4.5 என்ற கணக்கில் வீழ்ந்தது. ஆனால் நிகால், திவ்யா விளையாடிய போது இணையதள தொடர்பில் சிக்கல் ஏற்பட, தோல்வியடைய நேரிட்டது என இந்தியா அப்பீல் செய்தது. இதுகுறித்து சர்வதேச செஸ் கூட்டமைப்பு (எப்.ஐ.டி.இ.,) விசாரித்தது. இதை எப்.ஐ.டி.இ., அமைப்பு ஏற்றுக் கொண்டது. முடிவில் சாம்பியன் கோப்பையை இந்தியா, ரஷ்யாவுக்கு பகிர்ந்து தருவதாக, எப்.ஐ.டி.இ., தலைவர் ஆர்கடி டிவோர்கோவிச் அறிவித்தார். இத்தொடரில் இந்திய அணி சாம்பியன் கோப்பை வென்றது இது தான் முதன் முறை. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய - ரஷ்ய அணியினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சின்சினாட்டி டென்னிசில் வெற்றி: நடாலின் சாதனையை சமன் செய்தார், ஜோகோவிச்
- சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீரர் செர்பியாவின் ஜோகோவிச் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் அதிக முறை மாஸ்டர்ஸ் கோப்பையை வென்ற ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலின் (35 முறை) சாதனையை 33 வயதான ஜோகோவிச் சமன் செய்தார். அத்துடன் ஆயிரம் புள்ளி வழங்கும் 9 வகையான மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் குறைந்தது 2 முறை மகுடம் சூடிய ஒரே வீரர் ஜோகோவிச் ஆவார்.
14 வது இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்புக் கொள்கை உரையாடல் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
- 14 வது இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்புக் கொள்கை உரையாடல் (DPD) இன்று காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த உரையாடலுக்குப் பாதுகாப்புச் செயலாளர் டாக்டர். அஜய் குமார் மற்றும் சிங்கப்பூர் நிரந்தரச் செயலாளர் (பாதுகாப்பு) திரு சான் ஹெங் கீ ஆகியோர் தலைமை தாங்கினர்.
- இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பல பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புக் கூட்டணியை மேலும் மேம்படுத்த இரு தரப்பினரும் உறுதியளித்தனர்.
- பாதுகாப்புக் கொள்கை உரையாடல்களின் முடிவில், இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) அமல்படுத்தும் ஏற்பாடும் கையெழுத்தானது.
Post a Comment