Type Here to Get Search Results !

Current Affairs in Tamil Medium Date: 01.08.2020 to 07.08.2020

ரூ.280 கோடியில் 22 நீர்வள திட்டப்பணிகள் முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
  • தமிழகத்தில் ரூ.280 கோடியில் 22 நீர்வள திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில் நேற்று அடிக்கல் நாட்டினார். புதிதாக கட்டப்படவுள்ள இத்தடுப்பணையின் நீளம் 575 மீட்டர், உயரம் 1.50 மீட்டர் மற்றும் கொள்ளளவு 28.58 மில்லியன் கன அடி ஆகும்.
  • நெல்லை மாவட்டம் நம்பியாற்றின் குறுக்கே கண்ணநல்லூரில் தடுப்பணை கட்டும் பணி, விருதுநகர் மாவட்டம் எஸ்.அம்மாபட்டி மற்றும் வடுகபட்டியில் அர்ஜுனா நதியின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி, கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயை மறுசீரமைக்கும் பணி உள்பட மொத்தம் ரூ.280 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டிலான 22 திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னையில் ஆலந்தூர், சென்டிரல், கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு அண்ணா , எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்
  • சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயரிட்டதைப் போல், ஆலந்தூர் மெட்ரோ என்பது “அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ” என்றும்; சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்” என்று பெயர் வைத்ததைப்போல சென்டிரல் மெட்ரோ என்பது “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ” என்றும்; மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆசியாவில் மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புறநகர் பேருந்து நிலையத்தையும், அங்கு அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும் திறந்து வைத்ததாலும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவு கூறும் வகையில், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பது “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ” என்றும் பெயர் மாற்றங்கள் செய்து நான் ஆணையிட்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு
  • சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி. உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. சென்னை நந்தனத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தார். ‘சாயாவனம்’ என்ற புதினம் வெளியானதில் இருந்து எழுத்துலகில் பிரபலமானார்.
ஷேவாக், சர்தார்சிங் உள்பட 12 பேர் கொண்ட தேசிய விளையாட்டு விருது கமிட்டி அமைப்பு
  • சர்வதேச போட்டிகளில் சாதிக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜூனா மற்றும் சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா, வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தயான்சந்த் ஆகிய விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு வந்துள்ளன. இவற்றில் விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய 12 பேர் கொண்ட கமிட்டியை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அமைத்தது. இந்த கமிட்டியில் இந்திய முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் ஷேவாக், ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை தீபா மாலிக், முன்னாள் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மோனலிசா, தமிழகத்தை சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் தேவராஜன் மற்றும் விளையாட்டுத்துறை செய்தியாளர்கள், விளையாட்டு அமைச்சக அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். 
  • ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி முகுந்தகம் ஷர்மா கமிட்டியின் தலைவராக இருப்பார். இவர்கள், வீரர்களின் சாதனை, செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்வார்கள்.
உலக தாய்ப்பால் தினம் மற்றும் உலக தாய்ப்பால் வாரம்
  • ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதிவரை உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்டு 1 கொண்டாடப்படுகிறது. ஆகஸ்டு மாதம் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக அறிவித்து, இதற்காக இன்று முதல் வருகின்ற 7-ஆம் தேதிவரை விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் என குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். குழந்தை பிறந்து 2 வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும். குறைந்தது 1 வருடமாவது தாய்ப்பால் கொடுக்கவேண்டும். தாய்ப்பால்  கொடுப்பதினால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். 
  • குழந்தை பிறந்த உடனே இந்த தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில்  ஜீரணமாகிவிடும். இது தவிர குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, ஒவ்வாமை, உடல்பருமன் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாமல்  தடுக்கிறது. 
