ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல்: கர்நாடகா,கேரளா முதலிடம்
- இந்தியாவில் ஸ்டார்ப் அப் தொழில்களை ஊக்குவித்து சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம் எனப்படும் புது நிறுவனங்களை தொடங்குவதற்கான சூழலுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு, மாநிலங்களின் இந்த தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டுக்கான பட்டியலை மத்திய வர்த்தகம், தொழில்கள் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார்.
- இதில், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் முதலிடத்தை பிடித்துள்ளது. குஜராத் மாநிலம் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கான சிறந்த தலைமைகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, பீஹார், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. தொடக்க கண்டுபிடிப்பாளர்களுக்கு வசதிகள் மற்றும் பிற வசதிகளை வழங்குவதில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- ஸ்டார்ட் - அப் ஈகோ சிஸ்டத்தில் வளர்ந்துவரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம், ஆந்திர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், டில்லி, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், இமாசலப் பிரதேசம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
- கடந்த ஆண்டு புதிய தொழில் தொடங்குவதற்கான தரவரிசையில், வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கான தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான சிறந்த மாநிலமாக குஜராத் இடம் பெற்றது. அத்துடன் கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை சிறந்த மாநிலமாக தெரிவிக்கப்பட்டன.
அமெரிக்கா மாலத்தீவு இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம்
- இந்திய பெருங்கடல் பகுதியில், சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அமெரிக்கா - மாலத்தீவு இடையே, ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அண்டை நாடான சீனா, இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீன கடல்பகுதியில், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மாலத்தீவுக்குக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதுகுறித்து, அமெரிக்க ராணுவ தலைமையகமான 'பென்டகன்', நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்கா - மாலத்தீவு இடையே, கடந்த, 10ம் தேதி, ராணுவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், அமெரிக்க ராணுவ அமைச்சகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான, துணை அமைச்சர் ரீட் வெர்னரும், மாலத்தீவு ராணுவ அமைச்சர் மரியா திதியும் கையெழுத்திட்டனர்.
உலகப் பெரும்பணக்காரர்கள் வரிசையில் அமேசான் நிறுவனர் முதலிடம்; முகேஷ் அம்பானி 5ம் இடம்
- அமெரிக்காவின் புளூம்பெர்க் நிறுவனம் உலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் இந்திய மதிப்பில் ரூ 13 லட்சத்து 52 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். 5ம் இடத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ 6 லட்சத்து 53 ஆயிரம் கோடியாக உள்ளது.
- உலக அளவில் இரண்டாம் இடத்தில் மைக்ரோ சாஃப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ 8 லட்சத்து 96 ஆயிரம் கோடியாக உள்ளது. ரூ 7 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பர்க் மூன்றாம் இடத்தில் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் ஆர் மஸ்க் ரூ 6 லட்சத்து 72 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
பஞ்சாப்பில் மாநில ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் துவக்கம் ; முதல்வர் அம்ரீந்தர் சிங்
- பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் மாநிலம் முழுவதும் 1.41 கோடி பயனாளிகளை உள்ளடக்கும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தை தொடங்கினார். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் National Food Security Act (NFSA) கீழ் வராத 9 லட்சம் பயனாளிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்கான தனி மாநில நிதியுதவி திட்டத்தையும் முதல்வர் அறிவித்தார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை இப்போது 1.50 கோடியாக உயரும். இதன் கீழ் இந்த மாதத்தில் 37.5 லட்சம் கார்டுகள் தகுதியான பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும். மேலும் அதிகபட்ச பயனாளிகளை இந்த மையம் 1.41 கோடியாக உயர்த்தியுள்ளது
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு; தமிழகத்துக்கு ரூ.335 கோடி
- மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழகம் உள்ளிட்ட, 14 மாநிலங்களுக்கு, ஆறாவது தவணையாக, 6,195 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழகத்துக்கு மட்டும், 335 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், மாநிலங்களின் வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, தவணை முறையில் மத்திய அரசு நிதியை விடுவித்து வருகிறது.
- இந்நிலையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட, 14 மாநிலங்களுக்கு ஆறாவது தவணையாக, 6,195 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்துக்கு, 335.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த, 14 மாநிலங்களில், அதிகபட்சமாக கேரளாவுக்கு, 1,276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
46 ஆண்டுகளில் 68% குறைந்த வன உயிர்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
- சமீபத்தில் உலக வனவிலங்கு அமைப்பு (டபிள்யூ.டபிள்யூ.எஃப்) மேற்கொண்ட ஆய்வில் உலக அளவில் குறையும் வன உயிர்களின் எண்ணிக்கையானது மனித வாழ்வில் ஏற்படுத்தும் அபாயகரமான விளைவுகளுக்குக் காரணமாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. வன உயிர்களின் அழிவானது மனித வாழ்வின் ஆரோக்கியம் உள்ளிட்ட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ள இந்த ஆய்வு 1970ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை உலகில் 68% வன உயிர்கள் அழிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இதேகாலத்தில் நன்னீர் வாழ்விடங்களில் காணப்படும் உயிர்களின் எண்ணிக்கை 84 சதவீதம் சரிவை சந்தித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
Post a Comment