மியான்மருக்கு நீர்மூழ்கி கப்பலை வழங்குகிறது இந்தியா
- ஐஎன்எஸ் சிந்துவிர் என்ற நீர்மூழ்கி கப்பலை மியான்மருக்கு வழங்க இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்மையில் ராணுவத்தளபதி மனோஜ் நரவானேவின் மியான்மர் சுற்றுப்பயணத்தின் போது, ராணுவ தளவாடங்களை வழங்க இந்தியா ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அந்நாட்டுக்கு நீர்மூழ்கி கப்பலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ‛மியான்மரின் ராணுவத்தில் இதுவே முதலாவது நீர்மூழ்கி கப்பல் ஆகும். அண்டை நாடான மியான்மருடன் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான முயற்சி இது'
ஆஸ்கர் விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தையா காலமானார்
- காந்தி திரைபடத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது பெற்ற பானு அத்தையா,91 உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார். மும்பையைச் சேர்ந்த இவர் "சி. ஐ. டி."(1956) என்ற இந்தி திரைப்படத்தில் ஆடை வடிவமைப் பாளராக அறிமுகமாகி , முன்னணி பாலிவுட் ஜாம்பவான்களான குரு தத், யஷ் சோப்ரா, ராஜ் கபூர் போன்றவர்களின் படங்கள் என 100 -க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 1983ம் ஆண்டு, இயக்குனர் ரிச்சர்டு ஆட்டென்பரோ இயக்கத்தில் வெளியான, "காந்தி' படத்தில், சிறந்த ( ஆடை வடிவமைப்பாளர் ) காஸ்ட்யூம் டிசைனுக்காக பானு அத்தையாவுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தனது 50 வருட சினிமா வாழ்வில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
அமெரிக்க தமிழர் விளக்கு விருதுக்கு கலாப்ரியா, பேரா.பஞ்சாங்கம் தேர்வு
- அமெரிக்க வாழ் தமிழர்களின் விளக்கு இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் புதுமைப்பித்தன் நினைவாக கலை - இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பாளர்களுக்கு விருது வழங்குகின்றனர். ஏற்கனவே விளக்கு விருது சி.சு.செல்லப்பா, பிரமிள், பூமணி, தேவதச்சன் உள்ளிட்ட சிறந்த படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக ஒரே ஆண்டில் இருவருக்கு வழங்குகின்றனர். 2019 ஆண்டுக்கான விளக்கு விருது தேர்வு குழு உறுப்பினர்கள் எழுத்தாளர் திலகவதி, பேரா.சு.சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகியோர் கவிஞர் கலாப்ரியா, பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஆகியோரை விருதுக்கு தேர்வு செய்தனர்.
தமிழக அரசு கூடுதலாக ரூ.9,627 கோடி கடன் வாங்க அனுமதி
- தமிழக அரசு கூடுதலாக ரூ.9,267 கோடி கடன் வாங்கி கொள்ள மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜிஎஸ்டி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. இதனை உடனடியாக வழங்கும்படி மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்துக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான ரூ.4 ஆயிரத்து 321 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. மாநிலங்களுக்கான இழப்பீடுகளை அளிப்பது தொடர்பாக, சமீபத்தில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்த இழப்பீட்டுத் தொகையை, மாநிலங்கள் கடனாக பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன.
சிவகங்கை அருகே பெருங்கற்கால கல்வட்டம் கண்டுபிடிப்பு!
- சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர், அண்ணாநகர் பகுதியில் 2,500 முதல் 3,500 ஆண்டுகள் பழமையான சங்க காலத்தோடு தொடர்புடைய கல் வட்டங்கள் உள்ளன. ஒக்கூர் மாசாத்தியார் பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. மாசாத்தியார் காலத்து ஈமக்காடாக இந்த கல் வட்டங்கள் இருந்திருக்கலாம். மலைப்பகுதியில் வெள்ளைக்கல், மற்ற செம்மண் பகுதிகளில் செம்பூரான் கற்களால் கல் வட்டங்கள் அமைக்கப்படும். ஆனால் இவ்விடத்தில் 2 கற்களும் கலந்துள்ளது வியப்பாக உள்ளது.
- பெருங்கற்காலத்தில் இறந்த மனிதனை புதைத்து சடங்குகள் முடித்து வழிபட்டு வந்தனர். இறந்த உடலை அல்லது எலும்புகளை பாதுகாக்க புதைத்து அதைச்சுற்றி பெரும் கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இவ்வாறான கல்வட்டங்கள் பல பகுதிகளில் காணக் கிடைக்கின்றன. பலகை கற்களை நான்கு பகுதிகளிலும் குத்தாக்க நிறுத்தி வைத்து அறை போல வடிவமைத்து, அதில் உடல் அல்லது எலும்புகளை வைக்கும் முறை கற்பதுக்கை என வழங்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்கள் சார்பில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்குகிறது
- பொருளாதார மந்தநிலை காரணமாக, கடந்த நிதி ஆண்டில் இருந்தே மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் வீழ்ச்சி அடைய தொடங்கியது. மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க சொகுசு பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் மீது விதிக்கப்படும் உபரிவரி மூலம் கிடைக்கும் வருவாயை மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஆனால், அந்த வருவாயும் குறைந்து விட்டது. அதனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம்வரை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டு நிலுவைத்தொகை ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் கோடியாக உள்ளது.
- இந்த இழப்பீட்டு நிலுவையை ஈடுகட்ட ரிசர்வ் வங்கி மூலமோ அல்லது வெளிச்சந்தையில் இருந்தோ கடன் வாங்கிக்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு 2 விருப்ப தேர்வுகளை மத்திய அரசு முன்வைத்தது. அதில், வெளிச்சந்தை கடன் விருப்ப தேர்வை 21 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன. அந்த மாநிலங்கள், வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக ரூ.68 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது. அனைத்து மாநிலங்களும், தற்போதைய கடன் வரம்புக்கு மேல் கூடுதலாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்க யோசனை தெரிவித்தோம். இந்த தொகையை மாநிலங்கள் சார்பில் மத்திய அரசே வெளிச்சந்தையில் கடன் வாங்கும். பின்னர், ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்கு பதிலாக, மாநிலங்களுக்கு அந்த பணம் கடனாக வழங்கப்படும்.
Post a Comment