நம்பகமான செய்திகளை தருவதில் அச்சு ஊடகம் முதலிடம்: ஆய்வில் தகவல்
- நம்பகமான செய்திகளை வழங்குவதில், அச்சு ஊடகங்கள் முதலிடம் வகிப்பதாக, ‛சி - வோட்டர்' நடத்திய ஆய்வில் 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மக்கள் அதிகம் சார்ந்திருப்பது காட்சி ஊடகமா? அல்லது அச்சு ஊடகமா? என்ற ஆய்வு, ‛சி - வோட்டர்' சார்பில் நடத்தப்பட்டது. இதில் அச்சு ஊடகங்கள் நம்பகமான செய்திகளை தருவதாக, 66 சதவீதம் கூறியுள்ளனர். குறிப்பாக கொரோனா பரவல் காலகட்டத்தில், அச்சு ஊடகங்களில் வரும் செய்திகள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருப்பதாக 63 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
பூர்வகுடிகள் பட்டியலில் படுகர் மக்கள் சேர்ப்பு : ஐ.நா., அறிவிப்பு
- நீலகிரி படுக மக்களை பூர்வகுடியினருக்கான பட்டியலில் சேர்த்து, ஐ.நா., மலைகளுக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின், மலைகளுக்கான கூட்டமைப்பு, உலக பூர்வகுடியினருக்கான பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. 'நீலகிரி ஆவண மைய காப்பகம்' சார்பில், நீலகிரி படுக சமுதாயம், உலக பூர்வகுடியினருக்கான பட்டியலில் இடம்பெற வேண்டி, அனைத்து ஆவணங்களுடன், விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
- ஐக்கிய நாடுகளின் மலைகளுக்கான கூட்டமைப்பு, விண்ணப்பத்தை ஏற்று, அக்., 12ல், படுகர் சமுதாயத்தை உலக பூர்வ குடியினர் பட்டியலில் இடம்பெற செய்தது. அதற்கான அறிவிப்பு சான்றிதழை, படுகர் இன தலைவர் அய்யாரு, நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து வழங்கினர்.
விவசாய கழிவுகளை எரிப்பதை தடுக்க குழு
- விவசாய கழிவுகளை எரிப்பதை தடுக்க, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, மதன் பி லோக்குர் தலைமையில், ஒரு நபர் குழு அமைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு ஆணையம், ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், லோக்குர் குழுவுக்கு தேவையான உதவிகளையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டும். இந்த குழு, கள நிலவரங்களை ஆய்வு செய்து, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
நியூசிலாந்து பொது தேர்தல்: ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் வெற்றி
- நியூசிலாந்தில் பொதுதேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி நேரடியாக எதிர்கொண்டது. அதில், பிரதமர் ஜெசிந்தாவின் ஆளும் தொழிலாளர் கட்சி 49 சதவிகித ஓட்டுக்களை பெற்று அபார வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி 27 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. பார்லிமென்டில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஜெசிதாவின் ஆளும் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டெர்ன் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.
ரஷ்ய தடுப்பு மருந்தை இந்தியாவில் பரிசோதிக்க ஒப்புதல்
- ரஷ்யா உருவாக்கியுள்ள ‛ஸ்புட்னிக்-வி' தடுப்பு மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதனை செய்ய டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பு(டிசிஜிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், முதலாவதாக ரஷ்யா மட்டும் கொரோனா வைரசுக்கு ‛ஸ்புட்னிக்-வி' என்ற மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது. இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இந்த மருந்து தற்போது 3ம் கட்டமாக 40 ஆயிரம் பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
- இந்த மருந்தை இந்தியாவில் பரிசோதனை செய்யவும், விற்பனை செய்யவும் ரஷ்யாவுடன், இந்தியாவை சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, 10 கோடி டோஸ் மருந்தை டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு ரஷ்யா வழங்கும்.
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்
- இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக 10 ஆண்டுகள் அதிகரித்து உள்ளதாக லான்செட் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 1990ம் ஆண்டு 59.8 ஆக இருந்த சராசரி ஆயுட்காலம் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. லான்செட் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையின் படி, இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1990 ல் 59.6 ஆண்டுகளில் இருந்து 2019 ல் 70.8 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இருப்பினும், கேரளா போன்ற பல மாநிலங்களுக்கிடையில் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கேரளாவில் ஆயுட்காலம் 77.3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. மறுபுறம், உத்தரபிரதேசத்தில் 66.9 ஆண்டுகளாக இருந்தது.
- இந்தியாவில் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருப்பதில் இதய நோய் 5வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது முதலிடத்தில் உள்ளது. மேலும் புற்றுநோய் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 10.67 லட்சம் இதய நோய்களாகவும், உயர் இரத்த அழுத்தம் (10.47 லட்சம் இறப்புகள்), பபுற்றுநோய் (10.23 லட்சம் இறப்புகள்), உணவு பிரச்சனைகள் (10.18 லட்சம் இறப்புகள்), மற்றும் உயர் இரத்த சர்க்கரை அளவு (10.12 லட்சம் இறப்புகள்) காரணமாக உள்ளது.
பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு-பிரதமர் மோடி அறிவிப்பு
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி கடந்த சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது, இது பற்றி ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டுவிழாவையொட்டி, ரூ.75 மதிப்புள்ள நினைவு நாணயத்தை காணொலி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பெண்களின் திருமண வயது, ஊட்டசத்து குறைபாடு, விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து குறிப்பிட்டார்.
குளிர்சாதனப் பெட்டி இறக்குமதிக்கு தடை : மத்திய அரசு அறிவிப்பு
- வெளிநாடுகளில் இருந்து குளிர்சாதனப் பெட்டி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்தியாவில் கிடைக்கும் சில பொருட்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்து வருகிறது. முன்னதாக கார்கள், பேருந்துகள், லாரிகள், பைக்குகளில் பயன்படுத்தப்படும் டயர்கள், டிவி உள்ளிட்ட பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், தற்போது குளிர்சாதனப்பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- இதன்படி ஏர் கண்டிஷனர் எனப்படும் குளிர்சாதனப் பெட்டிகளை இறக்குமதி செய்ய தடை விதித்து, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. ஏர் கண்டிஷனர் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் கம்ப்ரஸர் உள்ளிட்ட பொருள்கள் சீனா மற்றும் தாய்லாந்திலிருந்து சுமார் 90% இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் தற்போது ஏசி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த இரு நாட்டு வர்த்தகமும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பசி குறியீட்டு 2020 பட்டியலில் இந்தியாவுக்கு 94 வது இடம்!
- 2020 ஆம் ஆண்டில், உலகளாவிய பசி குறியீட்டில் 107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது. உலகளாவிய பசி குறியீட்டு 2020 (Global Hunger Index 2020) இல் 107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 27.2 மதிப்பெண்களுடன், இந்தியாவில் பசி அளவு உள்ளது, அது "தீவிரமானது". கடந்த ஆண்டு 117 நாடுகளில் இந்தியாவின் தரவரிசை 102 ஆக இருந்தது.
- இந்த குறியீட்டில், நேபாளம் (73), பாகிஸ்தான் (88), பங்களாதேஷ் (75), இந்தோனேசியா (70) ஆகியவற்றுக்கு பின்னால் இந்தியா இடம்பெற்றுள்ளது. மொத்த 107 நாடுகளில், ருவாண்டா (97), நைஜீரியா (98), ஆப்கானிஸ்தான் (99), லைபீரியா (102), மொசாம்பிக் (103), சாட் (107) உள்ளிட்ட நாடுகள் உட்பட இந்தியாவை விட 13 நாடுகள் மட்டுமே மோசமானவை. அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள்.