தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிடில் ரூ.200 அபராதம்
- தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பொது சுகாதார சட்டத் திருத்தத்தில் உள்ள அபராத விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,
- கரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுவோருக்கு ரூ.550 அபராதம் விதிக்கப்படும்.
- பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
- பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிக்காமல் இருந்தால் ரூ.500 அபராதம்.
- அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத சலூன், ஸ்பா, ஜிம், கடைகளுக்கு ரூ.5,000 அபராதம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 ஆண்டுகளில் மாரடைப்பால் உயிரிழந்தோர் விகிதம் 53% உயர்வு
- நாட்டில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 53 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக்காப்பகத் தரவுகளின்படி இந்தியாவில் 2014 ஆண்டிலிருந்து மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. 2014ஆம் ஆண்டில் மாரடைப்பால் 18 ஆயிரத்து 309 பேர் உயிரிழந்த நிலையில் 2019 ஆண்டில் 28 ஆயிரத்து 5 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து வயதினரிடையும் மாரடைப்பால் உயிரிழக்கும் விகிதம் அதிகரித்துள்ளது. 18 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் 2016ஆம் ஆண்டில் 1940 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிகை 2019ஆம் ஆண்டில் அதிகரித்து 2381ஆக உள்ளது.
- இந்தியாவில் மாரடைப்பால் 2014 ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 309 பேரும், 2015ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 820 பேரும், 2016 ஆம் ஆண்டில் 21 ஆயிரத்து 914 பேரும், 2017ஆம் ஆண்டில் 23 ஆயிரத்து 246 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கையை ஆராய 7 போ் கொண்ட உயா்நிலைக் குழு அமைப்பு
- தேசிய கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளையும், கருத்துகளையும் அரசுக்கு வழங்க உயா்கல்வித் துறை முதன்மை செயலாளா் அபூா்வா தலைமையில் உயா்நிலைக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ‘புதிய கல்விக் கொள்கையில் இருந்து தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்க உயா்கல்வித் துறை முதன்மை செயலாளா் அபூா்வா தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்படுகிறது.
- இந்தக் குழுவில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்கள் எஸ்.பி.தியாகராஜன், பி.துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் கே.பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் என்.ராஜேந்திரன், மதுரை காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் எம்.கிருஷ்ணன், திருவள்ளுவா் பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.தாமரைச்செல்வி ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்க கூடாது: இந்திய கோரிக்கையை ஏற்றது ரஷ்யா
- 'பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யக் கூடாது என்ற இந்தியாவின் கோரிக்கையை, ரஷ்யா ஏற்றுக் கொண்டுள்ளது. எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், எஸ்.சி. ஓ., நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு, நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, ராணுவ அமைச்சர், ராஜ்நாத்சிங் தலைமையிலான குழு, ரஷ்யாவுக்கு சென்றுள்ளது.
- ராஜ்நாத்சிங், ரஷ்ய ராணுவ அமைச்சர் மேஜர் ஜெனரல் சோயிகுவை சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ய கூடாது என, ரஷ்ய ராணுவ அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இதை ஏற்றுக் கொண்ட ரஷ்ய அமைச்சர் சோயிகு, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை ரஷ்யா சப்ளை செய்யாது என, உறுதியளித்தார்.
- இந்த சந்திப்பை தொடர்ந்து, ஏ.கே.47 ரக துப்பாக்கிகளின்,அதி நவீன வடிவமான. ஏ.கே.47 - 203 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தையை, இந்தியாவும், ரஷ்யாவும் இறுதி செய்துள்ளன. இந்திய ராணுவத்துக்கு, ஏழு லட்சத்து, 70 ஆயிரம் துப்பாக்கிகள் தேவைப்படுகின்றன. இவற்றில், ஒரு லட்சம் துப்பாக்கிகள் இறக்குமதி செய்யப்படும். மீதி துப்பாக்கிகளை, உத்தரபிரதேசத்தில் உள்ள கொர்வா ஆயுத உற்பத்தி தொழிற்சாலையில், இந்தியா - -ரஷ்யா கூட்டாக தயாரிக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
31 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்த இந்திய நிறுவனங்கள்
- கொரோனா ஊரடங்கு பாதிப்பால் இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்த நிலையிலும், 2020ம் ஆண்டில் பங்கு வெளியீடு மூலம் 31 பில்லியன் டாலர் முதலீட்டை இந்திய நிறுவனங்கள் ஈர்த்து சாதனை படைத்துள்ளன. நடப்பு நிதியாண்டில் ஜூன் மாதத்தோடு நிறைவடைந்த முதல் காலாண்டில், இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி மைனஸ் 23.9 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. 1980ம் ஆண்டில் இருந்து மிக மோசமான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்ற நிலைக்கு தள்ளியுள்ளது.
