தினக்கூலி மற்றும் விவசாயிகளின் தற்கொலை விகிதமே அதிகம்
- 2019-ஆம் ஆண்டு நிலவரப்படி தினக்கூலி மற்றும் விவசாயத்தை சேர்ந்த 43,000 பேர் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்றப்பதிவு பணியகம் தெரிவித்துள்ளது. 32,563 தினக்கூலி தொழிலாளர்கள் வருவாயின்றி தற்கொலை செய்துகொண்டனர். நாட்டின் மொத்த தற்கொலையில் 23.4 சதவிகிதத்தினர் தினக்கூலிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு 30,132 தினக்கூலிகள் தற்கொலை செய்துகொண்டதாக பதிவாகியுள்ளது.
- இதேபோன்று விவசாயத்துறையில் 10,281 தற்கொலைகள் பதிவாகியுள்ளது. இதில் 5,957 விவசாயிகளும், 4,324 விவசாய கூலிகளும் அடங்குவதாக தேசிய குற்றப்பதிவு பணியகம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் மொத்த தற்கொலை விகிதத்தில் 7.4 சதவிகிதமாக உள்ளது. மேலும் தற்கொலை செய்துகொண்ட 5,957 விவசாயிகளில் 3,749 ஆண்கள், 575 பெண்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இதில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவாக 38.2 சதவிகித விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் 19.4 சதவிகிதத்தினரும், ஆந்திரத்தில் 10 சதவிகிதத்தினரும், மத்தியப்பிரதேசத்தில் 5.3 சதவிகிதத்தினரும், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவில் 4.9 சதவிகித விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டதாக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் பப்ஜி உள்பட மேலும் 118 செயலிகளுக்குத் தடை
- ஏற்கெனவே 59 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கொள்கை விதிகளை மீறியதாக 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதில், டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், கேம் ஸ்கேனர், வீ சாட் உள்ளிட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய செயலிகளும் அடங்கும்.
- இதையடுத்து, ஏற்கெனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிரபல ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, வீ சாட், லூடோ, ஆப் லாக், கிளீனர்- போன் பூஸ்டர், எம்.வி.மாஸ்டர், ஆப் லாக் என மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதா 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் உருது, காஷ்மீரி, டோக்ரி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகள் அலுவல் மொழிகளாகவுள்ளன. பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இது செய்யப்பட்டுள்ளதாக பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். மேலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் 02.09.2020 அன்று நடைபெற்றது.
இந்திய வானியலாளர்கள் கண்டறிந்த தொலைதூரப் பால்வெளி: நாசா பாராட்டு
- பூமியிலிருந்து 93 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர பால்வெளி மண்டலத்தைக் கண்டுடித்து இந்திய வானவியலாளர்கள் சாதனை படைத்துள்ளனர். புணே வானியல் ஆய்வு நிறுவனத்தின் டாக்டர் கனக் சஹா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பூமியிலிருந்து 93 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர பால்வெளியைக் கண்டறிந்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட்ட ஆஸ்ட்ரோசாட் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் மூலம் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாகி உள்ளது. ”இந்திய விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பு நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே செல்கிறோம், ஒளி எப்படி உருவானது போன்ற கேள்விகளுக்கு விடை காண உதவும்.” என அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.
தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி தற்கொலையில் : தமிழகம் 2வது இடம்
- இந்தியா முழுவதும் 2019 ஆம் ஆண்டு 1,39,123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் 50 சதவீத தற்கொலைகள் 5 மாநிலங்களில் நடந்துள்ளது. மாகாராஷ்டிர முதலிடத்திலும் (18,916), தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 12,665 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும், குடும்பமாக தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
- இந்திய அளவில் தற்கொலை அதிகம் நடக்கும் நகரங்களில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. 2019 ஆம் ஆண்டில் மட்டும் சென்னையில் 2461 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்தாண்டில் மட்டும் 10,281 விவசாயிகள் உள்பட 42,480 கூலித்தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொள்பவர்களில் 15 சதவீதம் பேர் வீட்டில் இருக்கும் பெண்கள் என கூறியுள்ளனர். இந்திய அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே வாரியத்திற்கு முதன்முறையாக சி.இ.ஓ நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்
- ரயில் மறு சீரமைப்பினை மேம்படுத்த ரயில்வே வாரியத்தின் சி.இ.ஓ.,வாக வி.கே. யாதவை நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கர்மயோகி திட்டம் உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரயில்வே வாரியத்திற்கு முதன்முறையாக சி.இ.ஓ., பதவியை ஏற்படுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் மறு சீரமைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
- இதன்படி தற்போது ரயில்வே வாரியத்திற்கு சி.இ.ஓ., பதவி நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே வாரியத்தின் தற்போதைய தலைவராக உள்ள வினோத் குமார் யாதவ், ரயில்வாரியத்தின் முதல் சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். ரயி்லவே வரலாற்றில் இது புதிய முயற்சி என கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
உலகின் புதுமையான பொருளாதாரங்கள்: முதல் முறையாக 50-வது இடத்தில் இந்தியா!
