அருணாச்சல பிரதேசத்தில் மாயமான 5 வாலிபர்களையும் நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது சீனா
- அருணாச்சல பிரதேசத்தில் மாயமான ஐந்து வாலிபர்கள், தங்கள் பகுதியில் உள்ளதாக சீன ராணுவம் தெரிவித்திருந்த நிலையில், செப்டம்பர் 12, 2020 அன்று இந்தியாவிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளது. வாச்சா அருகிலுள்ள கிபித்து எல்லையில், அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசின் திட்டம் ; அமைச்சர் நிதின் கட்கரி
- இந்திய பொருளாதார நிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை வலுப்படுத்தவும், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு திட்டங்களை அறிவித்தார். நிதி ஆயோக்கின் முன்முயற்சியான "Arise Atal New India Challenge" என்னும் திட்டத்தை பாராட்டினார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் (MSME ) 5 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. உபரி அரிசியை எத்தனால் உற்பத்தியில் பயன்படுத்தினால் இலாபம் அதிகம் கிடைக்கும். இதனால் சேமிப்பு கிடங்கில் வைப்பதால் ஏற்படும் பிரச்சனை குறையும் என்பதோடு, சுற்றுசூழலை மாசுபடுத்தாத எரிபொருளூம் நாட்டிற்கு கிடைக்கும் என்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் (MSME ) 5 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
50,000 கி.மீ., தூரத்திற்கு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டம்
- 50 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ‛InvIT' எனப்படும் கட்டமபை்பு முதலீட்டு அறக்கட்டளையின் சார்பாக டில்லியில் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சக செயலர் கிரிதர் அமரனே இத்தகவலை தெரிவித்தார். ‛இந்த சாலைகள் 4 அல்லது 6 வழிச்சாலைகளாக அமைக்கப்படும். இச்சாலைகளில் பல இடங்களில் சுங்கச்சாவடிகள் நிறுவப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவேஅனுமதி வழங்கியுள்ளது.'
தமிழகத்தில் காவிரி படுகையில் மீதமுள்ள எண்ணெய் கிணறுகளை தோண்ட மேலும் 3 ஆண்டுகளுக்கு அனுமதி: மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை
- காவிரி டெல்டா பகுதிகளில் மீதமுள்ள எண்ணெய் கிணறுகளின் பணியை முடிக்க, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்,’ என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் பூமிக்கு அடியில் அதிகப்படியான எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயுவும் உள்ள பகுதிகளில், தமிழகத்தில் உள்ள காவிரிப் படுகையும் ஒன்றாகும். இங்கு, எண்ணெய், இயற்கை எரிவாயுவை எடுக்கும் பணியை 30 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு தொடங்கி விட்டது.
- தமிழக காவிரி படுகையில் 24 இடங்களில் எண்ணெய்கிணறுகளை தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அதன் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாலடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டம்: இந்தியா - சீனா முடிவு
- மாஸ்கோ சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும் 11.09.2020 அன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டது. இது தொடர்பாக இருதரப்பும் ஏற்றுக் கொண்ட கூட்டறிக்கையை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ள 5 அம்சங்கள் வருமாறு:
- இந்திய - சீன உறவை பலப்படுத்த இருநாட்டு தலைவர்களும் ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தங்களை மதித்து, இரு நாட்டு வீரர்களும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றி, பதற்றம் ஏற்படாத வகையில் ரோந்து செல்ல வேண்டும்.
- எல்லையில் பதற்றம் நிலவுவதை இருநாடுகளும் விரும்பவில்லை. எனவே, இருநாடுகளும் தங்கள் படைகளை வாபஸ் பெற்று, எல்லையில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும்.
- எல்லை தொடர்பாக இரு நாடுகளும் பல கொள்கைகளை வகுத்து வைத்துள்ளன. அந்த ஒப்பந்தங்கள் மதிக்கப்பட வேண்டும்.
- எல்லையில் ஏற்படும் பிரச்னைகள், இருநாட்டு உறவை பாதித்து விடக் கூடாது. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயல வேண்டும்.
- எல்லையில் நிலைமை சீரான பிறகு, புதிய நம்பிக்கையை கட்டமைக்கும் வகையில், அமைதி, சமாதானம் நிலவும் முயற்சிகளை இருதரப்பும் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
23 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்
- விடுமுறை இன்றி குறுகிய கால தொடராக நடத்தப்படும் இந்த நாடாளுமன்ற தொடரில் 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் 11 மசோதாக்கள், அவசர சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்படும் மசோதாக்கள் ஆகும். இந்த அவசர சட்டத்துக்கான மாற்று மசோதாக்களில் முக்கியமாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபடும் சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதலை தடுக்கும் மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி, மேற்படி பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 7 ஆண்டு சிறையும், ரூ.5 லட்சம் அபராதம் வரை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.
- ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதா இந்த தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாப்படி காஷ்மீரில் உருது மற்றும் ஆங்கிலத்துடன், காஷ்மீரி, டோக்ரி மற்றும் இந்தி ஆகிய மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்கப்படும்.
- மேலும் மனிதர்களே மலம் அள்ளுவதற்கு தடை விதிக்கும் மசோதாவும் இந்த தொடரில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கழிவு நீர் கால்வாய்களை எந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்தவும், அதில் நடைபெறும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கவும் வழிவகை செய்யப்படும்.
லடாக் எல்லை பாதுகாப்பு பணிக்கு தமிழக போலீசாருக்கு அழைப்பு
- இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக, லடாக் எல்லைப் பகுதியில் பிரச்சினை நிலவிவருகிறது. தற்போதும் அங்கு இருதரப்புகளும் படைகளை குவித்துள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக மாநிலங்களில் இருந்து போலீஸ் படைகளுக்கும் உள்துறை அமைச்சகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் மொத்தம் சென்னை, ஆவடி உள்பட 15 இடங்களில் போலீஸ் பட்டாலியன் பிரிவு உள்ளது.
- ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில் ஒரு மாத காலம் பணியாற்ற ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 போலீசார்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தங்களுடைய குழுமங்களில் பணியுரியும் போலீசார்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ளவர்களிடம் இருந்து ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில் பணிபுரிய விருப்பம் கோரப்பட்டு, அவ்வாறு விருப்பம் தெரிவிப்பவர்களின் விவரத்தினை உடனடியாக அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. விருப்பம் தெரிவிக்கும் நபர்கள் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணிக்கு பணி நியமனம் செய்து அனுப்பப்படுவார்கள்.
Post a Comment