ரெயில்வே, வங்கி உள்ளிட்ட மத்திய அரசு வேலைகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்ய புதிய அமைப்பு
- ரெயில்வே, வங்கி உள்ளிட்ட மத்திய அரசு வேலைகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய புதிய அமைப்புக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த தகுதி தேர்வு நடத்துவதற்காக, தேசிய பணியாளர் தேர்வு முகமை (என்.ஆர்.ஏ.) அமைக்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், தேசிய பணியாளர் தேர்வு முகமையை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசின் குரூப் பி, குரூப் சி (தொழில்நுட்பம் சாராதது) பணியிடங்களுக்கு தேசிய பணியாளர் தேர்வு முகமை, பொது தகுதி தேர்வை நடத்தும்.
- இதில் பெறும் மதிப்பெண்களை, தற்போதைக்கு ரெயில்வே, வங்கி உள்ளிட்ட 3 பெரிய தேர்வாணையங்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளும். அடுத்தடுத்து மற்ற தேர்வு அமைப்புகளும் இதை பயன்படுத்திக்கொள்ளும். இனிவரும் காலங்களில், மத்திய, மாநில, யூனியன் பிரதேச தேர்வாணையங்கள், பொதுத்துறை தேர்வாணையங்கள், தனியார் துறை ஆகியவற்றுக்கும் இந்த மதிப்பெண் பகிர்ந்து கொள்ளப்படும். அதன்மூலம், அந்த தேர்வாணையங்களுக்கு செலவும், நேரமும் மிச்சமாகும்.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு 3 விமான நிலையங்கள் குத்தகை: மந்திரிசபை ஒப்புதல்
- ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடும் திட்டத்துக்கும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில், பொது-தனியார் கூட்டு அடிப்படையில், லக்னோ, ஆமதாபாத், மங்களூரு, ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய 6 விமான நிலையங்களை இயக்குவதற்கான குத்தகை உரிமையை அதானி எண்டர்பிரைசஸ் பெற்றது. ஆமதாபாத், மங்களூரு, லக்னோ ஆகிய 3 விமான நிலையங்களின் குத்தகை உரிமையை அளிக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து விட்டது. மீதி உள்ள 3 விமான நிலையங்களின் குத்தகைக்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மின் நிறுவனங்களுக்கு கடன் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
- மாநில மின்வினியோக நிறுவனங்களுக்கு அவற்றின் பணி மூலதன உச்சவரம்புக்கு மேல் மின்சார நிதி கழகம் கடன் வழங்குவதற்கு ஒருதடவை மட்டும் தளர்வு அளிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கொரோனா காரணமாக, பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த இயலாததால் நிதி தட்டுப்பாட்டில் சிக்கி உள்ள மாநில மின்வினியோக நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி மூலதன உதவியை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த மே மாதம் அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக, மாநில மின்வினியோக நிறுவனங்களுக்கு ‘உதய்’ திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்படுகிறது. அந்த விதிமுறைகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், மின்வினியோக நிறுவனங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
கரும்புக்கு கூடுதல் விலை - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
- 10 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்பின் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.10 உயர்த்தி, ரூ.285 ஆக நிர்ணயிக்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வருகிற அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரையிலான சர்க்கரை பருவத்தின்போது, இந்த விலையை கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கும்.
கொரோனா பரிசோதனையில் உத்தரபிரதேசம் முதல் இடம்
- கொரோனா பரிசோதனையில் உத்தரபிரதேச மாநிலம் முதல் இடத்தை பிடித்தது. அங்கு பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா பரிசோதனைகள் செய்த மாநிலம் என்ற பெயரை அந்த மாநிலம் தட்டிச்சென்று உள்ளது. அதுவரை இந்த சிறப்பை தமிழகம்தான் பெற்றிருந்தது. அங்கு 35 லட்சத்தை கடந்தபோதே, பரிசோதனையில் முதல் இடம் என்ற பெயர் அந்த மாநிலத்துக்கு கிடைத்து விட்டது.
கழிவு நீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்
- ஐதராபாத்தை சேர்ந்த செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் நிறுவனம், இந்திய ரசாயன தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் கழிவுநீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு ஒன்றை நடத்தி அசத்தி இருக்கிறார்கள். பொதுவாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மூக்கு மற்றும் வாய்வழியாக மட்டுமல்ல, மலம் வழியாகவும் தொற்றை வெளியிடுகிறார்கள் என்பதால் குறிப்பிட்ட பகுதிகளில் தொற்று பரவுவதை மதிப்பிடுவதற்கு கழிவு நீர் மாதிரிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காண்பதிலும், தொற்றுநோயை கட்டுப்படுத்துவதிலும், பரவலை மதிப்பிடுவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு வெளியிட்ட பட்டியல்: ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் 2-வது இடம்
- புதுமையான கண்டுபிடிப்பு சாதனைகள் குறித்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் (ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ.) ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காணொலி வாயிலாக வெளியிட்டார். அதில் செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தனியார், சுயநிதி பல்கலைக்கழகம் பிரிவில் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளில் நாட்டில் 2-ம் இடத்தை பிடித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய கடற்படை கமாண்டர்களின் மாநாடு
- இந்திய கடற்படை கமாண்டர்களின் மாநாடு டெல்லியில் 19.08.2020 அன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கடற்படை கமாண்டர்களின் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங் இந்திய கடற்படை எத்தகைய சவால்களையும் சந்திக்கும் திறன் கொண்டது என பெருமிதம் தெரிவித்தார்.
அமெரிக்கா அனுப்பிய 100 வென்டிலேட்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு
- முதற்கட்டமாக கடந்த ஜூன் 14-ம் தேதி 100 வென்டிலேட்டர்களை இந்தியாவிற்கு இந்தியாவிற்கு நன்கொடையாக அனுப்பி வைத்தது அமெரிக்கா. இந்நிலையி்ல் இரண்டாம் கட்டமாக நேற்று 100 வென்டிலேட்டர்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது. ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட 100 வென்டிலேட்டர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு எய்ம்ஸ் மண்டல மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
லே பகுதியில் இந்தியாவால் அமைக்கப்படும் புதிய சாலை
- அண்டை நாடுகளானா பாக்., மற்றும் சீனாவின் அத்துமீறலை முறியடிக்க ஏதுவாக லே பகுதியில் புதிய சாலை ஒன்றை அமைக்கும் பணியை இந்தியா துவங்கி உள்ளது. எதிரி நாட்டு படைகளின் கண்களில் படாமல் துருப்புகளை விரைவில் நகர்த்தி செல்வதற்கு இந்த சாலை உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன்படி மணாலி அருகே உள்ள ஜோஜிலா என்ற இடத்தில் இருந்து லே பகுதி வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது. இது டிராஸ் மற்றும் கார்கில் பகுதி்யை உள்ளடக்கியதாக இருக்கும்.
சீனாவில் 1200 ஆண்டு பழமைவாய்ந்த புத்தர் சிலை வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம்
- சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 1,200 ஆண்டு பழமை வாய்ந்த புத்தர் சிலை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. தெற்கு சீனாவின் லேசான் என்னுமிடத்தில் இமே மலைப்பகுதியில் பிரம்மாண்ட புத்தர் சிலை அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு முன்னால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 233 அடியாக உள்ளது. இந்த சிலை யாங்ஸ்டே நதிக் கரையில் அமைந்துள்ளது. தற்போது சிச்சுவான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் யாங்ஸ்டே நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வெள்ளம் புத்தர் சிலையின் பாதங்களை தொட்டபடி சென்று கொண்டுள்ளது. வெள்ளப்பபெருக்கு அதிகமானால் சிலைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இச்சிலை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 70 வருடங்களாக புத்தர் சிலையில் பாதங்களை தொடும் அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
'இந்தியாவில் அடுத்த 5 ஆண்டில் கேன்சர் பாதிப்பு 12% அதிகரிக்கும்': ஐ.சி.எம்.ஆர்.
- 'இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரிக்கும்' என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) தெரிவித்துள்ளது. தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது 2020ம் ஆண்டில் 13.9 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது 2025-ம் ஆண்டுக்குள் 15 லட்சமாக அதிகரிக்க கூடும். மொத்த புற்றுநோய் பாதிப்பில் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு மட்டும் 27.1 சதவீதமாக உள்ளது. இதில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவோராக உள்ளனர். அடுத்ததாக இரைப்பை குடல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் அதிகமாக காணப்படுகின்றன.
உலகக் கொசு நாள் (World Mosquito Day) - ஆகஸ்ட் 20
- கொசுக்களால், ஒவ்வோர் ஆண்டும் ஏழு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் உயிரிழக்கின்றனர் என்றும், தெற்கு ஆசியா மற்றும், ஆப்ரிக்காவில், கொசுக்களால் உயிரிழப்பவரின் எண்ணிக்கை அதிகம் என்றும், செய்திகள் கூறுகின்றன. மனிதர்களில் மலேரியா நோய் பரவுவதற்கு காரணம், பெண் கொசுக்கள் என்று, பிரித்தானிய மருத்துவர், சர் ரொனால்டு ராஸ் அவர்கள், 1897ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி கண்டுபிடித்ததை நினைவுகூரும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 20ம் நாளன்று, கொசு ஒழிப்பு உலக தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
Post a Comment