Type Here to Get Search Results !

தேசிய பணியாளர் தேர்வு - மதிப்பெண் 3 ஆண்டுகளுக்கு செல்லும், ஆண்டுக்கு 2 தடவை ஆன்லைனில் தேர்வு

எத்தனை தடவையும் எழுதலாம் 
தேசிய பணியாளர் தேர்வு முகமை அடுத்த ஆண்டு அமலுக்கு வரும். அதன் தலைமையகம் டெல்லியில் செயல்படும். இத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். ஆண்டுக்கு 2 தடவை தேர்வு நடத்தப்படும். ஒருவரே வயது உச்சவரம்பை எட்டும்வரை எத்தனை தடவை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

12 மொழிகளில் தேர்வு நடத்தப்படும்
இந்தி, ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும். உரிய காலகட்டத்தில், 12 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும் தேர்வு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தேர்வுக்கான பாடத்திட்டம், நிலையானதாக, பொதுவானதாகவே இருக்கும். இதனால், ஒவ்வொரு தேர்வுக்கும், ஒவ்வொரு பாடத்திட்டபடி படித்துக் கொண்டிருந்த விண்ணப்பதாரர்களின் சுமை குறையும். ஒவ்வொரு போட்டித்தேர்வையும் 2½ கோடி முதல் 3 கோடி பேர் வரை எழுதி வருகிறார்கள். அவர்கள் இனிமேல் ஒருதடவை தேர்வு எழுதிவிட்டு, அதே தேர்வாணையங்களுக்கு மேல்நிலை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த மதிப்பெண்கள் செல்லுபடி ஆகும். பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), ரெயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்.ஆர்.பி.), வங்கி பணியாளர் தேர்வு அமைப்பு ஆகியவை இதுவரை நடத்தி வந்த குரூப் பி, குரூப் சி பணியிடங்களுக்கான ஆள் எடுக்கும் தகுதி தேர்வை இனிமேல் தேசிய பணியாளர் தேர்வு முகமை நடத்தும்.

3 பிரிவினர் - பட்டதாரிகள், 12-ம் வகுப்பு தேறியவர்கள், 10-ம் வகுப்பு தேறியவர்கள்
இது, முதல்நிலை தேர்வுதான். இந்த மதிப்பெண் அடிப்படையில், இதர தேர்வாணையங்கள், இரண்டாம் நிலை தேர்வு நடத்தி, இறுதியாக ஆட்களை தேர்வு செய்யலாம்.
ஆனால், சில துறைகள், இரண்டாம் நிலை தேர்வு நடத்தாமல், தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில், உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை நடத்தி ஆள்தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளன. இதனால், பெரும்பாலான மத்திய அரசு பணிகளுக்கு ஆள் எடுக்க இத்தேர்வு பயன்படும். பட்டதாரிகள், 12-ம் வகுப்பு தேறியவர்கள், 10-ம் வகுப்பு தேறியவர்கள் என 3 தரப்பினருக்கும் தனித்தனியாக பொது தகுதி தேர்வு நடத்தப்படும்.

அனைத்து மாநில மக்களுக்கும் சமமான போட்டி
பொதுவான இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். தேர்வு மையம் குறித்த விருப்பத்தையும் தெரிவிக்கலாம். இருப்பு அடிப்டையில், தேர்வு மையம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு மையம் அமைவதால், பெண் விண்ணப்பதாரர்கள் இதுவரை அனுபவித்து வந்த அசவுகரியங்கள் அகலும். பல மொழிகளில் தேர்வு நடப்பதால், அனைத்து மாநில மக்களுக்கும் சமமான போட்டி வாய்ப்பு கிடைக்கும். உண்மையான கூட்டாட்சி உணர்வோடு இதை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Source: தினத்தந்தி 

Post a Comment

0 Comments

Labels