- உலகின் புதுமையான பொருளாதாரங்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 4 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 50 இடத்திற்குள் வந்துள்ளது. உலக அறிவுசார் சொத்து நிறுவனம் ஆண்டுதோறும் உலக புதுமை குறியீடு என்ற ஒன்றை வெளியிடுகிறது. உலக நாடுகளை அதன் புதுமையான நடவடிக்கைகள், சூழல்கள் மற்றும் விளைவுகள் ஆகியவற்றை கொண்டு இதில் தரவரிசைப் படுத்துகின்றனர். இந்த குறியீடு 131 நாடுகளின் பொருளாதார பலங்கள், பலவீனங்களை அலசுகிறது. புதன்கிழமை வெளியிடப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான குறியீட்டில் இந்தியா முதல் முறையாக 50 நாடுகளுக்குள் இடம்பிடித்துள்ளது.மத்திய மற்றும் தெற்காசியா பிராந்தியத்தில் மிக உயர்ந்த இடத்தைப் இந்தியா பிடித்துள்ளது.
- மேலும் 2019-ல் இருந்ததை விட நான்கு இடங்கள் முன்னேறி இந்தியா உலகின் மூன்றாவது மிக புதுமையான குறைந்த நடுத்தர வருமான பொருளாதாரமாக மாறியுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த குறியீட்டில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகியவை உள்ளன. சீனா 14-வது இடத்தில் உள்ளது. ஜி.ஐ.ஐ., குறியீட்டில் முதல் 30 நாடுகளில் இடம்பெற்றுள்ள ஒரே நடுத்தர வருமான கொண்ட நாடு சீனாவாகும்.
கர்மயோகி திட்டம் - அரசு பணிகளின் சீர்த்திருத்தத்திற்கான நடவடிக்கை
- நாடு தழுவிய அளவில் அரசு அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான 'கர்மயோகி' எனும் திட்டத்திற்கு பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் 'கர்மயோகி' திட்டமும் ஒன்று. இது அதிகாரப் பூர்வமாக, 'சிவில் சர்வீசஸ் திறன் மேம்பாட்டுக்கான தேசிய திட்டம்' என்று அழைக்கப்படும். இத்திட்டம் மனிதவள நிர்வாகத்தை மாற்றியமைக்க உருவாக்கப்பட்டுள்ளது. 'விதிகள் அடிப்படையிலான' நடைமுறைகளுக்கு பதிலாக 'பணிகள் அடிப்படையிலான' நடைமுறையை உருவாக்குவதே இதன் நோக்கம் என பணியாளர் மற்றும் பயிற்சி துறை கூறியுள்ளது.
- 'இந்தத் திட்டம் ஒரு அரசு ஊழியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த அரசாங்கத்தின் பார்வையை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய அரசு ஊழியர், உலகின் சவால்களை எதிர்கொள்ள, புதுமையான முற்போக்கான மற்றும் ஆற்றல்மிக்கவராக இருக்க வேண்டும், மேலும் தொழில்நுட்பத்தை இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், 'இது போன்ற பயிற்சிகளுக்காக மத்திய அரசு திறன் மேம்பாட்டு ஆணையத்தை அமைக்கும். இந்த ஆணையம் பயிற்சியாளர்கள் மற்றும் தேவையான வளங்களை பயிற்சி நிறுவனங்களுக்கு வழங்கும். அதன் செயல்பாட்டை மேற்பார்வையிடும்.
ஆஸியில் 30 ஆண்டுகளுக்குப் பின் பொருளாதார மந்த நிலை
- ஆஸியில் கொரோனா தொற்று காரணமாக 30 ஆண்டுகளுக்குப் பின் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. 1991ம் ஆண்டிற்குப் பிறகு அங்கு பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச்., மாதத்திற்குப் பிறகு 10 லட்சம் பேர் ஆஸியில் வேலையிழந்துள்ளனர். இதனால் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ 16 லட்சம் கோடி மதிப்பிலான ஊக்குவிப்பு திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் அணு ஆயுதங்களை இரு மடங்காக்க சீனா திட்டம்
- சீனா தனது அணு ஆயுதங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இருமடங்காகப் பெருக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை பென்டகன் எச்சரித்துள்ளது.தென்சீனக் கடலில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பு, தைவானுக்கு அமெரிக்க ஆதரவு ஆகியவற்றால் சீனா, அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனாவின் படைவலிமை, அணு ஆயுதங்களைப் பெருக்குதல் ஆகியவை குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சீனா முதன்மையான பகுதிகளில் தனது படை வலிமையை அமெரிக்காவுக்குச் சமமாகவோ, அதைவிட அதிகமாகவோ பெருக்கியுள்ளது. அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இருமடங்காக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் அடுத்த அதிரடி: சீன கலாசார மையங்களை மூட முடிவு
- 'சீன அரசின் நிதியுதவி பெறும் நிறுவனங்கள் உளவாளிகளை உருவாக்குகின்றன. இதனால், அமெரிக்க பல்கலைகளில் உள்ள சீன 'கன்பூசியஸ்' என்ற கலாசார மையங்கள் இந்தாண்டுக்குள் மூடப்படும்' என, வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அதிரடியாக அறிவித்துள்ளார். சீனா தங்கள் நாட்டின் மொழி, கலாசாரம், பெருமைகளை உலக நாடுகளில் பரப்புவதற்காக கன்பூசியஸ் கல்வி நிறுவனம் என்ற ஒன்றை 2004ம் ஆண்டில் தொடங்கியது. சீன தத்துவ அறிஞர் பெயரிலான அந்நிறுவனம், உலக நாடுகளில் உள்ள 160 பல்கலைக்கழங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனம் அமெரிக்க பல்கலைக்கழங்கள் பலவற்றிலும் இயங்கி வருகின்றன. அவை அனைத்தையும் இந்தாண்டுக்குள் இழுத்து மூடுவோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்.