-->

TNPSC Current Affairs Important Notes: 14.09.2020 & 15.09.2020

'என் குடும்பம்-என் பொறுப்பு': மகாராஷ்டிரத்தில் புதிய அறிவிப்பு
 • மகாராஷ்டிரத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், என் குடும்பம்-என் பொறுப்பு எனும் புதிய பிரசாரத்தை அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். செப்டம்பர் 15-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் மும்பை மாநகராட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவிட்டுள்ளதாவது: "கரோனா இல்லாத மும்பையை உருவாக்க, தனிப்பட்ட முறையிலும், குடும்பமாகவும் மற்றும் சமூகத்தின் படிநிலையாகவும் அனைவரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவோம்."
மாநகராட்சி வெளியிட்ட அறிவிக்கையில், 
1. குறைந்தபட்சம் 2 மீட்டர் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்
2. தவறாமல், முறையாக முகக் கவசம் அணிய வேண்டும். 
3. அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் மற்றும் கைகளை சுத்தப்படுத்தும் திரவத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி கான்பூர் மாணவர்கள் உருவாக்கிய சூப்பர் ஆக்டிவேட் கார்பன் மாஸ்க்
 • இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் சுகாதார நடவடிக்கையை மேற்கொள்கின்றன. IIT கான்பூர் முன்னாள் மாணவர்களின் குழு ஒரு சூப்பர் ஆக்டிவேட் கார்பனை பயன்படுத்தி N-95 மாஸ்க்கினை உருவாக்கியுள்ளனர். இது ஒரு நபரை கொரோனா வைரஸ் தொற்று மற்றும் வெளிப்புற மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவர்களின் சொந்த சுவாச வாசனை மற்றும் பாக்டீரியாவில் இருந்து பாதுகாக்கும்.
மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் மீண்டும் தேர்வு
 • மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஹரிவன்ஷைத் தேர்வு செய்ய வேண்டும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஜெ.பி. நட்டா தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து, இந்தத் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவில் ஹரிவன்ஷ் மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார். இதன்மூலம், ஹரிவன்ஷ் இரண்டாவது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராகியுள்ளார். காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் குலாம் நபி ஆசாத் ஹரிவன்ஷ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.
உத்திரபிரதேச சிறப்பு பாதுகாப்பு படைக்கு 'வாரன்ட்' இல்லா கைது அதிகாரம்
 • உத்திரபிரதேசத்தில் உருவாகும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு, 'வாரன்ட்' இல்லாமல் சோதனை, மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அதிகாரம் வழங்கப்படுகிறது.. மாநிலத்தில், அனைத்து நீதிமன்றங்களின் பாதுகாப்பை பலப்படுத்த, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 1,747 கோடி ரூபாய் செலவில், எஸ்.எஸ்.எப்., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை உருவாக்கப்படுகிறது. இதற்கான மசோதா, சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இப்பிரிவிற்கு, வாரன்ட் இல்லாமல் சோதனை மற்றும் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்படும். இப்பிரிவை, மூன்று மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 1,913 பேருடன், ஐந்து 'பட்டாலியன்'களாக அமைக்கப்படும் சிறப்பு படை, பின், 9,919 பேருடன் விரிவுபடுத்தப்படும்.
வருங்கால வைப்பு நிதியில் ரூ.39,403 கோடி விடுவிப்பு
 • கொரோனா ஊரடங்கு காலமான, மார்ச் 2020, முதல் ஆகஸ்டு 2020 வரை, தொழிலாளர்கள் பலரும், தங்கள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து, 39 ஆயிரத்து, 403 கோடி ரூபாயை திரும்ப பெற்றுள்ளனர் என, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர், சந்தோஷ் கங்வார் லோக்சபாவில் கூறினார். இதில் அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில், 7,837 கோடி ரூபாயும், கர்நாடகாவில், 5,743 கோடி ரூபாயும், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில், 4,984 கோடி ரூபாயும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் உட்பட 10,000 பேரை உளவு பார்த்த சீன நிறுவனம்
 • சீன நிறுவனம் நம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்களை வேவு பார்த்து அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சீனாவின் ஷென்சென் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஷென்ஹூவா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு தகவல்களை திரட்டி தரும் சேவைகளை செய்து வருவதாக தன் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 1306.87 லட்சம் சிலிண்டர்கள் விநியோகம்
 • உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 1306.87 லட்சம் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் இது தொடர்பான அறிக்கையை கூறினார். பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அது செப்டம்பர் 2019 ஆண்டு எட்டப்பட்டது. பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ஆகஸ்டு 2020 வரை 1306.87 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ளன. இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களுக்கு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. 
வெங்காய ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு உத்தரவு
 • அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. கடந்த சில மாதங்காக அதிகளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வெங்காய தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட் டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-20 நிதியாண்டில், இந்தியாவிலிருந்து 440 மில்லியன் டாலர் வெங்காயம் ஏற்றுமதி ஆகி உள்ளது.
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் 3 மசோதாக்கள் லோக்சபாவில் தாக்கல்
 • விவசாயத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, விவசாயிகளின் வருவாயை பெருக்கும் நோக்கில், கடந்த 2020 ஜூன் 5ம் பிரகடனம் செய்யப்பட்ட 3 அவசர சட்ட மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. 'விவசாயிகள் உற்பத்தி பொருள் விற்பனை, வணிக (மேம்பாடு மற்றம் வசதி) மசோதா, 2020', மற்றும் 'விலை உறுதி, பண்ணை சேவைகளின் விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் மசோதா, 2020' ஆகிய இரு மசோதாக்களையும் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், லோக்சபாவில் தாக்கல் செய்தார். 'அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா, 2020' ஐ, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் ராவ்சாகிப் பாட்டீல் தான்வே தாக்கல் செய்தார்.
ரத்தம் உறைதலை தடுக்கும் கருவி உள்நாட்டிலேயே தயாரிப்பு
 • நரம்புகளின் ஆழத்தில் ரத்தம் உறைதலை தடுக்கும் கருவி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்திலுள்ள சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இதனை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
 • இக்கருவி மூலம் குறைவான செலவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை காப்பாற்ற முடியும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நீண்ட நாட்களாக நடக்க முடியாமல் இருக்கும் நோயாளிகள், படுக்கையிலேயே இருப்பவர்கள், அறுவை சிகிச்சைக்குப்பின் நடக்க முடியாமல் இருப்பவர்கள், கால் முடக்கத்தால் அவதிப்படுபவர்கள், வலி, வீக்கத்தால் அவதிப்படுபவர்கள் போன்றவர்களுக்கு இக்கருவி நிவாரணம் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
 • தற்போது மார்க்கெட்டில் இந்த உபகரணத்தின் விலை ரூ 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை உள்ள நிலையில் கேரள விஞ்ஞானிகளின் புதிய தயாரிப்பின் விலை ரூ 1 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு
 • ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பானின் நீண்ட நாள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே உடல் நலம் பாதிப்பு காரணமாக பதவி விலகினார். 71 வயது நிரம்பிய யோஷிஹிடே சுகா வடக்கு ஜப்பானைச் சேர்ந்த ஸ்டராபெர்ரி பயிரிடும் விவசாயி மகன் ஆவார். மேலும் இவர், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர ஆதரவாளர். ஜப்பானில் ஆளும் கட்சியின் தலைவர் பிரதமர் பதவி வகிப்பது வழக்கம் என்பதால் யோஷிஹிடே சுகா அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் வரை பதவி வகிப்பார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ‘சாம்பியன்’
 • நியூயார்க் நகரில் நடந்து வந்த ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நிறைவடைந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் நவோமி ஒசாகாவும் (ஜப்பான்), 27-ம் நிலை வீராங்கனை விக்டோரியா அஸரென்காவும் (பெலாரஸ்) மோதினர். 1 மணி 53 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் நவோமி ஒசாகா 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 22 வயதான ஒசாகா வென்ற 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே 2018-ம் ஆண்டு அமெரிக்க ஓபனையும், 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனையும் வென்று இருந்தார். இதன் மூலம் ஒற்றையரில் அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஆசிய நாட்டவர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு சீனாவின் லீ நா 2 கிராண்ட்ஸ்லாம் பெற்றதே சாதனையாக இருந்தது.
 • வெற்றி பெற்ற ஒசாகா ரூ.22 கோடியை பரிசுத்தொகையாக அள்ளினார். மேலும் புதிய தரவரிசையில் அவர் 3-வது இடத்துக்கு முன்னேறுகிறார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் ‘சாம்பியன்’
 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் ‘சாம்பியன்’ பட்டத்தை வென்றார். 4 மணி 1 நிமிடம் நீடித்த ஆட்டத்தில் டொமினிக் திம் 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 27 வயதான திம் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் திம் ரூ.22 கோடியை பரிசுத் தொகையாக தட்டிச் சென்றார். 2-வது இடத்தை பிடித்த ஸ்வெரேவுக்கு ரூ.11 கோடி கிடைத்தது.
உலக டென்னிஸ் தரவரிசையில் நவோமி ஒசாகா 3-வது இடத்துக்கு முன்னேற்றம்.
 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி முடிவை தொடர்ந்து புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் (செர்பியா) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) நம்பர் ஒன் இடத்திலும், சிமோனா ஹாலெப் (ருமேனியா) 2-வது இடத்திலும் தொடருகின்றனர். அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 13 இடங்கள் ஏற்றம் கண்டு 14-வது இடத்தை பெற்றுள்ளார்.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting