டெல்லியில் பிரமாண்ட தேசிய தூய்மை மையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று, ‘தூய்மை இந்தியா’. தேசப்பிதா மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா கனவை நனவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று இந்த திட்டத்தை 2014-ம் ஆண்டு தொடங்கியபோது பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த நிலையில் டெல்லியில் மகாத்மா காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில் ‘ராஷ்ட்ரீய சுவச்சதா கேந்திரா’ என்ற பெயரில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள தேசிய தூய்மை மையத்தை பிரதமர் மோடி அவர்கள் 08.08.2020 அன்று திறந்து வைத்தார். இது ஒரு கலந்துரையாடல் மையம் ஆகும்.
வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரூ.6,399 கோடி ஒதுக்கீடு: நிா்மலா சீதாராமன்
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ரூ.6,399 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
கூடுதல் தகவல்: நாட்டின் பொருளாதாரத்தை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் 'சுயசாா்பு இந்தியா' என்ற பெயரில் ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு சலுகைத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களுக்கும் ரூ.30,000 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
பொருளாதார வளா்ச்சி: தமிழகம் தொடா்ந்து முன்னேற்றம் மத்திய புள்ளியியல் தகவல்
2019-20-ஆம் ஆண்டில் தேசிய பொருளாதார வளா்ச்சி விகிதம் 4.2 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தின் வளா்ச்சி விகிதம் 8.03 ஆக இருக்கிறது. இது ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாகும். பொருளாதார வளா்ச்சி விகிதம் பற்றிய மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் கணக்கெடுப்பை அண்மையில் மத்திய அரசு இறுதி செய்திருந்தது. 2011-12-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கணக்கிடப்பட்டது. அதன்படி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் தமிழகம் தொடா்ந்து நீடிக்கிறது. மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. வேளாண்மை, அதன் சாா்புத் தொழில்கள், சுரங்கத் தொழில் ஆகியன முதன்மைத் தொழில்களாகப் பாா்க்கப்படுகின்றன. இந்தத் தொழில்கள் 6.08 சதவீத வளா்ச்சியையும், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அடங்கிய துறையானது 6.63 சதவீத வளா்ச்சியையும் கண்டுள்ளன. இவற்றின் முந்தைய ஆண்டு வளா்ச்சி முறையே 8.49 சதவீதம் மற்றும் 7.83 சதவீதமாக இருந்தது.
உற்பத்தி மற்றும் கட்டுமானத் தொழில் ஆகிய இரண்டு முக்கிய துறைகளும் முறையே 10.27 சதவீதம் மற்றும் 10.49 சதவீதம் என்ற இரட்டை இலக்கத்தைக் காட்டும் அளவிற்கு வளா்ச்சி பெற்றுள்ளன. முதன்மைத் துறைகளில் தமிழகம் ஒவ்வொரு நிதியாண்டிலும் கூடுதலான வளா்ச்சியைப் பெற்று வருகின்றன. வேளாண்மையில் 2018-19-ஆம் ஆண்டு ஏற்பட்டிருந்த 5.8 சதவீத வளா்ச்சி விகிதம், 2019-20-ஆம் ஆண்டில் 7.43 சதவீதமாக வளா்ந்திருக்கிறது.
கூடுதல் தகவல்: கடைசி மூன்று நிதியாண்டுகளில் தமிழகத்தின் வளா்ச்சி விகிதம், தேசிய வளா்ச்சி விகிதத்தைவிட தொடா்ந்து அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
- 2017-18-ஆம் ஆண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.11 லட்சத்து 26 ஆயிரம் கோடியாகவும், வளா்ச்சி விகிதம் 8.59 சதவீதமாகவும் இருந்தது. இந்த காலகட்டத்தில், தேசிய வளா்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருந்தது.
- 2018-19-ஆம் ஆண்டில் உற்பத்தி மதிப்பு ரூ.12 லட்சத்து 15 ஆயிரம் கோடியாகவும், வளா்ச்சி விகிதம் 7.95 சதவீதமாகவும் இருந்தது. இதே காலகட்டத்தில், தேசிய வளா்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது.
- 2019-20-ஆம் ஆண்டில் உற்பத்தி மதிப்பு ரூ.13 லட்சத்து 13 ஆயிரம் கோடி, வளா்ச்சி விகிதம் 8.03 சதவீதம் இருந்தது. இந்த காலகட்டத்தில் தேசிய வளா்ச்சி விகிதம் 4.2 சதவீதமாக அமைந்துள்ளது.
தலைமை கணக்கு தணிக்கையாளராக கிரீஷ் சந்திர முா்மு பதவியேற்பு
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச முன்னாள் துணைநிலை ஆளுநா் கிரீஷ் சந்திர முா்மு, இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக 08.08.2020 அன்று பதவியேற்றாா். தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். கிரிஷ் சந்திர முர்முக்கு 20.11.2024 வரை பதவிக்காலம் நீடிக்கும். முன்னதாக, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் கிரீஷ் சந்திர முா்மு தனது பதவியை கடந்த 05.08.2020 அன்று ராஜிநாமா செய்தாா். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
கூடுதல் தகவல்: தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி பதவி என்பது அரசியலமைப்புச் சட்ட பதவியாகும். மத்திய அரசு, மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்வது சிஏஜியின் பொறுப்பாகும். அவ்வாறு சிஏஜி தணிக்கை செய்த கணக்குகள் அனைத்தும் மாநில சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை மையமாக கொண்ட திட்டங்கள்: துணைநிலை ஆளுநா் சின்ஹா
ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை மையமாக கொண்ட திட்டங்கள் ஊக்குவிக்கப்படும் என்று அந்த யூனியன் பிரதேசத்தின் புதிய துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.
