உடல் உறுப்பு தான தினம் - தமிழகம்
உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் நிலவி வரும் அறியாமையை அகற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஆகஸ்டு 13-ந் தேதி (இன்று) சர்வதேச உடல் உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி ஜெயலலிதா உருவாக்கினார். அதன் பயனாக, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1,382 கொடையாளர்களிடம் இருந்து 8 ஆயிரத்து 163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளன. உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 5-வது முறையாக தமிழகம் முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது.
- கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டது ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளின் நலனை கண்காணித்து, அறுவை சிகிச்சை செய்த ஆஸ்பத்திரிகளில் இருந்து அதற்கான விவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெற்று, ஆய்வு செய்ய 10 ஆண்டுகளுக்கான தரவுகளை தேசிய அளவில் சேகரித்த முதல் மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து வருகிறது.
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டம்
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு-நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி 13.08.2020 அன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.100 கோடி
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் பேருக்கு, 100 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிக்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி அளிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ், ஒரு வியாபாரிக்கு, அதிகபட்சம், 10 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்படும்.அதை, ஓராண்டுக்குள் அவர்கள் திரும்ப செலுத்த வேண்டும். வங்கிகளைத் தவிர வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலமும், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
10 கோடி தடுப்பூசி மருந்துகளை வாங்க மாடர்னா நிறுவனத்திடம் அமெரிக்கா ஒப்பந்தம்
மாடர்னா நிறுவனத்திடம் 10 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. மாடர்னா நிறுவனத்தின் கண்டுபிடிப்பான கொரோனா தடுப்பூசி mRNA-1273 ஏற்கனவே இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளது. இதையடுத்து சுமார் 11,400 கோடி ரூபாய் செலவில் 10 கோடி தடுப்பூசி மருந்துகளை வாங்க அந்நிறுவனத்திடம் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. நபர் ஒருவருக்கு இரண்டு தடுப்பூசிகள் போட சுமார் ரூ 2,300 செலவு ஆகும் என மாடர்னா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி ஆய்வுக்காக மாடர்னா நிறுவனத்திற்கு அமெரிக்கா ஏற்கனவே ரூ 19,000 கோடி நிதி உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணியை தொடங்க உத்தரகண்ட் அரசு திட்டம்
உத்தரகண்ட் மாநிலத்தில் திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணியை துவங்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்காக உத்தரகண்ட்டில் ஆறு ஆலைகளை அமைக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கிறது. மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி, மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் கழிவுகளிலிருந்து சுமார் 300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும்.
அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். ஜனாதிபதி தேர்தலுடன் சேர்ந்து துணை ஜனாதிபதிக்கான தேர்தலும் நடக்க இருக்கிறது. அதன்படி குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது யார் என்பது இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தனது வாக்குறுதி மற்றும் கட்சியினரின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், கருப்பின பெண்ணுமான கமலா ஹாரிசை துணை ஜனாதிபதி பதவிக்கு ஜோ பிடன் தேர்வு செய்துள்ளார். 55 வயதான கமலா ஹாரிசின் தந்தை டெனால்டு ஹாரிஸ் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜமைக்காவைச் சேர்ந்தவர்; இந்தியரான அவரது தாய் சியாமளா கோபாலன் ஹாரிஸ் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பிறந்தவர் ஆவார். தற்போது கமலா ஹாரிஸ் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த செனட் சபை எம்.பி.யாக இருக்கிறார்.
உலக உடல் உறுப்பு தான தினம் - ஆகஸ்ட் 13
உடல் உறுப்பு தான தினம் ஆகஸ்ட் 13-அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் 2010-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 27-ஆம் தேதியும் உடல் உடல் உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்படுகிறது.
Post a Comment