டொரன்டோ சர்வதேச பட விழாவில் ‘கைதி’
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜூன் தாஸ், ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் கைதி. கதாநாயகி இல்லாமல் கதாநாயகனை மையப்படுத்தி வந்த கைதியின் வெற்றி திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட கைதி படம் தேர்வாகி உள்ளது. வருகிற 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இந்த திரைப்பட விழா நடக்க உள்ளது. இது கைதி படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடர்ந்து நீடிக்கும்” மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம்: முதல்வர் அறிவிப்பு
  • தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடர்ந்து நீடிக்கும் என்றும், மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து உள்ளார். பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், படிக்கும் போதே மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதை ஊக்குவிக் கும் வகையிலும் இந்த புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்து வழங்கிய இந்த புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய மந்திரி சபை  ஒப்புதல் அளித்தது.
கூடுதல் தகவல்:
  • 1963-ம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3-வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை பொறுத்த வரையில், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில்தான் இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. என்றாலும், 1965-ம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. அதை எதிர்த்து, மாணவர்களும், மக்களும், தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தினர்.
  • மக்களிடையே மும்மொழி கொள்கையை பற்றிய கவலைகள் நீங்காததால், அண்ணா, தமிழ்நாடு சட்டசபையில் 1968-ம் ஆண்டு ஜனவரி 23-ந் தேதியன்று, “தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் மும்மொழி திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது“ என்று வரலாறு போற்றத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றினார். 
  • அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் பாட திட்டத்தில் இருந்து இந்தி மொழி முழுமையாக நீக்கப்பட்டது. அண்ணாவால் தெளிவுற உரைக்கப்பட்ட இரு மொழி கொள்கையை செயல்படுத்துவதுதான் எம்.ஜி.ஆரின் உறுதியான கொள்கையாக இருந்தது. அதன்படியே அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது, 1986-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதியன்று, இரு மொழி கொள்கையை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா ஊரடங்கால் 160 கோடி மாணவர்கள் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்
  • உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் ஆண்டனியோ குடரஸ், கொரோனாவும், கல்வியும் குறித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கொரோனா பரவல் காரணமாக, உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால், உலகம் முழுவதும் 160 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 கோடியே 38 லட்சம் குழந்தைகளும், உயர்வகுப்பு படிக்கும் மாணவர்களும் அடுத்த ஆண்டு படிப்பை கைவிட நேரிடலாம். இந்த ஆண்டு மழலையர் வகுப்புகளில் சேர வேண்டிய 4 கோடி குழந்தைகள், கல்வி பயிலும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 41 சதவீதம் குறைவு
  • தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இதுவரை 41 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் இதுவரை சராசரியாக 203 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது தென்மேற்கு பருவமழை கால சராசரி அளவை விட 41 சதவீதம் குறைவாகும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் சராசரியாக 62.64 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குறிப்பாக மேல்பவானி, அவலாஞ்சி, கவுல்பஜார், எமரால்டு, தேவலா, கிளன்மார்கென் மற்றும் நடுவட்டம் ஆகிய இடங்களில் அதிக மழை பெய்துள்ளது.
வடகொரியா அணு ஆயுத உற்பத்தியை தொடர்கிறது: ஐ.நா. அறிக்கையில் தகவல்
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வந்ததால் அந்த நாட்டின் மீது ஐ.நா. கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. சோதனை திட்டங்களுக்கு நிதியுதவியை கட்டுப்படுத்தும் வகையில் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை ஐ.நா. தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. வடகொரியா அணு ஆயதங்களை கைவிட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் 3 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவை தோல்வியில் முடிந்தன. எனினும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு வடகொரியா அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் சோதனையை நிறுத்தி வைத்ததாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் வடகொரியா அணு ஆயுத உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை கவனித்து வரும் ஐ.நா. நிபுணர் குழு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பித்துள்ள ரகசிய அறிக்கை மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட 2-வது தவணை: ரூ.890 கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவித்தது
  • கொரோனா சவாலை எதிர்கொள்வதற்கு மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதில் முதல் கட்டமாக ரூ.3,000 கோடி ஏற்கனவே மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில் 22 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 2-வது தவணையாக ரூ.890 கோடியே 32 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது. 2-வது தவணை நிதியை பெறுகிற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம், சத்தீஷ்கார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா, கோவா, குஜராத், கர்நாடகம், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம், அருணாசலபிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், சிக்கிம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  • ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்ததாஸ் தலைமையின் கீழ் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிக்கொள்கை கமிட்டி வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை நிர்ணயித்து வருகிறது. இந்த கமிட்டி கடந்த மே மாதம் 22-ந் தேதி வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை நிர்ணயித்தது. ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களை முறையே 4 சதவீதம் மற்றும் 3.35 சதவீதமாக நிர்ணயித்தது. இந்த வட்டி விகிதங்களில் இப்போது மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. எனவே பழைய நிலையே நீடிக்கிறது.
சோமாலியாவின் மனித நேய ஆர்வலர் மரணம்
  • வறுமையாலும், உள்நாட்டுப்போராலும் உருக்குலைந்து போன ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் மனித நேய ஆர்வலராக வலம் வந்தவர் டாக்டர் ஹாவா அப்தி. சோமாலியாவில் 30 ஆண்டு கால உள்நாட்டுப்போரிலும் அங்கே இருந்து, தனது சேவைகளால் மக்களைக் கவர்ந்து, சோமாலியாவின் அன்னை தெரசா என்று அழைக்கப்பட்டார். 2011-ல் அவரது ஆஸ்பத்திரி, மத அடிப்படையிலான பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. ஆனால் நூற்றுக்கணக்கான உள்ளூர் பெண்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் பின்வாங்கினர். அவர் நேற்று முன்தினம் மொகாதிசுவில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது மகள் ஆமினா அப்தி இதை உறுதி செய்தார். சோமாலியா செய்தித்துறை அமைச்சகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ ஹாவா அப்தி, சோமாலியாவின் அன்னை. அவர் பாதிக்கப்பட்ட சோமாலியா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச ஆஸ்பத்திரியை நிறுவி சேவை செய்தார்” என கூறி உள்ளது. 2012-ம் ஆண்டு நோபல் பரிசுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
மனோஜ் சின்கா, காஷ்மீர் கவர்னராக நியமனம்
  • காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம், காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னராக இருந்த ஜி.சி.மர்மு, காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும் காலம் குறித்து சமீபத்தில் கருத்து வெளியிட்டதால், தேர்தல் கமிஷனின் ஆட்சேபனைக்கு உள்ளானார். காஷ்மீர் பிரிக்கப்பட்ட அதே நாளில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு மத்திய அரசில் புதிய பொறுப்பு வழங்கப்படும் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, காலியாக உள்ள காஷ்மீர் கவர்னர் பொறுப்பில் முன்னாள் மத்திய மந்திரி மனோஜ் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னராக நியமிக்கப்படும் முதலாவது அரசியல் தலைவர் இவரே ஆவார்.
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் அயோத்தியில் 05.08.2020 அன்று கோலாகலமாக நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். ராமஜென்ம பூமி இயக்கம் பற்றிய தகவல்கள் பொறிக்கப்பட்ட 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்லை எடுத்துக் கொடுத்து கட்டுமான பணியை அவர் தொடங்கி வைத்தார். அத்துடன் தலை குனிந்து வணங்கிய மோடி, நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டார்.
உள்நாட்டில் தயாரான ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி 2-ம் கட்ட சோதனை தொடக்கம் 
  • உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஜைகோவ்-டி தடுப்பூசியின் 2-ம் கட்ட சோதனை 06.08.2020 தொடங்குகிறது . இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்காக உள்நாட்டில் 2 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.அவை ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி, ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தாரின் கோவேக்சின் ஆகும். இவ்விரு தடுப்பூசிகளையும் மனிதர்களுக்கு செலுத்தி பார்ப்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது அனுமதியை ஏற்கனவே அளித்துள்ளது.