குப்பைகள் இல்லாத இந்தியா: ஒரு வார பிரசாரத்தை தொடக்கினாா் பிரதமா் மோடி
குப்பைகள் இல்லாத இந்தியா என்னும் ஒரு வாரகால பிரசாரத்தை பிரதமா் நரேந்திர மோடி, தில்லியில் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி ஸ்மிருதி, தா்ஷன் சமிதி ஆகிய இடங்களில் தூய்மை இந்தியாவுக்கான சேவை மையத்தையும் அவா் தொடக்கி வைத்தாா்.
உலகின் நான்காவது முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஐரோப்பாவின் பணக்காரர் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தி உலகின் நான்காவது பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நடப்பாண்டில் 220 கோடி அமெரிக்க டாலர்களைப் பெற்ற அம்பானி தற்போது 806 கோடி அமெரிக்க டாலர் சொத்துமதிப்பு கொண்டவராக உயர்ந்துள்ளார். பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் ஆகியோரைத் தொடர்ந்து அம்பானி அதிக சொத்துப் பட்டியல் உள்ள நபராக உள்ளார்.
சீனாவில் தேசிய உடற்தகுதி தினம்
2008ஆம் ஆண்டின் ஆகஸ்டு 8ஆம் நாள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதற்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 8ஆம் நாள் தேசிய உடற்தகுதி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. சிறந்த ஒருவர், செழுமையான அறிவுகளுடன் ஆரோக்கியமான எழுச்சி மற்றும் வலுவான உடலையும் கொண்டிருக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்: 2022-ஆம் ஆண்டில் குளிர்கால பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பெய்ஜிங் முழுமையாக ஆயத்தம் செய்து வருகின்றது. இது, சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றும் என்று குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் அவசரநிலையை அறிவித்த மொரீஷியஸ்
கடலில் மூழ்கும் கப்பலில் இருந்து எரிபொருள் கசிவது மோசமடைவதால் மொரீஷியஸ் சுற்றுச்சூழல் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் கப்பல் 3800 டன் எரிபொருளுடன் எம்.வி.வகாஷியோ, ஜூலை 25 அன்று இந்தியப் பெருங்கடல் தீவுக்கு வெளியே பயணித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தளமாக அறியப்படும் பாயிண்ட் டி எஸ்னி பகுதியில் எதிர்பாராத விதமாக ஒரு பாறையில் மோதி நின்றது. சேதமடைந்த கப்பலில் இருந்த குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் பாறையில் மோதியதால் கப்பலில் இருந்த எரிபொருள்கள் கடலில் கசியத் தொடங்கின. கப்பலில் இருந்து எரிபொருள் கசிவதைத் தடுக்கும் முயற்சியில் மொரீஷியஸ் இறங்கியது. எனினும் எண்ணெய் கசிவு நெருக்கடி மோசமடைவதால் மொரீஷியஸ் அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது.
அமெரிக்காவிலும் சீனாவின் 'டிக்-டாக்', 'விசாட்' செயலிகளுக்கு தடை
இந்தியாவைத் தொடா்ந்து அமெரிக்காவிலும் சீன நிறுவனங்களின் டிக்-டாக், விசாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான இரு தனித்தனி உத்தரவுகளில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டாா். இந்த இரு செயலிகளும் அமெரிக்காவின் தேசப் பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்புக்கு எதிராக இருப்பதாக அதிபரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதே காரணத்துக்காக டிக்-டாக், விசாட் என மொத்தம் 106 சீன செயலிகளுக்கு கடந்த இரு மாதங்களில் இந்தியா தடை விதித்தது
பிரதமர் மோடி நாட்டின் மிகச்சிறந்த பிரதமர்: 'MOTN' ஆய்வில் தகவல்
இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமர் நரேந்திர மோடி என்று 'Karvy Insights Mood of The Nation' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஆய்வு முடிவில் 44 சதவீத இந்தியர்கள் நரேந்திர மோடியை சிறந்த பிரதமர் என்று ஓட்டளித்துள்ளனர். மோடிக்கு அடுத்தபடியாக 14 சதவீத ஓட்டுகளுடன் வாஜ்பாய் இரண்டாம் இடத்தில் உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா 12 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும், மன்மோகன்சிங் 7 சதவீத ஓட்டுகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர். மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு 5 சதவீத ஓட்டுகளுடன் 5ம் இடம் கிடைத்துள்ளது.
மத்திய பிரதேசம் கவர்னராக லட்சுமிகாந்த்பாஜ்பாய் நியமனம்.
மத்திய பிரதேச மாநிலத்தின் கவர்னராக இருந்து வந்த லால்ஜி டாண்டன் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் லக்னோவில் காலமானார். இதனையடுத்து உத்திரப் பிரதேச மாநில கவர்னராக இருந்து வரும் ஆனந்தி பென் படேல் மத்திய பிரதேச கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனிடையே உத்திரப் பிரதேச மாநில பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் மத்திய பிரதேசமாநிலத்தின் புதிய கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment