ஐ.நா. பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு: சீனாவை வீழ்த்தி வெற்றி பெற்றது
- ஐ.நா. சபையின் 6 முதன்மை உறுப்புகளில் ஒன்று ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணைய குழு. 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஆணைய குழுவின் நோக்கம் உலக பொருளாதாரம் மற்றும் சமூக பிரச்சினைகளை விவாதித்து, உறுப்பு நாடுகளுக்கும், ஐ.நா அமைப்பிலுள்ள முகமைகளுக்கும் ஒரு செயலாக்க திட்டத்தை வகுப்பது ஆகும். இந்த அமைப்பின், 2021-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட நிலையில், ஆசிய பசிபிக் மாநிலங்கள் பிரிவில் 2 இடங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதில் ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் போட்டியிட்டன.
- இதில், பெண்கள் நிலைமை ஆணையத்துக்கான தேர்தலில் ஐ.நா தூதர் அடீலா ராஸ் தலைமையிலான ஆப்கானிஸ்தான் 39 வாக்குகளை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக இந்தியா 38 வாக்குகளைப் பெற்றது. ஐ.நா. பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பினரான சீனாவுக்கு 27 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பெரும்பான்மைக்கு தேவையான 28 வாக்குகளைப் பெற தவறிய சீனா தோல்வியைத் தழுவியது.
இந்திய பகுதிகளை இணைத்து பாகிஸ்தான் வரைபடம்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்திலிருந்து இந்தியா வெளிநடப்பு
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு ரஷியா தலைமையில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இந்திய பிரதேசங்களை பாகிஸ்தானின் பகுதிகளாக காட்டும் கற்பனையான வரைபடத்தை பயன்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா இந்த கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தது. இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா: நிறைவேற்றம்
- நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, சட்டசபையில் 15.09.2020 அன்று ஒருமனதாக நிறைவேறியது. தமிழ்நாட்டில் 7,968 மேல்நிலைப்பள்ளிகளில், 3,054 பள்ளிகள், தமிழ்நாடு அரசின் சார்பில், நடத்தப்பட்டு வருகின்றன. இது 38.32 சதவீதமாகும். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பயிலும் 8 லட்சத்து 41 ஆயிரத்து 251 மாணவர்களில், 3 லட்சத்து 44 ஆயிரத்து 485 மாணவர்கள் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். இது 41 சதவீதமாகும்.
- தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 5,550 மொத்த மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களில் 0.15 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் கிடைக்கின்றன.
- எனவேதான், தமிழ்நாடு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு அவசியமாகிறது. மருத்துவ கல்வியிடங்களில் இந்த 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதால், சுமார் 300-க்கு மேல் இடங்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைத்து, அதன் மூலம் சமநீதி வழங்க வழிவகுக்கும்.
கொரோனா நோய் பற்றி பொது ஊடகங்களில் தவறான தகவல் பரப்ப தடை: சட்டசபையில் மசோதா நிறைவேறியது
- கொரோனா நோய் பற்றி பொது ஊடகங்களில் தவறான தகவல் பரப்ப தடை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேறியது. பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்ட (கொரோனா போன்ற) நோய்கள், நோய் கட்டுப்பாடு, தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் பரப்பப்படுவதை உறுதி செய்வதுடன், பொது ஊடகங்களில் தவறான தகவல் பரவுவது தடை செய்யப்படுகிறது. தொற்று நோய்களின் தடுப்பு, சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள பணியாளருக்கு எதிராக எந்தவொரு நபரும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் கூடாது. அப்படி வன்முறையில் ஈடுபட்டால், அது குற்றமாக கருதப்பட்டு, மூன்று மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை நீடிக்கக் கூடிய சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வுகாண முதல்-அமைச்சரின் உதவி மையம்
- பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வுகாண முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட உள்ளதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் பணியில் இருந்த வீரர்கள் 4,132 பேர் பலி
- மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் பணியில் இருக்கும் போது 4,132 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 1,597 பேர், எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 725 பேர், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 671 பேர், இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையைச் சேர்ந்த 429 பேர், அசாம் ரைபில்ஸ் படையைச் சேர்ந்த 329 பேர் மற்றும் சாஸ்திர சீமா பால் படைடைச் சேர்ந்த 381 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார்.
பிகாரில் ரூ.541 கோடி மதிப்பிலான 7 திட்டங்கள்: அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
- பிகாரில் ரூ.541 கோடி மதிப்பிலான 7 உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு பிரதமர் மோடி 15.09.2020 அன்று அடிக்கல் நாட்டினார். விடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். குடிநீர் விநியோகம் தொடர்பான 4 திட்டங்களும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்பான 2 திட்டங்களும், நதிநீர் மேம்பாடு தொடர்பான ஒரு திட்டத்திற்உம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மாநிலத்தில் 20 க்கும் மேற்பட்ட நகரங்கள் கங்கைக்கு அருகே அமைந்திருப்பதைக் குறிப்பிட்டு, கங்கை நதியை சுத்தமாக வைத்திருக்க மாநிலத்தில் ரூ .6,000 கோடி மதிப்பிலான 50க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் மோடி தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9 சதவீதம் சரியும்: ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு
- நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 4 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கடந்த ஜூன் மாதம் கணித்து இருந்தது. இந்நிலையில், 9 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று நேற்று கணித்தது. கொரோனா தாக்கம் காரணமாக, தனிநபர்கள் செலவிடுவது குறைந்ததால், பொருளாதார வளர்ச்சி விகிதமும் குறையும் என்று அவ்வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் யாசுயுகி சவடா தெரிவித்தார். அதே சமயத்தில், வர்த்தக நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளதால், அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி அடையும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.
கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா
- சீனாவின் ஜிலின் மாகாணம் சாங்சுன் நகரில் மஞ்சள் கடல் பகுதியில் சீனா தனது 2-வது கடல் ஏவுதளத்தை அமைத்துள்ளது. 15.09.2020 அன்று இந்த ஏவுதளத்தில் உள்ள ஒரு கப்பலில் இருந்து ராக்கெட் ஒன்றை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் 9 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.லாங் மார்ச் 11 கேரியர் ராக்கெட், 3 வீடியோ செயற்கைகோள்கள், 6 புஷ்புரூம் செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. தலா 42 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள்கள் வேளாண்மை, வனவியல் நில வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொலைநிலை உணர்திறன் சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த 6 செயற்கைகோள்களும் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை
- வர்த்தக போர், தென் சீன கடல் விவகாரம், கொரோனா வைரஸ் தற்போது டிக் டாக் செயலி என அமெரிக்கா- சீனா இடையிலான மோதல் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.இந்த சூழலில் சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுபான்மையினராக இருக்கும் உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீனா அரசு வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுவர்கள், பெண்கள் உள்பட சிறுபான்மை மக்களை கட்டாய தொழிலாளர்களாக பயன்படுத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. எனவே ஜின்ஜியாங் பிராந்தியத்தில் கட்டாய தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பருத்தி, தக்காளி, கம்ப்யூட்டர் உபகரணங்கள் உள்ளிட்ட 5 சீன பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்தியாவில் அதிகரித்த புயல்களின் எண்ணிக்கை: மத்திய அரசு தகவல்
- இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடு முழுவதும் 5 அதிதீவிர புயல்கள் ஏற்பட்டதாக மத்திய புவியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது வழக்கமான சராசரி அளவைக் காட்டிலும் அதிகம். 1891 முதல் 2017 வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஆண்டுக்கு சராசரியாக வங்காள விரிகுடாவில் 4 புயல்களும் மற்றும் அரபிக்கடலில் ஒரு புயலும் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- அரபிக் கடலில் வருடத்திற்கு சராசரியாக ஒரு புயல் ஏற்படும் எனும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் 5 புயல்கள் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இவை தீவிரமான புயல்களாக இருந்ததாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அரசுத் தரப்பு தகவலின்படி அரபிக் கடலில் அதிதீவிரமான அளவில் 2017ஆம் ஆண்டு ஒரு புயலும், 2018ஆம் ஆண்டு 3 புயல்களும்,2019ஆம் ஆண்டில் 5 புயல்களும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் வங்காள விரிகுடாவில் அதிதீவிரமான அளவில் 2017ஆம் ஆண்டில் 2 புயல்களும், 2018ஆம் ஆண்டில் 4 புயல்களும்,2019ஆம் ஆண்டில் 3 புயல்களும் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 6 மாதத்தில் 413 நிலநடுக்கங்கள்
- புவியியல் அமைச்சகம் மாநிலங்கவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இந்தியாவில் கடந்த மார்ச் 1 முதல் செப்டம்பர் 8 வரை நாடு முழுவதும் 413 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. அதில், 135 நிலநடுக்கங்கள் 3.0 ரிக்டர் அளவிற்கு குறைவாகவும், 153 நிலநடுக்கங்கள் 3.0 முதல் 3.9 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளது.
- மேலும், 114 நிலநடுக்கங்கள் 4.0 முதல் 4.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது, இதில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. 11 நிலநடுக்கங்கள் மட்டுமே 5.0 முதல் 5.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதில் பழைய கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
முகலாய அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜி பெயர்: உ.பி. முதல்வர் அறிவிப்பு
- .உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கட்டப்பட்டு வரும் முகலாய அருங்காட்சியகத்திற்கு மராட்டிய மன்னர் சிவாஜியின் பெயர் சூட்டப்படும் என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் முகலாயக் கலைப்பொருள்களை காட்சிப்படுத்த முகலாய அருங்காட்சியகம் அமைக்கும் பணி 2016ஆம் ஆண்டு தொடங்கியது. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு அறிவித்த இந்தத் திட்டம் 2017ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கட்ட நிலையில் கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே டிரம்ப் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து
- பல ஆண்டுகளாக நீடித்து வந்த இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில், இஸ்ரேல், பக்ரைன், யு.ஏ.இ. நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானதாக தவகல் வெளியாகியுள்ளன. இஸ்ரேலை தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, ஜோர்டான், லெபனான், ஈராக் , சிரியா, மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் கடந்த 1979-ல் எகிப்தும், 1994-ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் திடீரென அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன. தற்போது வளைகுடா நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு யு.ஏ.இ.
- வெள்ளை மாளிகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகூ, யு.ஏ.இ. வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் ஜியாத் நெஹ்யான், பக்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல் லத்தீப் ஜியானி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தியாவில் வாழ, வேலைசெய்ய சிறந்த நகரங்களில் ஐதராபாத் முதலிடம்
- இந்தியாவில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் சிறந்த நகரங்களின் பட்டியலில் ஐதராபாத் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஐதராபாத் முக்கியமான ஒன்றாகும். இது உலகளாவிய தரவரிசை அல்லது தேசிய கணக்கெடுப்பாக இருந்தாலும், ஐதராபாத் ( Hyderabad ) சரியான இடத்தில் இருப்பது ஒரு பழக்கமாகி வருகிறது. இலக்கு கண்டுபிடிப்பு வலை தளமான Holidify.com. ( destination discovery website ) சமீபத்தில் இந்தியாவில் ஆய்வு (Survey ) ஒன்றினை நடத்தியது. அதன் படி, 'இந்தியாவில் வாழவும் வேலை செய்யவும் சிறந்த 34 நகரங்களில்' முத்து நகரம் / ஐதராபாத் இப்போது முதலிடத்தில் உள்ளது.
எம்.பி.,க்கள் சம்பள குறைப்பு மசோதா:லோக்சபாவில் நிறைவேற்றம்
- கொரோனா நெருக்கடி காலத்தில் ஏற்படும் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய, எம்.பி.,க்களின் சம்பளத்தில் அடுத்த ஒரு ஆண்டிற்கு, 30 சதவீதம் பிடித்தம் செய்து வழங்குவதற்கான மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது.
2016-2020 வரையில் ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு சீனா முதலீடு
- கடந்த 2016ம் ஆண்டு ஏப்.., முதல் 2020 மார்ச் வரையிலான கால கட்டங்களில் சுமார் 1,600 க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் நேரடி முதலீடுகளை பெற்றுள்ளன. சீனாவிலிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுள்ளன. குறிப்பாக ஆட்டோமொபைல் தொழில், புத்தகங்களை அச்சிடுதல் (லித்தோ பிரிண்டிங் தொழில்), எலக்ட்ரானிக்ஸ், மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட 46 துறைகளில் சீனாவிலிருந்து தலா 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நேரடி முதலீட்டை பெற்றன. இவற்றில் சீனாவிடம் இருந்து அதிகபட்சமாக ஆட்டோமொபைல் தொழிலில் அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ.7,167 கோடி செலவு
- தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பு, சிகிச்சை, நிவாரணப் பணிகளுக்கு என ஒட்டுமொத்தமாக ரூ.7,167.97 கோடி செலவிடப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதில், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.830.60 கோடியும், மருத்துவக் கட்டுமானப் பணிக்கு ரூ.147.10 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் இலவச பொருள்கள் வழங்க ரூ.4,896.05 கோடியும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு ரூ.262.25 கோடியும் இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
Post a Comment