‛காலநிலை மாற்றம் மிகவும் ஆபத்தானது': பியூஷ் கோயல்
- காலநிலை மாற்றம் குறித்த அச்சுறுத்தல் உண்மையானது மற்றும் ஆபத்தானது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரித்துள்ளார். இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில், தன்னம்பிக்கை இந்தியாவுக்கான பொருளாதாரம் குறித்த உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இந்த மாநாட்டில் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: கார்பன் உமிழ்வு இல்லாத உலகத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். கார்பன் உமிழ்வை பொறுத்தவரை நாம் நிகர பூஜ்ஜியமாக இருக்கும் உலகத்தை நோக்கி செல்ல வேண்டும்.
வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்களில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு
- வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு ஆண்டில், கடந்த ஏப்ரல் வரையிலான காலத்தில், கிட்டத்தட்ட, 4,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை பெற்றுள்ளன. இது குறித்து, இ.ஒய்., நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு ஆண்டில் ஏப்ரல் வரையிலான காலத்தில், 532 மில்லியன் டாலர் அதாவது, 3,937 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளன.
- வரும், 2025ல், 24 பில்லியன் டாலர் அதாவது, 1.78 லட்சம் கோடி ரூபாய் சந்தையாக வளர்ச்சி பெறும்.இந்தியாவில் விவசாயத் துறையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன.
ரஃபேல் போர் விமான இணைப்பு விழா
- 2016-இல் ஃபிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் ரூ 59,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. அதன்படி, முதல்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் கடந்த ஜூலை 29-இல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில், இந்த விமானங்களை இந்திய விமானப் படையில் முறைப்படி சேர்ப்பதற்கான இணைப்பு விழா ஹரியாணா மாநிலம் அம்பாலா விமான தளத்தில் 10.09.2020 அன்று நடைபெற்றது.
- இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஃபிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லியும், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்கின்றனர். இணைப்பு விழாவுக்குப் பிறகு ரஃபேர் போர் விமானங்கள் முறைப்படி இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும்.
அயோத்தி விமான நிலையத்துக்கு ராமர் பெயர் வைக்க முடிவு
- அயோத்தியில் அமைய உள்ள விமான நிலையத்துக்கு, கடவுள் ராமர் பெயர் வைக்கவும், சர்வதேச அந்தஸ்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டியவுடன், பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும். அதனால், விமான நிலையம் அமைக்கும் பணிகளை, அடுத்த ஆண்டுக்குள் முடிக்க கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு, கடவுள் ராமர் பெயரை வைக்கவும், அதற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, மாநில அரசு, விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விரைவில் சமர்பிக்கும்.
பிரான்ஸ் அமைச்சர் இந்தியா வருகை: இரு நாட்டு உறவை வலுப்படுத்த பேச்சு
- 'பிரான்ஸ் ராணுவ அமைச்சர், ப்ளாரன்ஸ் பார்லியின் இந்திய வருகை, இரு நாட்டுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பை, மேலும் வலுவடைய செய்யும்' என, அந்நாட்டு துாதரகம் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளில், பிரான்சின் முதன்மை கூட்டாளியாக, இந்தியா எப்போதும் திகழ்கிறது. பிரான்ஸ் ராணுவ அமைச்சர், ப்ளாரன்ஸ் பார்லியின் இந்திய வருகையின் போது, இந்தோ -- பசிபிக் கடல் பகுதி பாதுகாப்பு உறவு, பயங்கரவாதத்துக்கு எதிராக, கூட்டாக இணைந்து செயல்படுவது, ஒட்டுமொத்த ராணுவ உறவை, வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, இருநாட்டு ராணுவ அமைச்சர்களும் பேச உள்ளனர். மேலும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இருநாடுகளுக்கும் இடையிலான, தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்துவது, இரு நாட்டு வீரர்கள் இணைந்து போர் பயிற்சி மேற்கொள்வது, கொரோனாவை கூட்டாக எதிர்கொள்ளும் திறன் ஆகியவை குறித்தும், விரிவாக விவாதிக்கப்படும்.
குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவில் குறைந்துள்ளது: 'யுனிசெப்'
- இந்தியாவில் 1990ம் ஆண்டுடன் ஒப்பிடும் நிலையில் குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என 'யுனிசெப்' அமைப்பு கூறியுள்ளது. உலகில் குழந்தைகள் இறப்பு நிலை குறித்து 'யுனிசெப்' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பு, பிரசவ சிக்கல்கள், பச்சிளம் குழந்தைகளை தாக்கும் நிமோனியா, மலேரியா, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவற்றை தடுக்க தடுப்பூசிகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் 30 ஆண்டுகளாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் உலக அளவில் 1990ம் ஆண்டு 1.25 கோடியாக இருந்த ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 2019ல் 52 லட்சமாக குறைந்துள்ளது.
- இவர்களில் 49 சதவீதம் பேர் நைஜீரியா, இந்தியா, பாகிஸ்தான், காங்கோ மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள். நைஜீரியாவும் இந்தியாவும் இணைந்து மூன்றில் ஒரு பங்கு இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 1990ல் 34 லட்சமாக இருந்தது. இது 2019ல் 8.24 லட்சமாக குறைந்துள்ளது. அதேபோல 1990ல் இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 89 பேர் இறந்தனர். கடந்த ஆண்டு அவர்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது. கடந்த 1990ல் 5 முதல் 14 வயதுக்குள்ளான குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 4.47 லட்சமாக இருந்தது. இது கடந்த ஆண்டு 1.36 லட்சமாக மாறியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் இருந்து டில்லி வரையான முதல் கிசான் ரயில் இயக்கம்
- தென்னிந்தியாவின் அனந்தபூர் நகரில் இருந்து டில்லிக்கு முதல் கிசான் சிறப்பு ரயில் இந்திய ரயில்வேயால் இயக்கப்பட்டது. தென்னிந்தியாவில் அனந்தபூர் முதல் புது டில்லி வரையான முதல் கிசான் ரயிலை இந்திய ரயில்வே (Indian Railways) செப்டம்பர் 09, 2020 அன்று இயக்கியுள்ளது. இந்த ரயில் நாட்டில் இரண்டாவது மற்றும் தென்னிந்தியாவின் முதல் கிசான் ரயில் ஆகும். இது அனந்தபூர் நகரத்தில் இருந்து 322 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை டில்லியில் உள்ள ஆதர்ஷ் நகருக்கு எடுத்துச் சென்றது.
- மேலும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தோட்டக்கலை மற்றும் விவசாய விளைபொருட்களை விமானங்கள் மூலம் அனுப்பும் 'கிசான் உதான்' விரைவில் தொடங்கும். உள்கட்டமைப்பில் 1 லட்சம் கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தியாவில் முதல் 'கிசான் ரயில்' ரயில் மகாராஷ்டிராவின் தியோலியில் இருந்து பீகார் தானாபூர் வரை இயக்கப்பட்டது என தெரிவித்தார்.
- கூடுதல் தகவல்: புதிய சந்தைகளுக்கு விலை பொருட்களை இந்த ரயில்களால் கொண்டு செல்வதன் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது. சாலையுடன் ஒப்பிடும்போது, கிசான் ரயில் வழியாக பொருட்களை அனுப்பும்போது இழப்பு குறைவாக இருக்கும். ரயிலில் பொருட்கள் மிகவும் கவனமாக வைக்கப்படுகின்றன. சாலையிலிருந்து பொருட்களை அனுப்புவதோடு ஒப்பிடுகையில், இந்த ரயில் மூலம் பொருட்களை அனுப்புவதில் குறைந்த கட்டணத்தில் பொருட்கள் விரைவாக வந்து சேரும்.
இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை
- பெங்களூருவில் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கர்நாடக முதல்வர் எடியூரப்பா தொடங்கி வைத்தார். நாட்டிலேயே முதல் முறையாக தனியார் துறையில் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா பெங்களூரு ஜக்கூர் விமான நிலையத்தில் நடைபெற்றது.
- நெருக்கடியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையை வழங்குவது மிக முக்கியமானது. இந்த ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அவசர நேரத்தில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்க உதவும். ஹெலிகாப்டரிலேயே சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளும் இருக்கின்றன.
Post a Comment