கரோனாவால் 2021-இல் 4.7 கோடி பெண்கள் வறுமைக்கு தள்ளப்படுவர்: ஐநா தகவல்
- கரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் உலக அளவில் 2021ஆம் ஆண்டில் 4.7 கோடி பெண்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர் என்று ஐக்கிய நாடுகள் அவை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் 2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.6 கோடி மக்கள் வறுமை நிலைக்கு செல்வர் என ஐக்கிய நாடுகளின் அவை தெரிவித்துள்ளது. இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
- மேலும் அந்த அறிக்கையில் 2019- 2021 ஆண்டில் பெண்களின் வறுமை விகிதம் 2.7 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொற்றுநோய் காரணமாக வறுமை நிலை 9.1 சதவீதம் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தீவிர வறுமையில் வாழும் மொத்த பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கையை 43.5 கோடியாக உயர்த்தும் என்றும் இந்த நிலை 2030 வரை தொடரும் என்றும் ஐநா அவை கவலை தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் தொற்றுநோய்க்கு முந்தைய பெண் வறுமை விகிதம் 2021 ஆம் ஆண்டில் 10 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது, ஆனால் இப்போது அது 13 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, பெண்களின் வேலைவாய்ப்பு ஆண்களை விட 19 சதவீதம் அதிக ஆபத்தில் உள்ளது" என்று ஐ.நா. மகளிர் நிர்வாக இயக்குநர் பம்ஸைல் மலாம்போ-என்குகா தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ்: 50 சிந்தனையாளர்கள் பட்டியலில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் முதலிடம்
- பிரபல பிரிட்டிஷ் பத்திரிகை ப்ராஸ்பெக்ட் வெளியிட்டுள்ள கரோனாவை திறம்பட கையாண்ட 50 பேர் கொண்ட பட்டியலில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் முதலிடம் பிடித்துள்ளார்.ஷைலஜா டீச்சரை கரோனா காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட சிந்தனையாளர் என அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை நிர்வகிப்பதில் கேரளம் தொடர்ந்து ஒரு உத்வேகமாக உள்ளது எனத் தெரிவித்துள்ள அந்தப் பத்திரிகை ஜனவரி மாதத்தில் கரோனா தொற்று சீனாவில் பரவலான போது, அதன் தவிர்க்க முடியாத வருகையை துல்லியமாக கணித்தது மட்டுமல்லாமல் அதன் தாக்கங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டவர் என ஷைலஜா டீச்சரைப் பாராட்டியுள்ளது. ஷைலஜா டீச்சரைத் தொடர்ந்து நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
ஆந்திரத்தில் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை
- இளைஞர்களை தவறான பாதையில் தள்ளும் ரம்மி, போக்கர் போன்ற இணைய விளையாட்டுகளை தடை செய்ய உள்ளதாக ஆந்திர அரசு 03.09.2020 அன்று தெரிவித்துள்ளது. ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டியின் தலைமையில் கூடிய மாநில அமைச்சரவை கூட்டத்தில் இணைய விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இணைய சூதாட்டம் இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்துகிறது. அதனால், இணையத்தில் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை தடை செய்ய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்படும் விளையாட்டை விளையாடுபவர்களுக்கு முதல் தடவை அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாம் முறை விளையாடினால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் .
6 ஆண்டுகளில் 2,006 பாதுகாப்புப் படை வீரர்கள் விபத்தில் பலி
- மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் படை வீரர்கள் 104 பேர் 2019-ம் ஆண்டும், 2,006 பேர் கடந்த 6 ஆண்டுகளிலும் விபத்தில் பலியாகியுள்ளனர் என தேசிய குற்றவியல் காப்பகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படை வீரர்கள் 2019-ம் ஆண்டில் மட்டும் 104 பேர் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதில், 14 பேர் பணியின்போது எதிரிகள் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த 6 ஆண்டுகளில் மத்திய பாதுகாப்புப் படையில் உள்ள 2,006 வீரர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அதில், அதிகபட்சமாக 2014 ஆம் ஆண்டு 1,232 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
- மத்திய அமைச்சகத்தின் கீழ் மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை, சாஸ்திர சீமா பால், அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஆகிய 7 படைகள் உள்ளது. இந்தப் படைகளில் 9,23,800 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் எல்லைப் பாதுகாப்பு, மத்திய மற்றும் மாநிலங்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் துபையில் தங்குவதற்கு ‘ஓய்வு விசா’ அறிமுகம்
- துபையில் முதல்முறையாக 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு விசா என்ற புதிய நுழைவு இசைவுத் திட்டத்தை பிரதமர் ஷேக் முகமது அறிவித்தார். ‘துபையில் ஓய்வு பெறுதல்’ என்ற திட்டத்தின் கீழ் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் துபையில் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இந்த நுழைவு இசைவிற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் வலைத்தளம் (retireindubai.com) மூலம் விண்ணப்பிக்கலாம்.
- இந்த நுழைவு இசைவைப் பெறுவதற்கு நிபந்தனைகளாக, ஓய்வு பெற்ற பின் மாதந்தோறும் ரூ.4 லட்சம் முதலீடுகள் அல்லது ஓய்வூதியம் மூலம் வருமானம் பெறவேண்டும் அல்லது வங்கிகளில் ரூ.2 கோடி சேமிப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் அல்லது துபையில் ரூ.4 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விதவைப் பெண்களுக்கு கணவரின் சொத்தில் சம உரிமை: வங்கதேசம்
- வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த விதவைகள் கணவரின் சொத்துக்களில் பங்குபெற தகுதியுடையவர்கள் என்று வங்கதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- இதற்கு முன்பு இந்து விதவைகள் கணவரது வீட்டின் மீது மட்டுமே உரிமை கொண்டவர்களாகவும், நிலம் உள்ளிட்ட சொத்துகளுக்கு உரிமை மறுக்கப்பட்டும் வந்தது. இதனிடையே உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம்
- ப்ளூம்பெர்க் நிறுவனம் 2020-ம் ஆண்டுக்கான உலகின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமேசான் சி.இ.ஓ ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கென்சி ஸ்காட், 6,800 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார பெண்மணிகளில் முதலிடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் முதலிடத்திலிருந்த 'லோரியால்' அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தின் வாரிசுதாரர் பிரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் 6,600 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் 1 முதல் கொரோனா தடுப்பூசி விநியோகிக்க திட்டம்
- மாநில கவர்னர்களுக்கு, அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய இயக்குனர், நவம்பர் முதல் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி விநியோகிக்க தயார் நிலையில் இருக்கும் படி கடிதம் எழுதியுள்ளார்.
'தி கிளீன் நெட்வொர்க்' திட்டத்தில் இணைய இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு
- தற்போது அமெரிக்கா 'தி கிளீன் நெட்வொர்க்' என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதாவது தனிநபர் மற்றும் அரசு வாடிக்கையாளர் தகவல்களை திருடாத, நம்பகமான ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., தளங்களில் இயங்கும் செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கி அமெரிக்கா தனது நட்பு நாடுகளை இதில் இணையுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது இந்தியாவும் 'தி கிளீன் நெட்வொர்க்' திட்டத்தில் இணைய அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
ஆக்கிரமிப்பு சீனாவுக்கு பதிலடி; 4 கி.மீ., உள்ளே புகுந்தது இந்திய ராணுவம்
- கடந்த 1962-ல் நடந்த போரின் போது, கிழக்கு லடாக்கில் எதார்த்த கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே, ரெக்கின் கணவாய் பகுதியை சீனாவிடம் இந்தியா இழந்தது. இந்நிலையில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்திவந்த ரெக்கின் கணவாய்ப் பகுதியில், 4 கி.மீ., தூரத்துக்கு இந்தியப் படைகள் முன்னேறி உள்ளதாகவும் அப்பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- 'இந்த ரெக்கின் கணவாய் பகுதிகள் இந்திய ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வந்தால், அதன் பக்கவாட்டில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமும், மலைப்பாதையில் பயணிப்பதன் மூலமும், இந்திய ராணுவ வீரர்கள் ஸ்பாங்கூரில் உள்ள சீன முகாம்களையும் அழித்தொழிக்க முடியும்' என, ராணுவ வீரர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment