குவைத்தில் முதல்முறையாக பெண் நீதிபதிகள் நியமனம்
- குவைத் நாட்டில் முதல்முறையாக 8 பெண்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக புதிதாக 54 பேர் நியமிக்கப்பட்டனர். அதில், 8 பெண்கள் அடங்குவர். குவைத் மகளிர் கலாச்சார மற்றும் சமூக சங்கத்தின் தலைவரான லுல்வா சலேஹ் அல் முல்லா கூறுகையில், நீதிபதிகளாக பணியாற்றுவதற்காக பெண்களின் உரிமைக்காக தனது அமைப்பு நீண்ட காலமாக போராடி வருகின்றது. இந்த நியமனங்கள் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது, மேலும் நாடு அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகிறது என்று நம்புகிறேன் என கூறினார். குவைத்தில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை மற்றும் அரசியல் பதவிக்கு போட்டியிட 2005-ம் ஆண்டு உரிமைக் கிடைத்த நிலையில், தற்போது நீதித்துறையிலும் உரிமைக் கிடைத்துள்ளது.
ஓமனின் அரசுப் பணியில் அதிகளவு இந்தியர்கள்
- ஓமன் நாட்டு பொதுப் பணித்துறையில் உள்ள வெளிநாட்டினர்களில் அதிகளவு இந்தியர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானின் மாநில புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல் தேசிய மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ஓமன் அரசாங்கப் பணியில் உள்ள 2,29,386 பேரில் 34,000 பேர் வெளிநாட்டினர்கள் உள்ளனர்.
- அதில், அதிகபட்சமாக 12,453 இந்தியர்கள், 9,631 எகிப்தியர்கள், 1,325 பாகிஸ்தானியர்கள் ஆகிய நாட்டினர்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளனர். ஓமானின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 50 லட்சம் பேரில் 20 லட்சம் பேர் வெளிநாட்டினர்கள் உள்ளனர். அவர்களில் குறைந்தது 8 லட்சம் இந்திய தொழிலாளர்கள் மற்றும் 2.5 லட்ச பாகிஸ்தானியர்கள் உள்ளனர்.
ஆசிரியர் தினத்தில் உதயமானது புதுச்சேரியில் புதிய பல்கலைக்கழகம்
- புதுச்சேரி பொறியியல் கல்லூரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டு சனிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. புதுச்சேரியில் ஏற்கெனவே மத்தியப் பல்கலைக்கழகம் இருந்தாலும் தற்போது தொடங்கப்பட உள்ள தொழில்நுட்பப் பல்கலைக்கழகமே புதுச்சேரியின் முதல் மாநிலப் பல்கலைக்கழகமாகும். தற்போது புதுச்சேரியின் முதல் மாநிலப் பல்கலைக்கழகமாகத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் விளங்கும். இது மத்திய பல்கலைக்கழகத்தைச் சாராமல் தனித்துச் செயல்பட முடியும்.
- அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளன. இவை, இனி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும். பல்கலைக்கழகப் பணிக்காக, ரூ.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக ரூ.28.75 கோடி தரப்பட்டு, புதுச்சேரி பொறியியல் கல்லுாரி வளாகத்தில் புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
சீனாவிடம் நீர்மூழ்கிக்கப்பல்கள் வாங்குவதை தாமதப்படுத்திய தாய்லாந்து
- இந்தியாவுடன் கடல்பரப்பை பகிர்ந்து கொள்ளும் அண்டைநாடான தாய்லாந்து, சீனாவிடம் இருந்து இரண்டு நீர்மூழ்கிக்கப்பல்களை வாங்கும் திட்டத்தை தாமதப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, சீனாவிடமிருந்து முதல் நாடாக, மூன்று நீர்மூழ்கி கப்பல்களை 724 மில்லியன் டாலருக்கு வாங்குவதற்கு 2017ல் ஒப்பந்தத்தை தாய்லாந்து அரசு இறுதி செய்தது. இதன்படி, முதல் நீர்மூழ்கி கப்பல் வரும் 2023ல் தாய்லாந்திடம் ஒப்படைக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் குறித்து பொதுமக்கள், சமூகவலைதளங்களில் தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இரண்டு கூடுதல் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதில் தாமதத்தை பரிசீலிக்குமாறு பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா, கடற்படையிடம் கோரியுள்ளதாக தாய்லாந்து அரசின் செய்தி தொடர்பாளர் அனுச்சா புரபச்சாய்ஸ்ரி அறிவித்தார்.
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாறும் நிறுவனங்களுக்கு மானியம்: ஜப்பான்
- சீனாவில் செயல்படும் ஜப்பானிய நிறுவனங்கள், தங்களது தொழிற்சாலைகளை இந்தியா, வங்கதேசத்திற்கு மாற்றி கொண்டால் மானியம் வழங்கப்படும் என ஜப்பானிய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் செயல்படும் ஜப்பானை சேர்ந்த நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு இடமாற்ற ஜப்பான் அரசு விரும்புகிறது. இதற்காக மானியம் அளிக்க முன்வந்துள்ளது. அதில், ஜப்பான் நிறுவனங்கள், மானியம் பெறுவதற்கு மாற வேண்டிய ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும், வங்கதேசமும் இடம்பெற்றுள்ளன.
- இதன் மூலம் சீனாவில் இருந்து வெளியேற விரும்பும் ஜப்பானிய நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ரசாயனம், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட நிறுவனங்கள், பயன்பெறும். அதேநேரத்தில் ஜப்பானிய முதலீடு செய்வதற்கு ஏதுவான வழிகளை எளிமைபடுத்தும் வகையில் இந்தியா எடுக்க உள்ள நடவடிக்கைகளையும் ஜப்பான் கவனித்து வருகிறது.
எளிதாக தொழில் நடத்த உகந்த மாநிலங்களில் ஆந்திரா முதல் இடம்
- இந்தியாவில் எளிதாக தொழில் நடத்துவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதல் இடம் வகிக்கிறது. 12-வது இடத்திலிருந்த உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது. இரண்டாம் இடத்திலிருந்த தெலங்கானா மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகம் ஒரு இடம் முன்னேறி 14-வது இடத்துக்கு வந்துள்ளது. கட்டுமான அனுமதி, தொழிலாளர்கள் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பதிவு, தகவல்கள் அணுகல், நிலம் கிடைக்கும் தன்மை, ஒற்றைச்சாளர அனுமதி என பல அம்சங்களின் அடிப்படையில் ஆராயப்பட்டு எளிதாக தொழில் நடத்துவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இந்த பட்டியலில் ஆந்திரா முதல் இடம் வகிக்கிறது. 2018-ம் ஆண்டும், ஆந்திராதான் முதல் இடத்தை பெற்றிருந்தது. இரண்டாவது இடம், உத்தரபிரதேச மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. மூன்றாவது இடத்தில் தெலுங்கானா உள்ளது. 4-வது இடம் மத்திய பிரதேசத்துக்கும், 5-வது இடம் ஜார்கண்டுக்கும், 6-வது இடம் சத்தீஷ்காருக்கும், 7-வது இடம் இமாசலபிரதேசத்துக்கும், 8-வது இடம் ராஜஸ்தானுக்கும், 9-வது இடம் மேற்கு வங்காளத்துக்கும், 10-வது இடம் குஜராத்துக்கும் கிடைத்துள்ளது.
- தமிழகத்துக்கு இந்த தர வரிசை பட்டியலில் 14-வது இடம் கிடைத்திருக்கிறது. பட்டியலில் கடைசி இடமான 29-வது இடத்தில் அருணாசலபிரதேசம், சண்டிகார், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், திரிபுரா ஆகியவை உள்ளன.
ஐ.பி.எஸ். பயிற்சி நிறைவுநாள் அணிவகுப்பு சிறந்த பயிற்சியாளராக தமிழ்நாட்டை சேர்ந்த விஜய் சங்கர் தேர்வு
- தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் 28 பெண்கள் உள்பட 131 இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் 42 வார அடிப்படை பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சிறந்த பயிற்சியாளராக தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான வி.காமராஜாவின் மகன் கே.விஜய் சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இதற்காக அவருக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கவுரவ வாள் பரிசளிக்கப்பட்டது. மேலும் விஜய் சங்கர் பயிற்சியில் காட்டிய பல்வேறு திறமைகளுக்காக அவருக்கு 6 சுழற் கோப்பைகள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜய் சங்கருக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.
வங்கதேசத்திலிருந்து திரிபுராவுக்கு படகு போக்குவரத்து
- வங்கதேசத்திலிருந்து திரிபுராவுக்கு, படகு போக்குவரத்து வெள்ளோட்டம் துவங்கியது.திரிபுரா மாநிலத்தில் இருந்து, வங்க தேசத்துக்கு, நீர்வழிப் போக்குவரத்தை துவங்க, மத்திய நீர்வழி போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சகம் திட்டமிட்டது. இதற்காக, 47 கோடி ரூபாய் செலவில், அவுரா மற்றும் கோமதி ஆறுகளை, வங்கதேசத்தின் மேக்னா நதியுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நதிகளை ஆழப்படுத்தி, படகு போக்குவரத்து துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- இந்தப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, படகு போக்குரவத்துக்கான வெள்ளோட்டம், 3ம் தேதி துவங்கியது. வங்கதேசத்தின் தவுட்கண்டியிலிருந்து, 50 மெட்ரிக் டன் சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, திரிபுராவின் சோனாமுரா பகுதிக்கு படகு புறப்பட்டது.
- இந்தப் படகு, நேற்று சோனாமுராவை வந்தடைந்தது. 90 கிலோ மீட்டர் துாரம் கொண்ட, இந்த நீர் வழிதடத்தில், 89.5 கிலோ மீட்டர் துாரம், வங்கதேசத்திலும், மீதி, 500 மீட்டர் துாரம், இந்தியாவிலும் உள்ளது.
47 பேருக்கு நல்லாசிரியர் விருது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
- இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியும், மிகச் சிறந்த கல்வியாளருமான, சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.ஆசிரியர் தினத்தன்று, கல்வித் துறையில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு, ஜனாதிபதி, தேசிய நல்லாசிரியர் விருது வழங்குவார். 'டிஜிட்டல்' முறைஇந்தாண்டு, கொரோனா பிரச்னையால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, 47 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சுலபமாக கணக்கு போடும் முறையை அறிமுகப்படுத்தியது, கல்வி கற்பித்தலில் புதுமையை புகுத்தியது போன்ற சாதனைகளுக்காக, இவ்விருது கள் வழங்கப்பட்டன.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை 10 மடங்கு அதிகம் குவித்துள்ள ஈரான்
- ஈரானில் மூடப்பட்டுள்ள இரண்டு அணுக்கரு தளத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் 10 மடங்கு அதிகம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை கூறியுள்ளது. ஒப்பந்தப்படி ஈரான் 200 கிலோ அளவிற்கு தான் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால் அதை விட 10 மடங்கு அதிகம் வைத்துள்ளது. சுற்றுச்சூழல் மாதிரிகளை எடுக்க அனுமதி தந்துள்ளது. அணுசக்தி முகமை ஆய்வகத்தில் அவை பரிசோதிக்கப்பட்ட பின்பே எந்த அளவு செறிவூட்டப்பட்டது என்பது தெரியும்.
- அமெரிக்க அணுசக்தி நிபுணர்கள் கூற்றுப்படி, 3 முதல் 5 சதவீத அளவிற்கு குறை செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்றால் மின்சார பயன்பாட்டிற்கும், 1,050 கிலோ யுரேனியத்தை 90% செறிவூட்டினால் அணு ஆயுதங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். ஆனால் 90% அளவிற்கு செறிவூட்ட நீண்ட காலம் ஆகும் என்கின்றனர்.
4 நாடுகளில் பஞ்சம் ஏற்படும் அபாயம் ; ஐ.நா பொதுச்செயலாளர் எச்சரிக்கை
- போரால் பாதிக்கப்பட்ட 4 நாடுகளில் பஞ்சம் ஏற்பட அபாயம் உள்ளதாக ஐ.நா சபை பொதுச் செயலாளர் குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். உள்நாட்டு போர் நடந்து வரும் ஏமன், காங்கோ, வடகிழக்கு நைஜீரியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய உணவு நெருக்கடிக்கு ஆளாகக்கூடும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment