இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.8 சதவீதம் சரிவு அடையும்: பிரபல தர மதிப்பீட்டு நிறுவனம் கணிப்பு
- இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் (2020-21) மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 சதவீதம் பின்னடைவைத்தான் சந்திக்கும் என்று பிரபல இந்திய தர மதிப்பீட்டு நிறுவனமான ‘இந்தியா ரேட்டிங்க்ஸ் அன்ட் ரிசர்ச்’ கணித்து இருந்தது. இப்போது இந்த நிறுவனம் தனது முந்தைய கணிப்பை மாற்றிக்கொண்டுள்ளது. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய கணிப்பை விட மோசமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டி உள்ளது. ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 சதவீதம் சரிவை சந்திக்கும் என்று கணித்திருந்த நிறுவனம், தற்போது உற்பத்தி மேலும் குறைந்து 11.8 சதவீத சரிவை சந்திக்கும் என கூறி உள்ளது.
- இந்தியாவில் உள்நாட்டு மொத்த உற்பத்தி நடப்பு நிதி ஆண்டில், 11.8 சதவீதம் எதிர்மறை வளர்ச்சியை (சரிவை) சந்திக்கும். இது இந்திய வரலாற்றின் மிக குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமாக இருக்கும். (இந்தியாவில் 1951-ம் ஆண்டில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி விகித அளவுகள் கிடைக்கின்றன.). 1958, 1966, 1967, 1973, 1980 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து நடப்பு நிதி ஆண்டில் நிகழ்வது 6-வது மோசமான நிகழ்வு ஆகும். முந்தைய குறைவான உற்பத்தி விகிதம் என்பது 1980-ல் ஏற்பட்ட 5.2 சதவீத சரிவு ஆகும். அதே நேரத்தில் அடுத்த நிதி ஆண்டில் (2021-22) மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்து, 9.9 சதவீத வளர்ச்சியை எட்டிப்பிடிக்கும்.
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.5 சதவீதம் சரிவு அடையும்: பிட்ச் நிறுவனம் கணிப்பு
- மொத்த உள்நாட்டு உற்பத்தி மீட்பு என்பது மந்தமானதாகவும், சீரற்றும் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்றும் பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு நிதி ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 10.5 சதவீதம் (பின்னடைவு) என கணித்துள்ளோம். முதலில் 5 சதவீதம் சரிவை கணித்திருந்தோம்” என குறிப்பிட்டுள்ளது.
பெருங்குடியில் ரூ.74.69 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தின் 2-வது தரவு மையம்
- சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவன வளாகத்தில் ரூ.74 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் 2-வது அதிநவீன மாநில தரவு மையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். 195 அடுக்குகளை கொண்ட இப்புதிய மாநில தரவு மையம், தமிழ்நாடு அரசின் மென்பொருள் பயன்பாடுகள் மற்றும் இதர சேவைகளை பாதுகாப்பான முறையில் தரவேற்றம் செய்து பயன்படுத்திட உதவும். மேலும் ஜி2ஜி (அரசுத் துறைகளுக்கிடையில்), ஜி2சி (அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையில்) மற்றும் ஜி2பி (அரசுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் இடையில்) இணையதள சேவைகளை வழங்குவதற்கும், வளர்ந்து வரும் அரசு துறைகளின் தகவல் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்திடவும் இந்த அதிநவீன மாநில தரவு மையம் நிறுவப்பட்டுள்ளது.
இணைய பாதுகாப்பு கட்டமைப்பு திட்டம்
- தமிழ்நாட்டின் இணைய பாதுகாப்பு கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்தும் விதமாக முதற்கட்டமாக, அட்வான்ஸ்டு கம்ப்யூடிங் வளர்ச்சி மையம் (CDAC) மூலம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ள CERTTN -ன் என்ற இணையதளத்தை ( https://cert.tngov.in ) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இதன்மூலம், CERTTN என்பது தமிழ்நாடு அரசின் கணினி அவசர கால பதிலளிப்பு குழுவாக இருக்கும். அனைத்து அரசு துறைகளின் கணினி கட்டமைப்புகளை தணிக்கை செய்தல், பாதுகாத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகளில் இது முக்கிய பங்கு வகிக்கும். தடையற்ற இணையவழி சேவைகள் மற்றும் அரசு துறைகளின் தரவுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
பதினெண் கீழ்க்கணக்கு மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
- தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1,837 பாடல்களின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தின்கீழ் 42 கோடி ஏழைகளுக்கு ரூ.68 ஆயிரம் கோடி நிதிஉதவி
- பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டன. அவை விரைந்து நிறைவேற்றப்படுவதை மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து வருகின்றன. இத்திட்டத்தின்கீழ், 42 கோடிக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு ரூ.68 ஆயிரத்து 820 கோடி நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனர்: நிதி அமைச்சகம்
- பிரதமர் கிசான் நிதிஉதவி திட்டத்தின்கீழ் 8 கோடியே 94 லட்சம் விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.17 ஆயிரத்து 891 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- ஜன்தன்’ வங்கிக்கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு முதல் தவணையாக 20 கோடியே 65 லட்சம் பேருக்கு ரூ.10 ஆயிரத்து 325 கோடியும், இரண்டாம் தவணையாக 20 கோடியே 63 லட்சம் பெண்களுக்கு ரூ.10 ஆயிரத்து 315 கோடியும், மூன்றாம் தவணையாக 20 கோடியே 62 லட்சம் பெண்களுக்கு ரூ.10 ஆயிரத்து 312 கோடியும் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 2 தவணைகளாக மொத்தம் ரூ.2 ஆயிரத்து 814 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 82 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 987 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் சுமார் 75 கோடி பயனாளிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் இருந்து மாதந்தோறும் லட்சக்கணக்கான டன் உணவு தானியங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. நவம்பர் மாதம்வரை இந்த உதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், 5 கோடியே 32 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 லட்சத்து 67 ஆயிரம் டன் உணவு தானியங்களும், கொண்டைக்கடலையும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
- பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ், ஏப்ரல் மாதத்தில் இருந்து 8 கோடியே 52 லட்சம் இலவச சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
- தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் இருந்து 36 லட்சத்துக்கு மேற்பட்ட சந்தாதாரர்கள் மொத்தம் ரூ.9 ஆயிரத்து 543 கோடி பணத்தை எடுத்துக்கொண்டுள்ளனர்.
- 100 நாள் வேலைத்திட்டத்தில், ஏப்ரல் மாதத்தில் இருந்து சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. சம்பள நிலுவைத்தொகை வழங்க மாநிலங்களுக்கு ரூ.59 ஆயிரத்து 618 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சி.எம்.பி.டி மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ ஜெயலலிதா பெயர்
- சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்ட நிலையில், தற்போது கோயம்பேடு சி.எம்.பி.டி. மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு ‘புரட்சித்தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கை: ஆய்வு செய்ய நிபுணர் குழு
- புதிய கல்வி கொள்கை குறித்து, ஆய்வு செய்வதற்கு, 13 பேர் அடங்கிய நிபுணர் குழுவை, தமிழக பள்ளி கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் உத்தரவுப்படி, புதிய கல்வி கொள்கை குறித்தும், இரு மொழி கொள்கையை தொடர்வது குறித்தும், அரசுக்கு ஆலோசனை தரும் வகையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆதாரங்கள் அடிப்படையில், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து, இக்குழு ஆய்வு செய்யும். பள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன் அளித்துள்ள பரிந்துரைகளின் படி, நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.குழுவின் தலைவராக பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் செயல்படுவார்.
இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா '5ஜி' தொழில்நுட்பத்தில் கூட்டு
- அதிவேக தொலைத் தொடர்பு சேவைக்கான '5ஜி' தொழில்நுட்பத்தில், இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து செயலாற்ற ஒப்பந்தம் செய்துள்ளன. புதிய தொழில்நுட்பம், நீர், வளர்ச்சி வாய்ப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது தொடர்பாக, இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி, இந்தியாவின் பெங்களூரு, இஸ்ரேலின், டெல் அவிவ் நகரங்கள், புதுமையான தொழில்நுட்பங்களின் மையங்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளன. மூன்று நாடுகளின் கூட்டணி, இதற்கு மேலும் வலு சேர்க்கும். அதிவேக தகவல் தொடர்புக்கான, 5ஜி தொழில்நுட்பத்தில், எந்த நாடும் ஆதிக்கம் செலுத்தவோ அல்லது இந்த தொழில்நுட்பம் மூலம் பிற நாடுகளை கட்டுப்படுத்தவோ, எங்கள் கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது. ஏற்கனவே, மூன்று நாடுகளும், ராணுவ துறையில் கூட்டாக செயல்பட்டு வருகின்றன. இது, 5ஜி உள்ளிட்ட, புதிய தொழில்நுட்பத்திலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை: இலங்கை அரசு முடிவு
- இலங்கை பிரதமர் ராஜபக்ஷே நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சட்டம் கொண்டு வர அரசு ஆலோசித்து வருகிறது என தெரிவித்து உள்ளார் . விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவைடைந்த பின்னர் மேற்கண்ட தடை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகலாந்தில் 2-ம் உலகப் போர்க் கால குண்டு வெடித்தது
- நாகலாந்தில் இரண்டாம் உலக போர்க் கால குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார், மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து காவல் துணை ஆணையர் (மண்டலம் 1) நயிம் முஸ்தபா கூறுகையில், நாகாலாந்தின் திமாபூர் மாவட்ட பர்மா முகாம் பகுதியில் இரும்புப் பொருள் என நினைத்து சுத்தியலால் தட்டியதில் குண்டு ஒன்று வெடித்து சிதறியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு பெண் உள்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வெடித்து சிதறிய பொருளை ஆராய்ந்ததில் அது இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Post a Comment