‘வந்தே பாரத்’ திட்டம் மூலம் 13.74 லட்சம் பேர் நாடு திரும்பினர்
- கரோனா தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிய 13.74 லட்சம் இந்தியர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா தொற்று காரணமாக உலகளவில் பயணக் கட்டுபாடு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்தவர்களை மீட்க தொடங்கப்பட்டது தான் வந்தே பாரத் திட்டம். இந்தத் திட்டம் தற்போது 6-ம் கட்டத்தில் உள்ளது. இது செப்டம்பர் 1-ல் தொடங்கி அக்டோபர் 24 வரை 1,007 சர்வதேச விமானங்களில் 2 லட்சம் பேரை இந்தியாவிற்கு அழைத்து வரவுள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கும் இதய நோய் இறப்புகள்: உலக சுகாதார நிறுவனம்
- இதயநோய்களைக் கட்டுப்படுத்த உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த செய்திக்குறிப்பை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது. அதில் இதய நோய்களைக் கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என உலக சுகாதார நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
- தொழில்துறை ரீதியாக உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் கொழுப்பு நிறைந்த பொருட்களால் ஏற்படும் இதய நோய் காரணமாக ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் இறப்புகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
- பங்களாதேஷ், பூட்டான், ஈக்வடார், எகிப்து, இந்தியா, ஈரான், மெக்ஸிகோ, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளில் அதிகரித்து வரும் இதய நோய்களுக்குக் காரணமான கொழுப்பு சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 53 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிகப்பெரிய பன்றிப் பண்ணை மேகாலயாவில் தொடக்கம்
- இந்தியாவின் மிகப்பெரிய பன்றி இறைச்சிப் பண்ணையை ரூ. 209 கோடி மதிப்பில் மேகாலயாவில் 10.09.2020 அன்று மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் கைலாஷ் செளத்ரி தொடங்கி வைத்தார். தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ‘ஆத்ம நிர்பார்’ திட்டத்தின் கீழ் ஒதுக்கிய ரூ. 209 கோடியில் உருவாக்கப்பட்ட பன்றிப் பண்ணையின் மூலம் மேகாலயாவில் பன்றி இறைச்சி தன்னிறைவு பெறும். தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த பண்னை மூலம் 35 ஆயிரம் பன்றி விவசாயிகள் பயனடைவார்கள். இதன்மூலம், புதிதாக 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். மேலும், 300 முதன்மை வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு நிரந்தர வருமானம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக கரோனா தடுப்பூசி சோதனை நிறுத்திவைப்பு
- கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி, 3-ஆவது கட்ட சோதனையின்போது பக்கவிளைவை ஏற்படுத்தியதால், அந்த மருந்தின் சோதனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
- ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்து பரிசோதனை, இந்தியாவிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்க புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அமைப்பு ஒப்பந்தம் போட்டிருந்தது.
இந்தியாவுடன் பணியாற்ற உஸ்பெகிஸ்தான் சம்மதம்
- எஸ்.சி.ஓ., எனப்படும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான மாநாடு, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாஸ்கோ வந்துள்ளார். மாநாட்டிற்கு மத்தியில், மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லாசிஸ் காமிலோவை, நேற்று ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். அப்போது, பிராந்திய விவகாரங்களில், இருதரப்பும் ஒன்றிணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டதாக, ஜெய்சங்கர், தெரிவித்தார்.
வீடுகளுக்கு ஒலி கவசம் பொருத்தும் சிங்கப்பூர்
- பரபரப்பான நகரத்துக்கு மத்தியில் உள்ள வீடுகள், போக்குவரத்து, கட்டுமான பணிகள் போன்றவற்றால் ஒலிமாசை எதிர்கொள்வதால் அவற்றை தடுக்க வீடுகளுக்கு ஒலி கவசம் அமைக்கும் புதிய தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் கண்டுபிடித்துள்ளது. சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் ஒலியை உருவாக்கி ஒலியை தடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். சிங்கப்பூரில் சிறிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வேகமான ரயில்கள், விமானங்கள், கார் ஒலிப்பான்கள் போன்றவற்றால் இரைச்சலை எந்நேரமும் இரைச்சலை எதிர்கொள்வதாக கூறியுள்ளனர். அவர்களுக்காக யோசித்து இந்த ஒலி கவசத்திற்கான புதிய தொழில்நுட்பத்தை நான்யாங் பல்கலை., ஆய்வு குழு முயற்சித்துள்ளது.
- இந்த ஒலி கவசம் 24 ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது, அவற்றை குடியிருப்பில் உள்ள ஜன்னல்களில் பொருத்துகின்றனர். போக்குவரத்து அல்லது சுரங்கப்பாதை ரயில் போன்ற சத்தம் கண்டறியப்படும்போது ஸ்பீக்கர்கள் ஒலி அலையை உருவாக்கி, இரைச்சலை தடுக்கின்றது. ஹெட்போன்கள் எப்படி வேலை செய்கிறதோ அதே போன்று இவை வேலை செய்கின்றன. இந்த கருவிகள் இருந்தால் ஜன்னலை திறந்தே வைத்திருக்கலாம். உள் வரும் ஒலி அளவு 10 டெசிபல்களாக குறைக்கப்படும்.
ரூ.20,050 கோடியில் மீன் வளத்தை பெருக்கும் திட்டம்: துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
- மீன்வளத் துறைக்கு ஊக்கமளித்து, அடுத்த 4 ஆண்டுகளில் உற்பத்தியை இரு மடங்கு உயர்த்த, ரூ.20,050 கோடி மதிப்பிலான பிரதமர் மீன் வளர்ப்பு மேம்பாட்டு திட்டத்தை, பிரதமர் மோடி துவங்கி வைத்தார். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டு வரை ரூ.20,050 கோடி மீன்வளத் துறையில் முதலீடு செய்யப்படும். மீன்வளத் துறைக்காக இதுவரை செய்யப்பட்ட முதலீடுகளில் அதிகபட்ச தொகை இதுவே' எனக் குறிப்பிட்டார்.
- '2024 - 25ம் ஆண்டில் மீன் உற்பத்தியை 70 லட்சம் டன் கூடுதலாக்குவது; ஏற்றுமதி வருவாயை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்துவது; மீன் வளர்ப்பவர்கள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது; அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை 10 சதவீதமாகக் குறைப்பது; மீன்வளத் துறையில் 55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வது' போன்றவற்றை பிரதமர் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் இலக்காக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க விண்கலத்துக்கு கல்பனா சாவ்லா பெயர் சூட்டல்
- விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களைக் கொண்டு செல்லும் வர்த்தகரீதியான கார்கோ விண்கலத்துக்கு மறைந்த இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- இந்தியாவில் பிறந்து விண்வெளிக்கு சென்ற முதல் பெண் என்ற வரலாறை படைத்தவர் கல்பனா சாவ்லா. கடந்த 2003ம் ஆண்டு பிப்.,01ம் தேதி கொலம்பியாவில் கல்பனா சாவ்லா உள்பட 7 விண்வெளி வீரர்கள் பயணித்த விண்கலம் வானில் வெடித்துச் சிதறியது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் நார்த்ராப் க்ரூம்மான் நிறுவனம், தன்னுடைய அடுத்த விண்கலத்துக்கு ‛எஸ்எஸ் கல்பனா சாவ்லா' எனப் பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
- எங்களின் அடுத்த என்ஜி-14 சைக்னஸ் விண்கலத்துக்கு கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டுவதில் நார்த்ராப் க்ரூம்மேன் நிறுவனம் பெருமைகொள்கிறது. மனிதர்களை சுமந்து செல்லும் விண்கலத்துக்கு முக்கியமான பங்களிப்புகளைச் செய்தவர்களுக்கு மரியாதை அளிப்பது எங்கள் நிறுவனத்தின் பாரம்பரிய வழக்கம்.
2100-ம் ஆண்டு உலக மக்கள்தொகையில் இந்தியா முதலிடம்: ஐ.நா., அறிக்கை
- 'உலக மக்கள்தொகை 2100ம் ஆண்டில் 1,100 கோடியைத் தாண்டும். அதில், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும்' என, ஐ.நா., சபை தெரிவித்துள்ளது.
- மக்கள் தொகையில், சீனா, இந்தியா, அமெரிக்கா என்ற நிலை மாறி, இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற இடத்தை 2100ல் பிடிக்கும். இரண்டாவது, மூன்றாவது இடங்களில் நைஜீரியா, சீனா இடம்பெறும். உலகின் முதல் 10 அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்கு ஆப்பிரிக்க நாடுகள் இடம்பிடிக்கும். இதில் 2100ம் ஆண்டு வாக்கில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு நைஜீரியாவில் 856.3 பேரும், இந்தியாவில் 331.6 பேரும், பாகிஸ்தானில் 281.2 பேரும் வசிக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு ஐ.நா., தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரே ரேஷன் திட்டம்: அக்டோபர் மாதம் முதல்
- தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமலாகிறது. இதற்காக ரேஷன் கடைகளில் 'பயோமெட்ரிக்' எனப்படும் கைரேகை கருவிகள் வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாடு முழுதும் இடம்பெயரும் தொழிலாளர்கள் வசதிக்காக மத்திய அரசு 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
- பிற மாநிலங்களின் கார்டுதாரர்கள் தமிழகத்திலும்; தமிழக கார்டுதாரர்கள் மற்ற மாநிலங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம்.
Post a Comment