பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய்
- விண்வெளியில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரிய நிகழ்வு 14.10.2020 அன்று வானில் நடைபெற உள்ளது. இதில் பூமி, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் சந்திக்க உள்ளது. மேலும் பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வருவதால் தொலைநோக்கி இல்லாமல் வெற்றுக்கண்களால் அந்த கிரகத்தை அமீரகத்தில் பார்க்க முடியும்.
- பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கி.மீ தொலைவு ஆகும். இதில் நீள் வட்ட பாதை பயணத்தில் மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது இரு கிரகங்களுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. தொலைவாக இருக்கும். இந்த நீள்வட்ட பாதை தொலைவு காரணமாகவே பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர 365 நாட்களும், செவ்வாய் கிரகம் சூரியனை சுற்றி வர 687 நாட்களும் ஆகிறது.
40 கோடி வாடிக்கையாளர்களை பெற்று ரிலையன்ஸ் ஜியோ சாதனை
- இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்கள பெற்ற முதல் நெட்வொர்க் நிறுவனம் என்ற சாதனையை ஜியோ படைத்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 35 லட்சம் பேரைத் தனது சேவைக்குள் இணைத்துள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. தற்போது 40 கோடியே 8 லட்சத்து 3 ஆயிரத்து 819 வாடிக்கையாளர்களுடன் ஜியோ முதல் இடத்தில் உள்ளதாக டிராய் கூறியுள்ளது.
‛ஆரோக்கிய சேது' செயலிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
- மத்திய அரசு வெளியிட்டுள்ள ‛ஆரோக்கிய சேது' செயலிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ், குறித்து விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்க, மத்திய அரசு ‛ஆரோக்கிய சேது' செயலியை அறிமுகம் செய்தது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் இந்த செயலியை வெளியிட்டுள்ளது.
- ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்க மொழி, ஒரியா, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், நாம் வசிக்கும் இடம் அருகே கொரோனா வைரஸ், தொற்றுள்ள பகுதிகளை சுட்டிக்காட்டும். தொற்று பாதித்தவர்களை சந்திப்பதை தவிர்க்க முடியும். மேலும், கொரோனா வைரஸ் தொற்றில், இருந்து தற்காத்து கொள்வது குறித்து தகவல்களை வழங்கும்.
- இந்த செயலி தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரஸ் அத்னோம் கூறியதாவது: ஆரோக்கிய சேது செயலியை இந்தியாவில் 150 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். சோதனையை இலக்கை எட்டவும், ஹாட்ஸ்பாட்டாக எதிர்பார்க்கக்கூடிய பகுதிகளை அடையாளம் காணவும் பொது சுகாதார துறைகளுக்கு இது உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு
- பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றங்களால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும். அதன்படி, பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.4 லட்சத்தில் இருந்து அதிகபட்ச இழப்பீடாக ரூ.7 லட்சம் வரை வழங்கப்படும். மிக கடுமையான பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும். பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை; கடுமையான பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை;
- மறுவாழ்வு தேவைப்படும் அளவுக்கு மன ரீதியான அல்லது உடல் ரீதியாக கொடுங்காயம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை; ஆபாசப் படம் எடுக்கப்பட்டிருந்தால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை; பாலியல் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்துவிட்டால் குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை; பாலியல் குற்றத்தினால் கர்ப்பிணியாக்கப்பட்டால் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை; கர்ப்பிணியாக்கப்பட்டு, கரு கலைக்கப்பட்டு, கர்ப்பமாகும் தகுதியை இழந்துவிட்டால் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம், அதிகபட்சம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
ஜி.எஸ்.டி. இழப்பீடு பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.68,825 கோடி கடன் திரட்ட 20 மாநிலங்களுக்கு அனுமதி
- கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால், நடப்பு நிதியாண்டில், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை ஈடுகட்ட ரிசர்வ் வங்கி மூலம் ரூ.97 ஆயிரம் கோடி கடன் அல்லது வெளிச்சந்தையில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி கடன் திரட்டுமாறு மாநிலங்களுக்கு 2 விருப்ப தேர்வுகளை மத்திய அரசு முன்வைத்துள்ளது. வெளிச்சந்தை கடன் விருப்பத்தேர்வை 20 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.
- இந்த மாநிலங்கள், வெளிச்சந்தையில் இருந்து ரூ.68 ஆயிரத்து 825 கோடி கடன் திரட்ட மத்திய அரசு நேற்று அனுமதி அளித்தது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின துறை இந்த அனுமதியை அளித்துள்ளது.
Post a Comment