ஜைகோவ்-டி தடுப்பூசி
  • இந்த நிலையில் பிளாஸ்மித் டி.என்.ஏ. அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஜைகோவ்-டி தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற முதல் கட்ட சோதனை கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்த சோதனை முடிவுக்கு வந்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் கூட்டாக உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசி
  • பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் கூட்டாக உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசியை முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை நிறைவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றினை தடுத்து நிறுத்துவதற்கு ஏதுவாக பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியை உருவாக்குவதற்கு 6 தடுப்பூசிகள் போட்டியிடுவதாகவும், அவை இறுதி கட்ட சோதனைக்குள் வந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மீன்வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறை: கடலுக்குள் சென்று, அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
  • மீன்வளத்தை பெருக்குவதற்காக செயற்கை பவளப்பாறை நிறுவும் திட்டத்தை அமைச்சர் டி.ஜெயக்குமார் கடலுக்குள் சென்று தொடங்கி வைத்தார். மீனவர் நலனை மேம்படுத்திட ரூ.10 கோடி மதிப்பீட்டில் 30 இடங்களில் செயற்கை பவளப்பாறைகளை நிறுவி மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும் என்று 2019-20-ம் வருட சட்டசபை கூட்டத்தொடரில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார். அதன்படி, கான்கிரீட்டால் ஆன முக்கோணம், வளையம் மற்றும் வளைய தொகுப்புகள் ஆகிய 3 வடிவங்களில் செயற்கை பவளப்பாறை உருவாக்கப்பட்டு மீன் உறைவிடங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றை கடலில் நிறுவும் நிகழ்ச்சி ஊரூர்குப்பம், ஆல்காட்டுகுப்பம், ஓடைக்குப்பம் ஆகிய கிராமங்களில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் நடைபெற்றது.
தமிழகம் மீன் உற்பத்தியில் முதலிடம் 
  • தற்போது தமிழகம் மீன் உற்பத்தியில் குஜராத்தை பின்னுக்கு தள்ளி, 7.75 லட்சம் டன் மீன் உற்பத்தியுடன் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது. அண்மை கடல் மீன் வளத்தை பெருக்குவதற்காக மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியில் மாநில அரசு சார்பில் கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் முழுமையான அளவில் பவளப்பாறைகள் மீனவர்களின் கருத்து அறிந்து நிறுவப்படுகிறது. செயற்கை பவளப்பாறைகளில் பாசி படரும்போது, பாறை மீன், கொடுவா மீன் போன்ற மீன்கள் அதிகரிக்கும். இதனால், அண்மை கடல் பகுதி மீன் பிடிப்பால் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும்.
ஜப்பானிய முறையில் மரம் வளர்க்கும் ‘மியாவாக்கி’ முறை: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
  • சென்னையில் வெப்பத்தை குறைக்க பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மரம் வளர்க்கும் திட்டத்தை கையாண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து ஜப்பான் முறையில் அதில் அதிகளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு, அடர்வனக்காடுகளாக உருவாக்கப்பட்டு வருகிறது. ஜப்பானிய முறையில் மரம் வளர்க்கும் இந்த முறை ‘மியாவாக்கி’ முறை என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மற்றும் வளசரவாக்கம் மண்டலத்தில் கடந்த ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டு பலவகையான நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. சாதாரண மரங்களை விட 10 மடங்கு வேகமாகவும், 30 மடங்கு அடர்த்தியாகவும் வளரும் மியாவாக்கி காடுகளால் சென்னையில் வெப்ப நிலை குறையும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
டொரன்டோசர்வதேச பட விழாவில் ‘ஓ மை கடவுளே’ படம் தேர்வாகி உள்ளது
  • டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஓ மை கடவுளே படம் தேர்வாகி உள்ளது. வருகிற 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இந்த திரைப்பட விழா நடக்க உள்ளது. ஏற்கனவே கார்த்தியின் கைதி படத்தையும் டோரன்டோ பட விழாவில் திரையிட தேர்வு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி தொடர்ந்து முதலிடம்
  • ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட்கோலி (871 புள்ளி), துணை கேப்டன் ரோகித் சர்மா (855 புள்ளி), பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (829 புள்ளி) ஆகியோர் மாற்றமின்றி முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர்.
வெனிசூலா நாட்டின் தேசிய ராணுவ தினம் 
  • வெனிசூலா நாட்டின் தேசிய ராணுவ தினம் 05.08.2020 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட்டது. இதையொட்டி தலைநகர் கராக்கசில் நடைபெற்ற விழாவில் இந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ முக கவசம் அணிந்து பங்கேற்றார்.
ஐ.நா.சபைக்கு இந்தியா ரூ.115 கோடி நிதி
  • வளரும் நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமைகளில் ஆதரவு அளிப்பதற்கு இந்தியா உறுதி கொண்டுள்ளது. இந்த வகையில் ஐ.நா.சபையுடனான கூட்டு வளர்ச்சி நிதியாக 15.46 மில்லியன் டாலர் நிதிக்கான (சுமார் ரூ.115½ கோடி) காசோலையை நியூயார்க்கில் ஐ.நா. சபையின் தென்-தெற்கு ஒத்துழைப்புக்கான அலுவலகத்தில் அதன் இயக்குனர் ஜார்ஜ் செடீக்கிடம் இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி நேரில் வழங்கினார். இந்த நிதியில் 6 மில்லியன் டாலர் (சுமார் ரூ.45 கோடி), மொத்த நிதிக்கானது. இதில் அனைத்து வளரும் நாடுகளும் கூட்டாண்மைக்கு தகுதி உடையவை. மீதி நிதி 9.46 மில்லியன் டாலர் (சுமார் ரூ.70½ கோடி) காமன்வெல்த் நாடுகளுக்கானவை.
லெபனானை உலுக்கிய பயங்கர வெடி விபத்து: 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது
  • லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் இருந்த கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருள் ( 2,750 டன் அமோனியம் நைட்ரேட்) 04.08.2020 அன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது மொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ளது. துறைமுகத்தில் இருந்து ஒரு மைல் தூரத்துக்கு நகரின் அனைத்து இடங்களும் முற்றிலுமாக சிதைந்து போனது. இந்தக் கோர விபத்தில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டில் இந்தியாவிலேயே நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்ச மழைப் பொழிவு: ஒரே நாளில் 58 செ.மீ. மழை பதிவாகி சாதனை
  • நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி தமிழகத்தின் சிரபூஞ்சி என்ற பெயரை எடுத்துள்ளது. ஒரே நாளில் 58 செ.மீ மழை அங்கு கொட்டியுள்ளதே இதற்கு காரணமாகும். மேட்டுப் பாளையத்திற்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை மீது உள்ள அவலாஞ்சி பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில் மழைப் பெய்யக் கூடிய இடம் தான் அவலாஞ்சி. 
ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்
  • குடியரசுத் தலைவர் மாளிகை பத்திரிகையாளர் செயலாளர் அஜய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் கிரீஷ்சந்திர முா்மு தனது பதவியை 05.08.2020 அன்று  ராஜிநாமா செய்தாா். அவரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான மனோஜ் சின்ஹாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து மனோஜ் சின்ஹா ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
நியூயார்க் நகர புதிய சுகாதார ஆணையராக இந்திய வம்சாவளி மருத்துவர் நியமனம்
  • பொது சுகாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் தவே ஏ. சோக்ஷி (39) , அமெரிக்காவின் நியூயார்க் நகர புதிய சுகாதார ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நியாயார்க் நகர சுகாதார ஆணையராக இருந்த மருத்துவர் ஆக்ஸிரிஸ் பார்போட் தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, நகர சுகாதார மற்றும் மன நலவியல் துறை ஆணையராக சோக்ஷி நியமிக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments

Labels