அரபிக் கடலில் இந்திய, ஜப்பான் கடற்படைகள் கூட்டுப்பயிற்சி நிறைவு
- அரபிக் கடலில் இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. ஜிமெக்ஸ் என்றழைக்கப்படும் இந்த போர் ஒத்திகைப் பயிற்சி கடந்த சனிக்கிழமை செப்., 26 துவங்கியது. வடக்கு அரபிக்கடல் பகுதியில் நடந்த இப்பயிற்சியின் நான்காவது கட்டத்தில் இரு நாட்டினைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் பங்கேற்றன. இந்தியாவின் சென்னை தர்க்காஷ், தீபக் போர்க்கப்பல்களும், ஜப்பான் நாட்டின் இகாசுச்சி, காகா போர்க்கப்பல்கள் மூன்று நாள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. பயிற்சி செப்டம்பர் 28-டன் நிறைவு பெறுகிறது. 5ம் கட்டப் பயிற்சி வரும் அக்டோபர் மாதம் விசாகப்பட்டினம் அருகே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள மத்திய அரசின் புதிய வலைதளம்
- நாட்டில் கரோனா தொற்று பரவல், தடுப்பு நடவடிக்கை, கரோனா தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவை தொடா்பான விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் புதிய வலைதளத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தொடக்கி வைத்தாா். இந்த வலைதளத்தில் கரோனா தடுப்பூசிகள் தொடா்பான சமகால ஆராய்ச்சி மற்றும் சோதனைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இந்தியா-டென்மாா்க் உச்சி மாநாடு: பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் விவகாரங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு
- பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்களில் இருநாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா-டென்மாா்க் உச்சிமாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இந்தியா-டென்மாா்க் இடையிலான உச்சிமாநாடு காணொலி முறையில் நடைபெற்றது. இதில் டென்மாா்க் பிரதமா் மெட்டே பிரெட்ரிக்சனுடனான பேச்சுவாா்த்தையின்போது பிரதமா் மோடி கூறியதாவது: ஜனநாயக மதிப்பீடுகள், ஒப்புக்கொண்ட விதிகள் மற்றும் நெறிமுறைகளின்படி கூட்டாகப் பணிபுரிதல், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைக்க வேண்டிய தேவையை கடந்த சில மாதங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளது.
- சரக்கு மற்றும் சேவைகளின் உலகளாவிய விநியோகத்தில் ஒருவரை அதிக அளவில் சாா்ந்திருந்தால் என்ன ஆபத்து ஏற்படும் என்பதை கரோனா தொற்று புலப்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு சரக்கு மற்றும் சேவைகள் விநியோகத்தை பன்முகப்படுத்துவதற்கான பணிகளில் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து இந்தியா பணிபுரிந்து வருகிறது.
- பேச்சுவாா்த்தையை தொடா்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், நீா்வளம், நீடித்த நகா் மேம்பாடு, வணிகம், வேளாண்மை, கடல் வாணிபம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. அரசியல் ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார உறவுகளை விஸ்தரிக்கவும், உலகளாவிய பிரச்னைகளை எதிா்கொள்வதில் இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தவும் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடு இருதரப்புக்கும் பயனளிக்கும். இதுதவிர, உலக வா்த்தக அமைப்பில் விரிவான சீா்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு பங்காற்றவும் இருநாட்டு தலைவா்கள் ஒப்புக்கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.