வங்க கடலில் இந்திய-ரஷ்ய கடற்படைகள் கூட்டுப்பயிற்சி
- கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்திய கடற்படையும், ரஷ்ய கடற்படையும் இணைந்து ஆண்டு தோறும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதற்கு முன் கடைசியாக 2018-ம் ஆண்டு விசாகப்பட்டினம் கடல் பகுதியில் கூட்டுப்பயிற்சி நடத்தின.இந்திய-ரஷ்ய கடற்படைகளின் 11-வது கூட்டுப்பயிற்சி வங்காள விரிகுடா கடல் பகுதியில் நேற்று தொடங்கியது. ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி சோய்கு அழைப்பின் பேரில் இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றுள்ள நிலையில் இந்த பயிற்சி தொடங்கியது.
- 'இந்திரா நேவி-2020' என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சியில் ஏவுகணை அழிப்பு கப்பல் ரன்விஜய், சக்தி உள்ளிட்ட போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் கலந்துகொள்கின்றன. ரஷ்ய தரப்பில் அட்மிரல் வினோக்ராதோவ், அட்மிரல் டிரிபட்ஸ், போரிஸ் புடோமா போர்க்கப்பல்கள் பங்கேற்று உள்ளன.
அசாமில் ரூ.1000 கோடியில் சுய வேலைவாய்ப்பு திட்டம் தொடக்கம்
- அசாமில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டாலும், மறுபுறம், மாநில இளைஞர்கள் / தொழிலாளர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த அசாம் அரசு பல்வேறு நடவடிக்கையை செயல்படுத்தி வருகிறது. ரூ,1000 கோடி மதிப்புடன் சுய வேலைவாய்ப்பு திட்டத்தை மாநில அரசு துவங்கி உள்ளது. சுவாமி விவேகானந்தர் அசாம் இளைஞர் அதிகாரமளித்தல் (Swami Vivekananda Assam Youth Empowerment (SVAYEM)) என அழைக்கப்படும் இந்த திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு வணிக முயற்சிகளைத் தொடங்க தலா ரூ.50,000 வரை பணமாக வழங்கும்.
செப்டம்பர் 7-ல் கல்விக்கொள்கை மாநாடு: கவர்னர்களுக்கு அழைப்பு
- கல்விகொள்கை குறித்து செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டிற்கு கவர்னர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்வி கொள்கை குறித்து கவர்னர்களிடம் ஆலோசனை கேட்கபட உள்ளது.இம்மாநாட்டில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு,கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் கலந்து கொள்ளும் இம்மாநாடு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறுகிறது.
'சிந்து சமவெளி நாகரிகம் அழிய பருவநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம்': ஆய்வில் தகவல்
- இந்திய வம்சாவளி அறிவியல் ஆய்வாளர் நிஷாந்த் மாலிக், அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் தொழில்நுட்ப கழகத்தில் ஆய்வாளராக உள்ளார். இவர், கடந்த 5,700 ஆண்டுகளுக்கு உண்டான தரவுகளை ஆய்வு செய்வதன் மூலம், 'பருவநிலை மாற்றம் பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் அழிவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்' என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதுகுறித்து ஆய்வாளர் நிஷாந்த் மாலிக் தெரிவித்துள்ளதாவது:
- சிந்து சமவெளி நாகரீகம் ஏன் அழிந்தது என்பதற்கு இந்தோ - ஆரியர்கள் என்ற நாடோடிகளின் ஊடுருவலே காரணம் என்பது உட்பட பல கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டும் ஆராயப்பட்டும் வருகின்றன. பூகம்பமும் ஒரு காரணமாக சொல்லப்பட்டன. ஆனால் பருவநிலை மாற்றம் அதன் அழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று இந்த கண்டுபிடிப்பு, அந்த கோட்பாடு ஆய்வுகளின் வரிசையில் தற்போது இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தினம் - செப்டம்பர் 05
- ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். சிறந்த கல்வியாளராகவும், தத்துவ மேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால், பெருமை என கூறினார்.
- சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், 1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.
- 1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.
Post a Comment