புற்றுநோயை வெல்வோம்! இன்று 'ரோஜா நாள்
- இந்த நாளைப் புற்றுநோயுற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நாளாக உலகம் நினைவு கூர்கிறது. நாள்கணக்கில், வாரக்கணக்கில் அழகுடன் சிரிக்கும் மொட்டவிழாத ரோஜா மலர்கள் உருவாக்கப்படும் காலம் இது. அவற்றைப் போல நீங்களும் நீண்டகாலம் மகிழ்வுடன் வாழலாம் எனும் நம்பிக்கைச் செய்தி சொல்லும் நாள் என இதற்குப் புதிய பொருளும் கொள்ளலாம்.
- இந்த 'ரோஸ் டே' புற்றுநோயாளிகளின் நலனைச் சிந்தித்து, நம்பிக்கையூட்டும் ஒரே நாளாகக் கழிந்து போகாமல், தொடர்ந்து புற்றுநோய் விழிப்புணர்வு, வழிகாட்டுதல் முறைகள், வாழ்வுமுறை மாற்றம், கூட்டு மருத்துவம், மக்கள் மருத்துவமனைகள் உருவாக்கம், நம்பிக்கைக் குழுக்கள் உருவாக்கம் என அனைத்தையும் ஆண்டு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ள உறுதியேற்கும் நாளாக்குவோம்… புற்றுநோயை வெல்வோம்…
மெக்னீஸியம் பயன்படுத்தி எலும்பு முறிவுக்கு சிகிச்சை: ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடிப்பு
- சென்னை ஐஐடியின் உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியா் முகேஷ் டோபிள் தலைமையிலான குழுவினா், நானோ தொழில்நுட்பம் கொண்டு மெக்னீஸியம் பூசப்பட்ட உலோக கலவையைப் பயன்படுத்தி, எலும்பு முறிவு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனா். அதனை முதலில் முயலுக்கு ஏற்பட்ட எலும்பு முறிவை சரிசெய்து, பரிசோதனை செய்துள்ளனா். இந்த முறையில் சென்னை ஐஐடி வெற்றி அடைந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் மருத்துவ முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக ஆடு அல்லது செம்மறி ஆடு போன்ற பெரிய விலங்குகளின் எலும்பு முறிவுகளைச் சரிசெய்வதில், புதிதாக உருவாக்கப்பட்ட நானோ தொழில்நுட்பத்திலான மெக்னீசியம் உலோக கலவையைப் பயன்படுத்தி பரிசோதனை செய்ய உள்ளனா்.
- இதைத் தொடா்ந்து, மனிதா்களுக்கும் இந்த முறையில் சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனா். இந்த ஆராய்ச்சி முடிவுகள், சா்வதேச நானோ மருத்துவ ஆராய்ச்சி இதழில் பிரசுரிக்கப்பட்டதோடு, இந்த மருந்துகளுக்கான காப்புரிமையும் பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கத் தடையை ஐ.நா. ஆதரிக்காது: குட்டெரெஸ் திட்டவட்டம்
- ஈரான் மீதான ஐ.நா. பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமலுக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதை ஐ.நா. ஆதரிக்காது என்று அந்த அமைப்பின் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
வரலாற்றில் முதல்முறை, போர்க்கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டர்களை இயக்கும் பெண் விமானிகள்
- ஹெலிகாப்டர்களை போர்க்கப்பல் தளத்தில் இருந்து இயக்கப் போகும் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த முதல் பெண் விமானிகள் என்ற பெருமையை உதவி - லியுடெனன்ட் குமுதினி தியாகி மற்றும் உதவி லியுடெனன்ட் ரித்தி சிங் பெறுகிறார்கள். இந்திய கடற்படையின் கண்காணிப்புப் பிரிவில் இவ்விரண்டு பெண் அதிகாரிகளும் தேர்ச்சி பெற்றதற்கான நிகழ்ச்சி ஐஎன்எஸ் கருடா போர்க்கப்பல் தளத்தில் நடைபெற்றது. கணினி அறிவியல் பாடத்தில் பொறியியல் பட்டதாரிகளான பெண் அதிகாரிகள் இருவரும், 2018-ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைந்தனர்.
திருச்சியில் 'கேடயம்' செயல் திட்டம் தொடக்கம்
- திருச்சி சரக காவல்துறை மற்றும் இண்டர்னேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து திருச்சி சரகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் (திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை) உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் “கேடயம்” என்ற செயல் திட்டம் தொடங்கப்பட்டது.
உலகின் நீளமான அடல் சுரங்கப்பாதை: அக்டோபர் 3-ல் மோடி திறப்பு
- ஹிமாச்சல பிரதேசத்தில் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில், 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது, உலகிலேயே, நெடுஞ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மிக நீளமான சுரங்கம் ஆகும்.
- கடந்த 10 ஆண்டுகளக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இந்த சாலை வழியாக மணாலியில் இருந்து லே செல்லும் துாரத்தில், 46 கி.மீ., குறைவதுடன், நான்கு மணி நேர, பயண நேரம் சேமிக்கப்படும். இச்சுரங்கப்பாதைக்கு அடல் என பெயரிடப்பட்டுள்ளது. இச்சுரங்கப்பாதை அக்டோபர் 3-ம் தேதி போக்குவரத்திற்கு திறக்கப்படும். இதனை பிரதமர் மோடி அக்டோபர் 3-ல் திறந்து வைக்கிறார் என ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
- இந்த சுரங்கப் பாதை அகலம், 10.5 மீ., இருபுறமும் தலா, 1 மீட்டர் அகல நடைபாதை உள்ளது. ஒவ்வொரு, 60 மீட்டர் இடைவெளியில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு, 500 மீட்டர் துாரத்திலும், அவசர கால வெளியேறும் வழி அமைந்துள்ளது.
ஆந்திராவில் புதிய ‛ஏபி போலீஸ் சேவா' செயலி: ஜெகன் மோகன் துவக்கி வைப்பு
- ஆந்திராவில் புதிய போலீஸ் சேவை செயலியை மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி துவக்கி வைத்தார். ‛ஏபி போலீஸ் சேவா' என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த செயலி மூலமாக பொதுமக்கள் புகார்களை பதிவு செய்ய இயலும் அதற்கான ரசீதினையும் பெற முடியும். இந்த செயலி மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் தலைமை நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.
- பொதுமக்கள் 87 வகையான போலீஸ் சேவைகளை போலீஸ் நிலையத்திற்கு போகாமலேயே பெற முடியும். தேவைப்படும் பட்சத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக் டுவிட்டர் மூலமாக வீடியோ கால்களையும் அவசர காலங்களில் பயன்படுத்த முடியும் முதல் தகவல் அறிக்கை, இ-சலான், பாஸ்போர்ட் விண்ணப்பம் போன்றவற்றின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளவும் முடியும். பெண்களுக்கென 12 சேவைகள் இந்த செயலியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசத்தில் பிலிம் சிட்டிக்கு 1000 ஏக்கர் நிலத்தை அரசு வழங்குகிறது
- உத்திரபிரதேசத்தில் பிலிம் சிட்டிக்கு 1000 ஏக்கர் நிலத்தை வழங்குவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உ.பி.,யின் கவுதம் புத்த நகரில் இந்தியாவின் "மிகப் பெரிய மற்றும் அழகான" திரைப்பட நகரத்தை ( Film City ) அமைப்பதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து, அழைப்பைக் கவனத்தில் கொண்டு, யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் [Yamuna Expressway Industrial Development Authority (( YEIDA)] திரைப்பட நகரத்தை நிறுவுவதற்கான திட்டத்தை மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது.
