உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்:
உலகை அச்சுறுத்தும் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்கான முதல் தடுப்பூசி தயார் என ரஷியா அறிவித்துள்ளது. இதையொட்டி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், மாஸ்கோவில் கூறியதாவது:- உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரசை தடுப்பதற்கான தடுப்பூசி, 11.08.2020 அன்று காலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் திறம்பட செயல்படுகிறது என்று எனக்கு தெரியும். இது ஒரு நிலையான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
‘ஸ்புட்னிக்-5’: இந்த தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-5’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 1957-ம் ஆண்டு, ரஷியாவில் ஏவப்பட்ட ஸ்புட்னிக்-1 விண்கலம், முதல் விண்கலம் என்ற வகையில் உலகம் முழுவதும் விண்வெளி ஆராய்ச்சியை தூண்டியது. அதே போன்று உலகில் பதிவு செய்யப்பட்ட முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி என்ற வகையில் ‘ஸ்புட்னிக்-5’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்: ரஷியா கொரோனா தடுப்பூசி விஷயத்தில் அவசரம் காட்டுவதாக சர்ச்சை எழுந்தது. இதையொட்டி, உலக சுகாதார நிறுவனம் கூறும்போது, “கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில், சர்வதேச வழிகாட்டுதல்களை ரஷியா பின்பற்ற வேண்டும்” என்று கூறியது. மூன்றாம் கட்ட பரிசோதனைகளை எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்ட 6 தடுப்பூசிகளில் ரஷியாவின் தடுப்பூசி இல்லை என தகவல்கள் கூறுகின்றன.
கொரோனா தாக்கத்தால் நிலவும் பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்
கொரோனா தாக்கத்தால் நிலவும் பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடியை சிறப்பு மானியமாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
ராணுவத்துக்கு ரூ.8,722 கோடிக்கு தளவாடங்கள் கொள்முதல்
ராணுவத்துக்கு, 8,722 கோடி ரூபாய்க்கு தளவாடங்கள் கொள்முதல் செய்ய, டி.ஏ.சி., எனப்படும், ராணுவ கொள்முதல் கவுன்சில், ஒப்புதல் அளித்து உள்ளது.டில்லியில், டி.ஏ.சி.,யின் கூட்டம், ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்தது. இதில், ராணுவத்துக்கு, 8,722 கோடி ரூபாய்க்கு, தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன் வாயிலாக, தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், பல தளவாடங்களை, நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுஉள்ளது. குறிப்பாக, 106 பயிற்சி விமானங்களை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வளர்ச்சி திட்டங்கள்: இந்தியா நேபாளம் 17 -ம் தேதி பேச்சுவார்த்தை
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இந்திய தூத்ர வினய் மோகன் குவாத்ரா, நேபாள வெளியுறவு செயலாளர் சங்கர் தாஸ் பைராகியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வரும் திங்கட்கிழமை(17 ம்தேதி) எட்டாவது கூட்டமாக இது நடைபெறுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த கூட்டம் தற்போது நடைபெற உள்ளது என அதிகாரிகள் கூறினார். இந்தியா கடந்த 2019-20 ம் பட்ஜெட்டின் போது நேபாள நாட்டின் உதவிக்காக நிதி ஒதுக்கீடு என ரூ.1,200 கோடி ரூபாய் அளவிற்கு நிதிஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பார்ச்சூன் டாப் 100 நிறுவனங்கள் : ரிலையன்ஸ்க்கு இடம்
அமெரிக்காவின் பார்ச்சூன் இதழ், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மிகப்பெரிய 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2020ம் ஆண்டுக்கான பட்டியலில், டாப் 100 நிறுவனங்களில், கடந்தாண்டை விட 10 இடங்கள் முன்னேறி, இந்தியாவின் ஒரே நிறுவனமாக 96வது இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இடம்பிடித்துள்ளது.
உலகின் நான்காவது பணக்காரரான தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பார்ச்சூன் இதழில் தொடர்ச்சியாக 17வது ஆண்டாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.பார்ச்சூரன் பட்டியலில் சீனாவை சேர்ந்த 24 அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் டாப் 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும் டாப் 5 நிறுவனங்களில், 3 இடங்களை சீன நிறுவனங்களே பிடித்துள்ளன. முதலிடத்தை அமெரிக்காவை சேர்ந்த வால்மார்ட் நிறுவனம் பிடித்துள்ளது.
லெபனானுக்கு மருந்துகள் அனுப்பியது இந்தியா
மேற்காசியாவைச் சேர்ந்த லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில், கடந்த வாரம் வெடி விபத்து நடந்தது. இந்நிலையில், லெபனான் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, மருந்துகள், உணவுகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை, இந்தியா அனுப்பி உள்ளது.
கேரளாவில் டெங்கு, எலி காய்ச்சலும் பரவுகிறது: பினராயி விஜயன்
கேரளாவில் கொரோனாவுடன் டெங்கு, எலிக்காய்ச்சலும் பரவுகிறது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
'உலகளாவிய ஏற்றுமதியில் 5% இலக்கு; 2025க்குள் இந்தியா நிர்ணயிக்க வேண்டும்': சி.ஐ.ஐ.,
2025ம் ஆண்டுக்குள் உலகளாவிய வர்த்தக ஏற்றுமதியில், 5 சதவீத பங்கை இலக்காக இந்தியா நிர்ணயிக்க வேண்டும்' என, இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) தெரிவித்துள்ளது. இந்தியா தற்போது வர்த்தக ஏற்றுமதியில் 1.67 சதவீத பங்கையும், சேவை ஏற்றுமதியில் 3.54 சதவீத பங்கையும் கொண்டுள்ளது. ஆனால், 2025ம் ஆண்டுக்குள் உலகளாவிய வர்த்தக ஏற்றுமதியில், 5 சதவீத பங்கையும், சேவை ஏற்றுமதியில் 7 சதவீத பங்கையும் இந்தியா இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்: கடந்த 2017ம் ஆண்டு மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகள் இணைந்து, ஏற்றுமதியை அதிகரிக்கவும், ஏற்றுமதி வளர்ச்சிக்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகளை மூன்று ஆண்டுகளுக்குள் உருவாக்க மத்திய வர்த்தக அமைச்சகம், ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராமர் கோயிலுக்காக இஸ்லாமியர் வடிவமைக்கும் 2,100 கி. மணி
அயோத்தியில் ராமர் கோயிலுக்காக தவு தயால் மற்றும் இஸ்லாமியரான இக்பால் மிஸ்த்ரி என்பவர்கள் 2,100 கிலோ எடையுள்ள மணியை வடிவமைத்துள்ளனர். இதன் ஒலி, 15 கி.மீ வரை கேட்கக்கூடியது எனக் கூறப்பட்டுள்ளது. இது தனித்தனியான பாகங்களைக் கொண்டு பொருத்தப்படவில்லை. மொத்தமாக உலோகக் கலவையால் ஒரே பொருளாக உருவாக்கப்பட்டது என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
Post a Comment