இந்திய டாக்டருக்கு சீனாவில் வெண்கல சிலை திறப்பு
- சீனாவில் தன்னலம் கருதாமல் சேவையில் ஈடுபட்ட இந்திய டாக்டர் துவாராகாந்த் சாந்தாராம் கோட்னிஸ் என்பவருக்கு வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது. கடந்த 1938 ம் ஆண்டு சீனா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே போர் மூண்ட போது இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் சீன ராணுவத்தினருக்கு உதவ மருத்துவர் குழு ஒன்று இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அக்குழுவில் இடம் பெற்றவர் தான் துவாரகாந்த் சாந்தாராம் கோட்னிஸ். மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கோட்னிஸ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். மும்பையில் மருத்துவம் பயின்ற இவர் சீனாவுக்கு மருத்துவ குழுவுடன் 29ம் வயதில் சென்றார்.
- சீனப் பெண் ஹோ ஜிங்லானை திருமணம் செய்து கொண்டு சீன மக்களுக்காகவே தொண்டாற்றினார். 1939ம் ஆண்டு சீனாவை உருவாக்கிய மசேதுங் தலைமையிலான 8 வது படைப்பிரிவில் இணைந்தார். தொடர்ச்சியான பணிச்சுமையால், 1942ம் ஆண்டு தனது 32வது வயதில் காலமானார். துவராகாந்தின் மறைவு சீனாவை தோற்றுவித்த மாசேதுவுங்குவுக்கு பெரும் சோகத்தை கொடுத்தது. 'சீனா ராணுவம் முக்கியமான உதவும் கரத்தை இழந்து விட்டது. ஒரு நல்ல நட்பை சீன நாடு இழந்து விட்டது' என்று மாசேதுங் அச்சமயத்தில் வேதனை தெரிவித்தார்.
- டாக்டர் துவாரகாந்த் சாந்தாராம் கோட்னிஸின் சேவையை பாராட்டி, சீனாவின் ஹேபே மாகாணத்தில் அவர் பணிபுரிந்த நகரமான ஷிஜாசூவாங்கிலுள்ள மருத்துவ கல்லூரிக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கல்லூரிக்கு முன் டாக்டர் துவாராகந்தின் சிலை வரும் செப்., மாதம் திறக்கப்பட உள்ளது. இனிமேல் இக்கல்லூரியில் சேரும் முதல் வருட மாணவர்கள் டாக்டர் சிலை முன்பாக நின்று உறுதிமொழி எடுப்பார்கள் என சீன அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவுக்கான தன்னலமில்லா பங்களிப்பை தந்த முதல் 10 வெளிநாட்டவர்கள் வரிசையில் மருத்துவர் கோட்னிஸும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகானின் பெயரில் சாலை: உத்தரப்பிரதேச அரசு அறிவிப்பு
- மறைந்த முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகானை நினைவுகூறும் விதமாக அவரின் பெயர் சாலைக்குச் சூட்டப்படும் என உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா 28.08.2020 அன்று அறிவித்தார். கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான சேத்தன் சவுகான் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில் சேத்தன் சவுகானை நினைவுகூறும் வகையில் உத்தரப்பிரதேச சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருந்த சேத்தன் சவுகான் 1969ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமானார். உத்தரப்பிரதேசத்தின் சிவில் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் சவுகான் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய விளையாட்டு விருதுகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை அதிகரிப்பு
- தேசிய விளையாட்டு விருதுகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். தற்போதைய பரிசுத்தொகை 2008-ல் உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சம் ஒவ்வொரு 10 வருடங்களுக்காவது இது உயர்த்தப்பட வேண்டும். சர்வதேச அரங்கில் இந்திய வீரர்களின் திறமைகள் முன்பை விடவும் அதிகமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பரிசுத்தொகை விவரம்
- ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: ரூ. 25 லட்சம் (முன்பு ரூ. 7.5 லட்சம்)
- அர்ஜூனா விருது: ரூ. 15 லட்சம் (முன்பு ரூ. 5 லட்சம்)
- துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் சாதனை): ரூ. 15 லட்சம் (முன்பு ரூ. 5 லட்சம்)
- துரோணாச்சார்யா விருது: ரூ. 10 லட்சம் (முன்பு ரூ. 5 லட்சம்)
சிவகாசி அருகே 1600 ஆண்டுகள் பழமையான குடவரைக் கோயில்
- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான குடவரைக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கோயிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். சிவகாசி ஊராட்சி ஒன்றியம் கார்குறிச்சி ஊராட்சியைச் சேர்ந்த சொக்கலிங்கா புரத்தில் ஆறு நதிக்கரை பகுதியில் இந்த குடைவரைக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் வட்டாட்சியர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சிவகாசி அருகே சொக்கலிங்கா புரத்தில் உள்ள இந்த குடைவரைக் கோயில் சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம். திருச்செந்தூரில் உள்ள வள்ளி குகை பஞ்சலிங்கம் பெருமாள் கோயில் புகை மணல் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கோயில் முற்றிலும் சுண்ணாம்புக் கற்களால் ஆற்றங்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது வியப்பானது ஆகும்.
- இந்த கோயிலில் இரண்டு பிரகாரங்கள் இருப்பது அபூர்வமான ஒன்றாகும். இக்கோயிலில் தொல்லியல் துறை பார்வைக்கு இதுவரை படாதது ஆச்சரியம்தான் மிகவும் அரிதான கட்டுமானம். இதில் உள்ள சுரங்கப்பாதை கருவறையைச் சுற்றி வருவதாக உள்ளது. மிகவும் அரிதானதாகும் இதுபோன்ற வடிவமைப்பு மதுரை கூடல்நகர் பெருமாள் கோயிலில் உள்ளது. இந்தக் கோயிலில் சிலைகள் எதுவும் இல்லை, கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை எனினும் இந்த கோவில் சுமார் 1,700 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அதாவது கிபி எட்டாம் நூற்றாண்டில் பொற்கால மன்னர் கால பாண்டிய மன்னர் காலத்தில் இக்கோயில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்டில் 25% கூடுதல் மழை
- நாட்டில் கடந்த 33 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பருவ மழை 25% கூடுதலாக பெய்ததால் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்த மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழையைவிட 25% கூடுதலாக பெய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 1983-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பருவமழையானது 23.8% கூடுதலாக பெய்ததே இதுவரை அதிகபட்ச மழையளவாக இருந்த நிலையில், அந்த வரலாறு தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதற்கு முன்பு, 1976-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பருவமழையானது 28.4% கூடுதலாக பெய்துள்ளது. அதுபோலவே கடந்த ஜூன் மாதத்தில் 17% கூடுதல் மழையும், ஜூலை மாதத்தில் 10% கூடுதல் மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விடைகொடுக்கும் பழமையான போர்க்கப்பல்: ஐ.என்.எஸ்., விராட்
- உலகின் பழமையான விமானம் தாங்கி போர்க்கப்பலான, ஐ.என்.எஸ்., விராட், குஜராத்தின் அலாங்க் பகுதியில் உடைக்கப்படவுள்ளது. 30 ஆண்டுகளாக சேவையில் இருந்த இந்த கப்பல், 2017ல், கடற்படையில் இருந்து நீக்கப்பட்டது. பின், இந்தக் கப்பலை அருங்காட்சியகமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சி தோல்வி அடைந்ததால், கடந்த ஆண்டு, ஐ.என்.எஸ்., விராட்டை உடைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, கப்பலை உடைப்பதற்கு, 'மெட்டல் ஸ்கிராப் டிரேட் கார்ப்பரேஷன் லிமிடெட்' ஏலம் விட்டது. இந்த ஏலத்தை, 38.54 கோடி ரூபாய்க்கு, ஸ்ரீ ராம் குழுமம் எடுத்தது.இந்நிலையில், குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள அலாங் கப்பல் உடைக்கும் தளத்தில், அந்த கப்பலை உடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்
- ஐ.என்.எஸ்., விராட் விமானம் தாங்கி போர்க்கப்பல், இந்திய கடற்படையில், கம்பீரமாக வலம் வந்தது. 2.78 கோடி கிலோ எடையிலான இந்த கப்பல், 226.5 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த போர்க்கப்பல், எச்.எம்.எஸ்., ஹெர்மஸ் என்ற பெயருடன், பிரிட்டன் கடற்படையில், 1959 முதல், 1984 வரை சேவை புரிந்தது. 1982ல், அர்ஜென்டினாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று, இந்த கப்பல் பாராட்டுகளைப் பெற்றது. இதையடுத்து, 1987ல், 475 கோடி ரூபாய்க்கு, இந்த போர்க்கப்பலை வாங்கிய இந்திய அரசு, அதே ஆண்டு, தன் கடற்படையில் இணைத்துக்கொண்டது. அதற்கு, ஐ.என்.எஸ்., விராட் என பெயரும் சூட்டப்பட்டது.
கின்னஸில் இடம் பிடித்த உலகின் மிக வயதான காதல் தம்பதி
- ஈக்வடாரில் உலகின் வயதான தம்பதி குயிட்டோ: தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் வசித்து வரும், ஜூலியோ சீசர் மோரா, 110, மற்றும் வால்ட்ராமினா குயிண்டேரோ, 104, தம்பதியினர், உலகின் வயதான தம்பதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்கள், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த தம்பதியினர், 1941ல், காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஜூலியோ காதல் திருமணத்திற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் கிடைக்க வில்லை. இருப்பினும் அவர்கள் அனைவரையும் உதறி தள்ளிவிட்டு குயிண்டரோவை கரம்பிடித்தார். 79 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வரும் இந்த காதல் தம்பதிக்கு 4 மகன்/மகள்களும், 11 பேரன்களும், 25 கொள்ளு பேரன்களும், 1 பேரன் வயிற்று பேரனும் உள்ளனர். இவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவை கூட விவாகரத்து பற்றி சிந்தித்ததில்லை என்று கூறுகின்றனர்.
ரஷ்யாவில் போர் பயிற்சி: சீனா, பாக்கிஸ்தான் பங்கேற்பால் இந்தியா விலகல்
- ரஷ்யாவில் நடைபெற உள்ள போர் பயிற்சியில் சீனா, பாக்கிஸ்தான் பங்கேற்பதால் அந்நிகழ்ச்சியில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது. ரஷ்யா நாட்டின் தெற்கு பகுதியை சேர்ந்த அஸ்ட்ராகான் பிராந்தியத்தில் பல நாடுகள் பங்கேற்கும் காவ்காஸ் 2020 என்ற போர் பயிற்சி நடைபெற உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை சேர்ந்த மற்றும் மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்த குறைந்தது 19 நாடுகளை சேர்ந்த13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர். கடந்த 2001 ம் ஆண்டில் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் முயற்சியால் இந்த போர் பயிற்சி உருவாக்கப்பட்டது.வரும் 15 ம் தேதி முதல் 20 ம் தேதி வரையில் போர் பயிற்சி நடைபெற உள்ளது.
- இந்த போர்பயிற்சியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வகையில் சுமார் 200 ராணுவ வீரர்கள் மற்றும் துருப்புகளை அனுப்பி வைப்பது என பாது காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் , ராணுவ ஊழியர்களின் தலைவர் பிபின்ராவத், ராணுவதளபதி எம்.எம்.நாரவனே ஆகியோர்கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் முடிவு செய்யப்பட்டிருந்தது. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக , போர் பயிற்சியில் பங்கேற்பதில் இருந்து இந்தியா விலக முடிவு செய்துள்ளது என ரஷ்யாவுக்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாக கூறினார்.மேலும்சீனா, பாக்., இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சிக்கலும் பயிற்சி விலகலுக்கு முக்கிய காரணம் என கூறினார்.
ஷாங்காய்ஒத்துழைப்புஅமைப்பு நாடுகளின் கூட்டம் / வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம்
- ரஷ்யாவில் அடுத்த வாரத்தில் ஷாங்காய்ஒத்துழைப்புஅமைப்பு நாடுகளின் கூட்டம் நடைபெற உள்ளது.இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொள்கிறார். அதே போல் சீனாவும் கூட்டத்தில் பங்கேற்கிறது. இருப்பினும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து கொள்ள வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.மேலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் வரும் 10 ம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ளது.இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கலந்து கொள்கிறார்.
Post a Comment