தமிழக பொருளாதாரம் மேம்படும்; ரங்கராஜன்
- கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தமிழகத்தில் பல்வேறு துறைகள் பாதிப்படைந்தன. இதனை சீரமைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார வல்லுனர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய உயர்நிலை குழுவை தமிழக அரசு அமைத்து இருந்தது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையிலான 24 பேர் கொண்ட இந்த குழு பலமுறை ஆலோசனை மேற்கொண்டது. இதனையடுத்து தமிழக பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கான தங்களது கருத்துகள் அடங்கிய அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தலைமைச் செயலகத்தில் தாக்கல் செய்தார்.
- தமிழகத்தின் பொருளாதார நிலை, இரண்டு மாதங்களில், கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும். 2020-21ல் பொருளாதார வளர்ச்சி 1.71 சதவீதமாக இருக்கும் எனவும், சரிவு ஏற்படலாம் எனவும் கணித்துள்ளோம். வருமானம் குறைந்து, செலவு அதிகரிப்பதால், அரசின் கடன் சுமை அதிகரிக்கும். வருவாய் பற்றாக்குறையும் அதிகரிக்கும். சுகாதாரத் துறைக்கு கூடுதலாக, 5,000 கோடி ரூபாய் செலவிட பரிந்துரைத்துள்ளோம். கட்டுமானத்துறை வசம் உள்ள, 3,200 கோடி ரூபாயை செலவிடவும், நகர்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் பரிந்துரைத்துள்ளோம். வரியை அதிகரிக்க எந்த பரிந்துரையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா
- சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணம் ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, சீனா தனது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ‘ஹையாங்2சி’ என்ற அந்த செயற்கைக்கோள் ‘லாங் மார்ச் 4பி’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது சீனா விண்ணுக்கு அனுப்பிய 3-வது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.
- இந்த புதிய செயற்கைக் கோள் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா தனது கப்பல் ஏவுதளத்திலிருந்து ஒரே ராக்கெட்டில் 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி ஓபனை வென்று ஜோகோவிச் புதிய சாதனை
- இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), டியாகோ ஸ்வாட்ஸ்மனை (அர்ஜென்டினா) வீழ்த்தி 5-வது முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றினார். இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் வகை டென்னிஸ் போட்டியாகும்.
- இத்தகைய போட்டியில் ஜோகோவிச் ருசித்த 36-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் ஆயிரம் தரவரிசை புள்ளி வழங்கும் மாஸ்டர்ஸ் போட்டியில் அதிக பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை ஸ்பெயினின் ரபெல் நடாலிடம் (35 பட்டம்) இருந்து ஜோகோவிச் தட்டிப்பறித்தார்.
இத்தாலி ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப் சாம்பியன்
- பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கரோலினா பிளிஸ்கோவாவுக்கு (செக்குடியரசு) எதிராக சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-0, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது இடது தொடையில் ஏற்பட்ட காயத்தால் பிளிஸ்கோவா விலகினார். இதனால் வெற்றிக்கனியை பறித்த ஹாலெப் முதல்முறையாக இத்தாலி ஓபனில் மகுடம் சூடினார்.
மின்சாரம், சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் ஆட்டோக்கள்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தின்போது துபாயில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக ரூ.100 கோடி முதலீட்டில், சுமார் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், துபாயின் ‘எம்-ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- இதன் தொடர்ச்சியாக, தற்போது, ‘எம்-ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி’ நிறுவனம் ரூ.140 கோடி முதலீட்டில் சுமார் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களில் புதிய ஆட்டோக்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்த புதிய ஆட்டோக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஆட்டோக்களில் கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். வசதி, ஆபத்து பொத்தான் போன்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ‘எம்-எலக்ட்ரிக்’ ஆட்டோக்களின் ஓட்டுநர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
3,501 நடமாடும் ரேஷன் கடைகள்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
- ரூ.9½ கோடியில் 3,501 நகரும் நியாயவிலை கடைகளையும் (நடமாடும் ரேஷன் கடைகள்), திருச்சி மாவட்ட மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 24-2-2014 அன்று சென்னையில் நகரும் நியாயவிலை கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
- மக்கள் எளிதில் அணுக இயலாத பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தற்போது 48 நகரும் நியாயவிலை கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றது.
Post a Comment