ஷாங்காய் உச்சி மாநாடு: ராஜ்நாத்சிங் தலைமையிலான குழு ரஷ்யா செல்கிறது
- எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. 3 நாள் நடைபெறும் இம்மாநாடு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான குழு ரஷ்யா செல்கிறது.செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ரஷியா அழைப்பு விடுத்துள்ளது.
ஆகஸ்டில் ரூ. 86,449 கோடி ஜிஎஸ்டி வசூல்
- ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) முறை மூலம் ரூ. 86,449 கோடி வசூலாகியிருப்பதாக நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தைக் (ரூ. 87,422 கோடி) காட்டிலும் இது ஆயிரம் கோடி ரூபாய் குறைவாகும். இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 98,202 கோடி வசூலாகியுள்ளது.
பிரணாப்பிற்கு சிறப்பு இரங்கல் கூட்டம் நடத்த முடிவு: வங்கதேசம்
- மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி வரும் புதன் கிழமை தில்லியில் சிறப்பு இரங்கல் கூட்டம் நடத்த வங்கதேச உயர்மட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. வங்கதேசத்தில் 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரில் மதிப்புமிக்க பங்காற்றியதற்காக கடந்த 2013-ஆம் ஆண்டு வங்கதேச அரசு சார்பில் பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனிடையே அவரது மறைவையொட்டி தில்லியில் சிறப்பு இரங்கல் கூட்டம் நடைபெறும் என்றும் வங்கதேச உயர்மட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் 44 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழைப்பொழிவு
- இந்தியாவில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை இந்தியாவில் பதிவான ஒட்டுமொத்த மழைப்பொழிவு வழக்கமான இயல்பை விட 10 சதவீதம் அதிகம் என்று ஐஎம்டி திங்களன்று தெரிவித்துள்ளது.
- நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் சராசரி இயல்பை விட 27 சதவீதம் அதிக மழை பெய்தது. இது கடந்த 120 ஆண்டுகளில் பொழிந்த நான்காவது மிக உயர்ந்த அளவு மழைப்பொழிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1926 ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 33 சதவீதம் அதிக மழை பெய்தது. 1976ஆம் ஆண்டு 28.4 சதவீதமும் 1973 ஆகஸ்டில் 27.8 சதவீதமும் அதிக மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. நடப்பாண்டு 27 சதவீதம் மழை பெய்துள்ளது.
- மழைப்பொழிவானது வழக்கமான இயல்பை விட நாட்டின் வடமேற்கு பகுதியில் 9 சதவீதம் குறைவாகவும், மத்திய இந்தியப் பகுதியில் 21 சதவீதம் அதிகமாகவும், தென்பகுதியில் 20 சதவீதம் அதிகமாகவும் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் 2 சதவீதம் அதிகமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் இளைஞர்களைத் தாக்கும் 'நோமோபோபியா'
- நோமோபோபியா' குறைபாடு உள்ள இளம் வயதினருக்கு தூக்கம் மற்றும் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என்று ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயதினர் ஸ்மார்ட்போன் உபயோகிக்க முடியாத நேரத்தில் ஏற்படும் பயம் அல்லது பதற்றமே நோமோபோபியா' எனப்படுகிறது. இது கல்லூரி பருவத்தினரிடையே அதிகம் இருப்பதாகவும், இது ஒருவரது தூக்கத்தை வெகுவாக பாதிக்கிறது என்றும் அமெரிக்கப் பலக்லைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்
- முன்னாள் மத்திய நிதித்துறை செயலா் ராஜீவ் குமாரை தோ்தல் ஆணையராக நியமிக்க குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, 01.09.2020 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதுதொடா்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிக்கையில், அரசமைப்பின் 324-ஆவது பிரிவு உட்பிரிவின்(2)-படி ராஜீவ் குமாரை தோ்தல் ஆணையராக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளாா். அவா் தோ்தல் ஆணையராக பொறுப்பேற்பது முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீநகர் மத்திய ரிசர்வ் காவல் படையின் முதல் பெண் ஐ.ஜி.
- பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஸ்ரீநகரில், மத்திய ரிசர்வ் காவல் படையின் ஐ.ஜி.யாக முதல்முறையாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் இருந்து 1996-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் சாரு சின்ஹா. இவர் தற்போது ஸ்ரீநகர் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
64 ஆண்டுகளை நிறைவு செய்த எல்.ஐ.சி.
- இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி நிறுவனம் தனது 64 வருட பயணத்தை நிறைவு செய்துள்ளது. 1956 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி அப்போதைய பிரதமர் நேரு தலைமையிலான அரசால் எல்ஐசி உருவாக்கப்பட்டது. வெறும் ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்ஐசி நிறுவனம் தற்போது 32 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள மிகப்பெரிய ஆயுள்காப்பீட்டு நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஒரு லட்சம் ஊழியர்கள், கிட்டத்தட்ட 11 லட்சம் முகவர்களுடன் மிகப்பெரிய நிறுவனமாக இயங்கி வரும் எல்ஐசி இந்தியா முழுவதும் தனது காப்பீடு சேவையை விரித்துள்ளது.
அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய கொள்கை இந்தியாவின் துணையின்றி வெற்றி பெறாது; துணை அமைச்சா் தகவல்
- அமெரிக்கா-இந்தியா ஒத்துழைப்பு குழு சாா்பில் கடந்த 31.08.2020 அன்று நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் அந்நாட்டு வெளியுறவுத் துறையின் துணை அமைச்சா் ஸ்டீஃபன் பெய்கன் கூறியதாவது: இந்தோ-பசிபிக் பிராந்திய வளா்ச்சிக்காக அமெரிக்கா வகுத்துள்ள கொள்கையானது இந்தியாவின் உதவியின்றி வெற்றியடையாது என்று தெரிவித்துள்ளாா். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு கடந்த 20 ஆண்டுகளாக வலுவடைந்து வருகிறது. இந்த நல்லுறவு வரும் ஆண்டுகளில் மேலும் வலுவடையும் என்று நம்புகிறோம். பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவை அதிக வலிமை கொண்ட நாடாக மாற்றுவதற்கு உதவி புரிய அமெரிக்கா ஆா்வமுடன் உள்ளது.
- இந்தியா-அமெரிக்கா கடற்படைகளிடையே நடைபெறும் ‘மலபாா்’ கூட்டுப் பயிற்சியில் ஆஸ்திரேலியாவின் கடற்படையையும் இணைக்க இந்தியா ஆா்வம் காட்டி வருவது வரவேற்கத்தக்கது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை நெருங்கிய ஒத்துழைப்பை நல்கி வருகின்றன.
சாலை விபத்துகள்: 2019-ல் 1.54 லட்சம் பேர் பலி
- இரு சக்கர வாகனங்களின் அதிவேகம் காரணமாக 2019-ல் சாலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1.54 லட்சமாக உள்ளது என தேசிய குற்ற பதிவு பணியகம் தெரிவித்து உள்ளது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில், சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களில் 38 சதவீதம் பேர் 'இரு சக்கர வாகனங்களில்' பயணிப்பவர்கள், லாரிகள் அல்லது கார்கள் மற்றும் பஸ்கள் முறையே 14.6 சதவீதம், 13.7 சதவீதம் மற்றும் 5.9 சதவீதம் ஆக உள்ளது. 2.6 சதவீதம் மட்டுமே மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ளது.
- 2019ம் ஆண்டில் மொத்தம் 27 ஆயிரத்து 987 ரயில் விபத்து வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 24,619 பேர் பலியானதாகவும், 3,569 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.ரயில் விபத்துகளில் பெரும்பாலனவை (76.3 சதவீதம்) ரயிலில் இருந்து தவறி விழுதல், மற்றும் ரயில் மோதல் காரணமாக பதிவாகி உள்ளது.
- கடந்த ஆண்டு நாடு முழுவதும் ரயில்வே கிராசிங் விபத்தாக 1,788 வழக்குகள்பதிவாகி உள்ளது. இதில் 851 வழக்குகள் (சுமார் 47.5 சதவீதம்) உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் பதிவாகி உள்ளதாக என். சி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
காஷ்மீர் எல்லையில் கிராமவாசிகளை பாதுகாக்க 8 ஆயிரம் பதுங்கு குழிகள்
- காஷ்மீரின் சர்வதேச எல்லைப்பகுதியில் கிராமவாசிகளின் பாதுகாப்பிற்காக 8 ஆயிரம் பதுங்கு குழிகள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. காஷ்மீரின் கத்துவா உள்ளிட்ட சர்வேதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதில் கிராமவாசிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து எல்லையையொட்டியுள்ள கிராமங்களில் பதுங்குழிகள் அமைக்க திட்டமிடப்பட்டது. எல்லையையொட்டியுள்ள கிராமப்பகுதிகளில் இதுவரை சமுதாய மற்றும் தனிநபர்களுக்கென 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது என்றார்.
பாட்டு பாடும் அரிய வகை நாய்: இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு!
- இந்தோனேசியாவில் உள்ள பப்புவா நியூ கினி காடுகளில், பாட்டு பாடும் அரிய வகை நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாய் என்றாலே குரைத்து ஊரைக் கூட்டும் எனக் கருதப்படும் நிலையில், இந்த அரியவகை பாடும் நாய் கண்டறியப்பட்டுள்ளது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. உலகிலேயே இந்த ரக நாய்கள் 200 தான் உள்ளன. அவையும் உயிரியல் பூங்காக்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாக பப்புவா நியூகினியில் உள்ள காடுகளில் இந்த நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யு.எஸ்.ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் ஸ்மித் நெகல் சாதனை
- யு.எஸ். ஓபன் டென்னிஸ்-2020 தொடரில் முதன்முறையாக இந்திய வீரர் ஸ்மித் நெகல் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஏழு ஆண்டுகளுக்கு பின கிராண்டஸ்லாம் போட்டிகளில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2013-ல் இந்தியாவின் சேம்தேவ்தேவ் வர்மன் ஆஸி. ஒபன், பிரெஞ்ச் ஓபன், யு.எஸ். ஒபன் ஆகிய போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத் தேங்காய் நாள் - செப்டம்பர் 2
- உலகத் தேங்காய் நாள் (world coconut day) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.
- வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது.
Post a Comment