பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா’ விமான கண்காட்சி
- பெங்களூரு எலகங்கா பகுதியில் விமான படை தளம் உள்ளது. இந்த விமான படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள், ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் கலந்து கொள்ளும். விமான கண்காட்சியையொட்டி வானில் போர் விமானங்களின் சாகச காட்சிகளும் இடம்பெறும். கடந்த 1996-ம் ஆண்டு முதல் பெங்களூருவில் விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு(2019) பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா’ விமான கண்காட்சி நடந்தது.
- இந்த நிலையில் அடுத்த ஆண்டு(2021) பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறுவதை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்து உள்ளது. அதாவது அடுத்த ஆண்டு(2021) பிப்ரவரி மாதம் 3-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை 5 நாட்கள் பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா’ விமான கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் முதல் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை. கடைசி 2 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
ஜன்தன் திட்டம் 6 ஆண்டுகள் நிறைவு: 40.35 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்
- நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டத்தின் மூலம் இதுவரை 40.35 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அனைவருக்கும் வங்கிக் கணக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஜன் தன் திட்டத்தை அறிமுகம் செய்தார். அதன்படி அந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே திடீர் ராஜினாமா
- ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே (வயது 62) பல ஆண்டுகளாக பெருங்குடல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 2006-ம் ஆண்டு தனது 52 வயதில் ஜப்பானின் பிரதமராக பதவியேற்ற ஷின்ஜோ அபே, நாட்டின் முதல் இளம் பிரதமர் என்ற பெருமையை பெற்றார். உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெயரை ஜப்பான் தற்போது தக்கவைத்து இருப்பதற்கு முக்கிய காரணமாக ஷின்ஜோ அபே கருதப்படுகிறார்.
- இதனிடையே தொடர்ந்து 2,799 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்து ஜப்பான் வரலாற்றிலேயே நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்கிற பெருமையை ஷின்ஜோ அபே கடந்த வாரத்தில் பெற்றார். இந்த நிலையில் ஜப்பான் ஆளும் கட்சியான தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் அடுத்த ஆண்டு (2021) செப்டம்பர் வரை தொடர வாய்ப்புள்ள நிலையில், பிரதமர் ஷின்ஜோ அபே திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்படுகின்றன
- ரபேல் போர் விமானங்கள் செப்டம்பர் 10-ந் தேதி முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்படும் எனவும், இந்த நிகழ்ச்சி இந்தியா-பிரான்ஸ் ராணுவ மந்திரிகளின் முன்னிலையில் நடைபெறும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்கப்படுகின்றன. இதில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள் ஆகும். இவற்றிலும் மற்ற விமானங்களைப் போன்ற அனைத்து வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.
- பிரான்சிடம் இருந்து வாங்கப்படும் 36 ரபேல் போர் விமானங்களில் 5 விமானங்களை கொண்ட முதல் தொகுதி கடந்த மாதம் 29-ந் தேதி இந்தியா வந்து சேர்ந்தது. இதில் தாக்குதல் விமானங்கள் 3-ம், பயிற்சி விமானங்கள் 2-ம் உள்ளன. இந்த விமானங்கள் உடனடியாக விமானப்படையில் இணைந்து 24 மணி நேரத்துக்குள் பயிற்சியை தொடங்கி உள்ளன.
- ரபேல் போர் விமானங்கள் அரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலும், மேற்கு வங்காளத்தின் ஹசிமரா தளத்திலும் இணைக்கப்படுகின்றன. எனவே முதல் தொகுதி 5 விமானங்களும் அம்பாலாவில் இணைக்கப்பட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டாலும், இன்னும் முறைப்படி இணைக்கப்படவில்லை. எனவே இந்த நிகழ்ச்சியை அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி நடத்துமாறு ராணுவ அமைச்சகத்துக்கு விமானப்படை பரிந்துரைத்து உள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இந்தியா முன்வரவேண்டும்: ஐ.நா.
- கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சாதாரண எரிசக்தி துறைக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரேஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் சாதாரண எரிபொருட்களுக்கான மானியங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மானியங்களை விட 7 மடங்கு அதிகம். எனவே இந்த நிலைமையை மாற்ற இந்தியா உள்ளிட்ட ஜி 20 நாடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்யவேண்டும்” என கூறினார்.
கொரோனாவால் 100 கோடி பேர் மனநலம் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு
- கொரோனா வைரஸ் பரவலால், உலகில் 100 கோடி மக்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலால், மனநல ஆலோசனை மையங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்தில், வைரஸ் பாதிக்கப்பட்டவகளை, மக்கள் புறக்கணித்ததால், அவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகினர். குறைந்த, நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் மனநல பாதிப்புக்கு எந்த சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை. வரும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநலனை முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லையில் 5ஜி நெட்வொர்க் அமைக்கும் சீனா!
- இந்தியா - சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், பாங்காங் ஏரியில் புதிய கட்டுமான மற்றும் டெம்சோ அருகே 5ஜி நெட்வொர்க் அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. லடாக் எல்லை கட்டுப்பாடு பகுதி அருகே டெம்சோக் பகுதியில் தகவல் தொடர்புக்காக 5ஜி நெட்வொர்க்குகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து நிறுவுவதற்கு தேவையான பணிகளை சீனா செய்து வருவதாக உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சீன படைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ள பாங்காங் ஏரியிலும் வடக்கிலும் புதிய கட்டுமானம் காணப்படுகிறது. இந்தியா உடனான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் சீனா கூடாரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது: பிரதமர் மோடி
- சமூக சீர்திருத்தவாதி அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகி வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டவர் அய்யன்காளி. 28.08.2020 அன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதையொட்டி சமூக சீர்திருத்தவாதி அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரத்த தான கொடைவள்ளல் விருதைப் பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்
- நவல்பட்டு காவல் பயிற்சிப் பள்ளியில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் காவலர் அரவிந்த். இவர் 18 வயது முதல் தற்போது வரை வருடத்திற்கு நான்கு முறை என 56 முறை தொடர்ந்து ரத்த தானம் செய்துள்ளார் . மேலும் இவர் கடந்த நான்கு வருடமாக ரத்ததான தன்னார்வலர்களை ஒன்றிணைத்து சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் ரத்த தானம் செய்து சிறந்த சமூக சேவைகளைச் செய்து வருகின்றனர். இவர் செய்து வரும் சமூக சேவையை பாராட்டும் விதமாக தேசம் காப்போம் அறக்கட்டளையிடம் இருந்து தொடர் ரத்த தானம் கொடை வள்ளல் விருது காவலர் அரவிந்துக்கு வழங்கப்பட்டது.
மூன்றில் ஒருவருக்கு மட்டுமே தொலைதூரக் கல்வி கிடைக்கிறது : யுனிசெஃப்
- கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் உலகளவில் மூன்றில் ஒரு மாணவரால் தொலைதூரக் கல்வியை அணுக முடியவில்லை என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. பல மாதங்களாக கல்வி நிறுவனங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ள நிலையில் ‘உலகளாவிய கல்வி அவசரநிலை’ ஏற்பட்டுள்ளது. இதன் எதிர்விளைவுகளை, பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் வரவிருக்கும் அசாதாரண சூழலில் உணரப்படலாம். தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் மூலம் நடத்தப்படும் தொலைதூரக் கல்வி குறித்து 100 நாடுகளில் ஆய்வு செய்தோம். இதில், கிழக்கு மற்றும் தென் ஆப்ரிக்காவில் 49 சதவீதம், மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் 48 சதவீதம், கிழக்கு ஆசியாவில் 20 சதவீதம், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் 40 சதவீதம், தென் ஆசியாவில் 38 சதவீதம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசியாவில் 34 சதவீத குழந்தைகளால் தொலைதூரக் கல்வியை அணுக முடியவில்லை.
- உலகளவில் மொத்தமாக 31 சதவீத குழந்தைகளால் தொலைதூர கல்வியை அணுக முடியவில்லை. அதில், மற்ற நாடுகளைக் காட்டிலும் ஆப்ரிக்க நாடுகளின் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைக்குத் தயங்கும் இந்தியா: ஐநா பொதுச்செயலாளர்
- காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள இந்தியா தயங்குவதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதலில் நிலக்கரி பயன்பாடு முக்கியப்பங்கு வகித்து வருகிறது. இதன்காரணமாக உலகநாடுகள் புதைபடிம எரிபொருள் தேவையை தவிர்க்க ஐநா அவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
- இந்நிலையில் 28.08.2020 அன்று நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய ஐநா அவையின் பொதுச்செயலாளர் இந்தியா விரைவாகவும் நிரந்தரமாகவும் நிலக்கரி பயன்பாட்டில் இருந்து வெளியேற வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
- மேலும், “இந்தியாவில் நிலக்கரி பயன்பாடு படிப்படியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், புதைபடிவ எரிபொருள் மானியங்கள் முடிவுக்கு வரப்பட வேண்டும். எரிபொருள் தேவைக்காக நிலக்கரி பயன்பாட்டை நம்பியிருப்பதை இந்தியா கைவிட வேண்டும்.” என்று அன்டோனியோ குடெரெஸ் வலியுறுத்தினார்.
- புதைபடிம எரிபொருள் தேவையை குறைத்துக் கொண்டால் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா உலகளாவிய வல்லரசாக மாறும் என அவர் தனது உரையில் தெரிவித்தார். நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்வதை நிறுத்த ஜப்பானைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் ஐநா அவையின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூ ஜெர்ஸி உச்ச நீதிமன்றத்துக்கு முதல் கறுப்பின பெண் நீதிபதி நியமனம்
நியூ ஜெர்ஸியின் உச்ச நீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதியின் நியமனத்தை மாகாண செனட் அவை உறுதி செய்துள்ளது. ஃபேபியானா பியர்ரே-லூயிஸ் (39) என்ற வழக்குரைஞர், ஃபெடரல் வழக்குரைஞராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரை நியூ ஜெர்ஸியின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக டெமாக்ரடிக் ஆளுநர் பில் முர்பி கடந்த ஜூன் மாதம் பரிந்துரை செய்திருந்தார். லூயிஸ்தான் உச்ச நீதிமன்றத்துக்கு பில் முர்பியால் தேர்வான முதல் நபர் ஆவார். ஹைதியில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்த பியர்ரே-லூயிஸ்தான், சட்டக்கல்லூரிக்குச் சென்ற முதல் நபர் ஆவார்.
Post a Comment