என்-95 ரக முகக்கவசங்களுக்கான ஏற்றுமதித் தடை நீக்கம்
- என்-95 ரக முகக்கவசங்களுக்கான ஏற்றுமதித் தடையை நீக்கி மத்திய வர்த்தகத் துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத் துவக்கத்தில் இந்தியாவில் கரோனா பெருந்தொற்றின் பரவல் அதிகரிக்க துவங்கியவுடன், பொதுவாக மருத்துவத் துறையினரால அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்-95 ரக முகக்கவசங்களுக்கான உள்நாட்டுத் தேவை அதிகரித்தது. இதையடுத்து அந்த கவசங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
- பின்னர் உற்பத்தி நிலைமை வெகுவாக சீரடைந்தவுடன், தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, ஒரு மாதத்திற்கு 50 லட்சம் முகக்கவசங்களை மட்டும் ஏற்றுமதி செய்யலாம் என்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
- இந்நிலையில் என்-95 ரக முகக்கவசங்களுக்கான ஏற்றுமதித் தடையை நீக்கி மத்திய வர்த்தகத் துறை தற்போது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அயல்நாட்டு வர்த்தகத்திற்கான தலைமை இயக்குநர் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘என்-95 / எப்.எப்.பி 2 ரகங்கள் அல்லது அதற்கு இணையான முகக்கவசங்களுக்கான ஏற்றுமதிக் கொள்கையானது, எளிதான வர்த்தகத்திற்கு வழி செய்யும் விதமாக ‘கட்டுப்படுத்தப்பட்டது’ என்ற பிரிவில் இருந்து ‘தாராளம்’ என்ற பிரிவிற்கு மாற்றப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு: மூவருக்கு பகிர்ந்தளிப்பு
- 2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
- கருந்துளை உருவாக்கம் குறித்த பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவான கணிப்பை கண்டறிந்ததற்காக ரோஜர் பென்ரோஸ்-க்கும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளை கண்டறிந்ததற்காக ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ்-க்கும் வழங்கப்படுகிறது. ரோஜர் பென்ரோஸ்-க்கு விருதின் பரிசுத் தொகையில் 50 சதவீதமும், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியாவுக்கு தலா 25 சதவீதமும் வழங்கப்படுவதாக ராயல் ஸ்வேதிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் அறிவித்துள்ளது.
உலகளவில் 58 சதவீத இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு
- சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இளம் பெண்களில் 58 சதவீதம் பேர் பாலியல் தொந்தரவை சந்திப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் சிறுமிகளுக்கான உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்காக செயல்படும் தனியார் தொண்டு நிறுவனமான பிளான் இன்டர்நேஷனல், சர்வதேச பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு நடத்திய கணக்கெடுப்பில் இணையதளம் உபயோகிக்கும் பெண்களில் 58 சதவீதம் பேர் பாலியல் தொந்தரவை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளனர்.
- இந்த கணக்கெடுப்பானது, பிரேசில், இந்தியா, நைஜீரியா, ஸ்பெயின், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா உள்பட 22 நாடுகளில் உள்ள 15 முதல் 25 வயதுடைய 14 ஆயிரம் இளம் பெண்கள் இந்த ஆய்வில் வாக்களித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சமூக ஊடகங்கள் வாயிலாக முகநூலில் 39 சதவீதமும், அதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் 23 சதவீதமும், வாட்ஸ்அப் 14 சதவீதமும், ஸ்னாப்சாட்டில் 10 சதவீதமும், ட்விட்டரில் 9 சதவீதமும் மற்றும் டிக்டாகில் 6 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முதல் திருநங்கை தேர்தல் அதிகாரியாகும் மோனிகா தாஸ்
- பிகாரில் இருந்து முதல் திருநங்கை தேர்தல் அதிகாரியாக மோனிகா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வருகிற அக்டோபர் 28 முதல் துவங்கவுள்ள பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிக்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாட்னா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து தங்கப்பதக்கம் வென்றவர். தற்போது 32 வயதாகும் மோனிகா தாஸ், 2015 முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்து வரும் மாநிலத்தின் முதல் திருநங்கை ஆவார். தற்போது தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலமாக, முதல் முறையாக ஒரு திருநங்கையை தேர்தல் அதிகாரியாக நியமித்த மாநிலம் என்ற பெருமையை பிகார் பெற்றுள்ளது. முன்னதாக 2016 ஆம் ஆண்டில், திருநங்கையான ரியா சர்க்கார், மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் புதிய கரன்சி 'டேட்டா' தான்: முகேஷ் அம்பானி
- ரெய்ஸ் 2020 என்ற சமூக முன்னேற்றத்திற்கான செயற்கை நுண்ணறிவு பற்றிய மாநாட்டை அக்டோபர் 05, 2020 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொழில்முனைவோர்கள், செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று, தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களில் அதிக முதலீடுகளை செய்து வரும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி நான்காம் தொழிற் புரட்சியில் 'டேட்டா' தான் உலகின் புதிய கரன்சியாக இருக்கும் என, தெரிவித்துள்ளார்.
பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிப்பதில் உறுதி: ஜெய்சங்கர்
- பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கள் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ள நடந்த ‛குவாட்' அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தோ பசுபிக் பகுதியை திறந்து வைப்பது குறித்தும்,பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Post a Comment