டிராய் தலைவராக பி.டி.வாகேலா நியமனம்
- இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணைய (டிராய்) தலைவராக மூத்த அதிகாரி பி.டி.வாகேலா நியமிக்கப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக மத்திய பணியாளா் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், ‘கடந்த 1986-ஆம் ஆண்டின் குஜராத் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான பி.டி.வாகேலா மருந்துகள் துறை செயலராக உள்ளாா். அவா் டிராய் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். அந்தப் பதவியில் அவா் 3 ஆண்டுகள் வரையோ அல்லது அவா் 65 வயதை எட்டும் வரையோ நீடிப்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது டிராய் தலைவராக உள்ள ஆா்.எஸ்.சா்மா ஓய்வுபெற உள்ளாா். இதையடுத்து அந்தப் பதவிக்கு பி.டி.வாகேலா நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
- ஜம்மு-காஷ்மீரில் ஹிந்தி, காஷ்மீரி, டோக்ரி ஆகியவற்றை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும் ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ஏற்கெனவே ஆங்கிலமும், உருதுவும் அலுவல் மொழிகளாக உள்ளன. தற்போது, மேலும் 3 மொழிகள் அலுவல்கள் மொழிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
- முன்னதாக, மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்தின்போது பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி, "ஜம்மு-காஷ்மீரில் 74 சதவிகிதத்தினர் காஷ்மீரியையும், டோக்ரியையும் பேசுகிறார்கள். ஹிந்தியை 2.3 சதவிகிதத்தினரும், உருதுவை 0.16 சதவிகிதத்தினரும் பேசுகிறார்கள். எனவே, மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்கள் பேசும் மொழிகள், அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன" என்றார்.
வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
- மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் மசோதாக்கள் (வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா) கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து தற்போது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
'கோவிஷீல்டு' சோதனை சென்னையில் துவக்கம்
- ஆக்ஸ்போர்ட் பல்கலை தயாரித்துள்ள, 'கோவிஷீல்டு' தடுப்பூசி பரிசோதனை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரித்த, 'கோவாக்சின்' தடுப்பூசி, இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது.
- இந்நிலையில், பிரிட்டனின், ஆக்ஸ்போர்டு பல்கலை தயாரித்துள்ள, கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை, இந்தியாவில் துவக்கப்பட்டுள்ளது.ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த, 'சீரம்' நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் இணைந்து உருவாக்கிய இந்த தடுப்பூசியை, 'ஆஸ்ட்ரா ஜெனகா' நிறுவனம் தயாரிக்க உள்ளது.கொரோனா தடுப்பூசியை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதியை, மத்திய அரசு வழங்கி உள்ளது.
- அதன்படி, 17 நகரங்களில், 1,600 பேரிடம் சோதனை நடத்தப்பட உள்ளது.சென்னையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக, 300 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இரண்டு தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு, சோதனை நேற்று துவங்கியது. அதேபோல, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் இந்த சோதனை துவக்கப்பட்டுள்ளது.
சென்னையில் என்.ஐ.ஏ., அலுவலகம்; உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
- சென்னையில் என்.ஐ.ஏ., கிளை அலுவலகம் திறக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. சமீப காலமாக நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இது தொடர்பான வழக்குகளை கையாளும் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளை அலுவலகங்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஒன்பது நகரங்களில் இயங்குகின்றன. இந்நிலையில் சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சியில் என்.ஐ.ஏ. அமைப்பின் கிளை அலுவலகங்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
'வீடியோ கான்பரன்சில்' ஜி - 20 நாடுகள் மாநாடு
- கொரோனா பரவல் காரணமாக, 'ஜி - 20' நாடுகளின் மாநாடு, முதல் முறையாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நவம்பர், 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. சர்வதேச நிதி ஆதாரங்களின் நிலை குறித்து ஆலோசிக்க, இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட, 19 நாடுகள் ஒருங்கிணைந்து, 'ஜி - 20' நாடுகள் கூட்டமைப்பினை உருவாக்கின. இதன் மாநாடு ஆண்டு தோறும் நடக்கும். கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு நடுவே, 'ஜி - 20' நாடுகளின் மாநாடு நவம்பர், 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் முதன் முறையாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற உள்ளது.
- இதில், நம் நாட்டின் சார்பில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.இந்த மாநாட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து, ஜி - 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைவரும், சவுதி அரேபிய மன்னருமான, பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர், சமீபத்தில் கலந்துரையாடினர்.இந்த மாநாட்டில், 21ம் நுாற்றாண்டின் வாய்ப்புகளை அனைவரும் உணர்தல் என்ற அம்சம், அடிப்படை கொள்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment