-->

Current Affairs in Tamil Medium: 27.08.2020

புதிய தொல்பொருள் வட்டமாக திருச்சி மத்திய கலாசார துறை அறிவிப்பு
 • தமிழகத்தில் திருச்சியை புதிய தொல்பொருள் வட்டமாக அறிவித்து அங்கு புதிய கண்காணிப்பாளர் அலுவலகம் அமைத்து அதன் கீழ் தென் மாவட்ட தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், புராதன சின்னங்கள் இணைக்கப்படும் என்று மத்திய கலாசார துறை அறிவித்துள்ளது. திருச்சி புதிய தொல்பொருள் வட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் தென் மாவட்டங்களில் உள்ள கோவில்கள், பாரம்பரிய சின்னங்கள் இனி திருச்சி வட்ட தொல்பொருள் துறையின் கீழ் செயல்படும் என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை மந்திரி பிரகலாத்சிங்படேல் தெரிவித்து உள்ளார்.
 • தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை கோவில், அங்குள்ள பல்லவர் கால புராதன சிற்பங்கள், வேலூர் கோட்டை, புதுக்கோட்டை சித்தன்னவாசல், மதுரை திருமலைநாயக்கர் மகால், கீழடி, தஞ்சை பிரகதீஸ்வரா கோவில், செஞ்சி கோட்டை, கங்கைகொண்ட சோழபுரம், சென்னை அருங்காட்சியகம் மற்றும் தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த நூற்றுக்கணக்கான கோவில்கள், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ள பாரம்பரிய புராதன சின்னங்கள் இதுவரை சென்னை வட்ட தொல்பொருள் துறையின் கீழ் இயங்கி வந்தது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய தொல்லியல் துறையின் கீழ் நடந்த அகழ்வாய்வு பணிகள் அனைத்தும் சென்னை வட்ட தொல்பொருள் துறையின் கீழ் இதுவரை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லா வகை கொரோனாவையும் தடுத்து நிறுத்தும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு
 • இதுவரை உருவாக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருகிற தடுப்பூசிகளில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி, இந்தியாவில் விரைவில் மருத்துவ பரிசோதனையை எதிர்கொள்ளும் ‘கோவிஷீல்டு’ நம்பகரமான ஒன்றாக அமைந்துள்ளது. இது கொரோனா வைரசை தடுத்து நிறுத்தும் நோய் எதிர்ப்பு பொருளை உருவாக்குவதுடன், டி செல்களையும் உருவாக்குவது இரட்டை பாதுகாப்பு அம்சம் என்று விஞ்ஞான உலகம் சொல்கிறது. 
 • இந்த தருணத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை போன்றே பிரபலமான இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் புதிதாக ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்து உள்ளது. இந்த தடுப்பூசிக்கு ‘டியோஸ்-கோவேக்ஸ் 2’ என பெயரிப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் சிறப்புத்தன்மை, இது எல்லாவிதமான கொரோனா வைரசையும் தடுத்து நிறுத்தும். அது மட்டுமின்றி, வவ்வால்கள் உள்ளிட்ட பிராணிகளிடம் இருந்து எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பரவக்கூடிய கொரோனா வைரஸ்களையும் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. இந்த ‘டியோஸ்-கோவேக்ஸ் 2’ தடுப்பூசி, மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனையை இந்த ஆண்டு இறுதியில் சந்திக்கும். இந்த தடுப்பூசி திட்டத்துக்கு இங்கிலாந்து அரசு 1.9 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.18.62 கோடி) நிதி உதவி வழங்கி உள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி: தமிழகத்தில் பரிசோதிக்க முதல்வர் உத்தரவு
 • ஆக்ஸ்போர்டு பல்கலை. தயாரித்துள்ள கோவிஷீல்டு எனப்படும் கரோனா தடுப்பூசி பல்வேறு நாடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா குணமடைதலில் புதுதில்லி முன்னிலை
 • இந்தியாவில் கரோனாவால் குணமடைபவர்களின் விகிதத்தில் தலைநகர் தில்லி முன்னணியில் உள்ளது. இதுவரை கரோனா பாதிப்பிலிருந்து 90 சதவிகிதத்தினர் குணமடைந்த முதல் மாநிலம் எனும் பெருமையை புதுதில்லி பெற்றுள்ளது. புதுதில்லியில் கரோனாவால் குணமடந்தோர் விகிதம் 90.04% ஆக உள்ளது.
தமிழக-கேரள எல்லையில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நிஷாகந்தி மலர்
 • தமிழக-கேரள எல்லைப் பகுதியில் ஆண்டுக்கு ஒரே ஒருமுறை, ஒரு நாள் மட்டும் பூக்கும் நிஷா காந்தி மலர் பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. தமிழக கேரள எல்லைப் பகுதியான தேனி மற்றும் இடுக்கி மாவட்ட பகுதிகளில் நிஷாகந்தி மலர் செடிகள் உள்ளது. அதிக வாசனையுடன் இரவில் மட்டுமே பூக்கும் இந்த மலர் குளுமையான சீதோஷ்ண நிலை உள்ள இடங்களில் காணப்படும்.
உலகின் அதிவேக மனித கால்குலேட்டர்; 20 வயது இந்திய இளைஞர் சாதனை
 • லண்டனில் நடந்த மனக் கணக்கீட்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில், கணித மேதை சகுந்தலா தேவியின் சாதனையை முறியடித்து, தங்கம் வென்ற 20 வயது இந்திய இளைஞர், 'உலகின் அதிவேக மனித கால்குலேட்டர்' என்ற பட்டத்தை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
 • லண்டனில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி, 'மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட்'டில் மனக் கணக்கீட்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டியில், இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, கிரீஸ், பிரான்ஸ் மற்றும் லெபனான் உள்ளிட்ட 13 நாடுகளை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து, ஐதராபாத்தை சேர்ந்த நீலகண்ட பானு பிரகாஷ்(20) கலந்து கொண்டார். போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அவர், சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். தங்கப்பதக்கத்தை வென்றதன் மூலம், 'உலகின் அதிவேக மனித கால்குலேட்டர்' என்ற பட்டத்தை வசப்படுத்தினார்.
 • டில்லி பல்கலையின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில், கணிதம் (ஹானர்ஸ்) பயின்று வருகிறார். தனது விரைவான கணித கணக்கீடுகளுக்காக, 50 லிம்கா உலக சாதனைகளையும் படைத்துள்ளார். இந்த சாதனைகளை ஸ்காட் பிளான்ஸ்பர்க் மற்றும் சகுந்தலா தேவி போன்ற கணித மேதைகள் மட்டுமே வைத்திருந்தனர். தற்போது பானு பிரகாஷ் இச்சாதனையை படைத்துள்ளார்.
இந்திய பெண் சாப்ட்வேர் இன்ஜினியருக்கு அமெரிக்க குடியுரிமை
 • இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடந்தது. இந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த பெண் சாப்ட்வேர் இன்ஜீனியர் சுதா சுந்தரி நாராயணன் என்பவர் பங்கேற்றார். அதிபர் டிரம்ப் முன்னிலையில் அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார். அவருக்கு அமெரிக்க குடியுரிமைக்கான சான்றிதழை டிரம்ப் வழங்கினார். நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியது, இந்திய பெண்மணி சுதா சுந்தரி நாராயணன் மிகவும் திறமையான சாப்ட்வேர் டெவலப்பர். அமெரிக்க குடியுரிமை பெற்ற நீங்கள், அமெரிக்க சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என டிரம்ப் கேட்டுக்கொண்டார்.
நீர்மூழ்கி கப்பலை நவீனப்படுத்த உதவி செய்ய வேண்டும் என பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஜெர்மனி நிராகரித்து விட்டது.
 • பாகிஸ்தான் தனது நீர்மூழ்கி கப்பல்களை, அதிநவீன தொழில்நுட்பம் மூலம் தரம் உயர்த்த முயற்சி செய்து வருகிறது. வழக்கமாக நீர்மூழ்கி கப்பல்கள் நீர்மட்டத்தில் தெரியாதபடி தண்ணீருக்குள் வந்தாலும், இரண்டு நாளுக்கு ஒரு முறை கடல் பரப்புகக்கு மேல் வர வேண்டும். அவ்வாறு, கடல் பரப்புக்கு மேலே வராமல் சமாளிப்பதற்கு என ஏர் இன்டிபென்டன்ட் புரோபுல்ஷன் (ஏஐபி)என்ற தொழில்நுட்பம் உள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம், நீர்மூழ்கி கப்பல்கள் வாரக்கணக்கில், கடலின் பரப்புக்கு வராமல் , மறைந்திருந்து தாக்க முடியும். தப்பிவிட முடியும். இதனால், ஏஐபி தொழில்நுட்பத்தை தங்களுக்கு தரும்படி, ஜெர்மனியிடம் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது.
 • இது தொடர்பாக ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் தலைமையிலான பாதுகாப்பு குழு ஆலோசித்தது. முடிவில், ஏஐபி தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்க மறுத்துவிட்டது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்திய கடற்படைக்கு என, சொந்தமாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏஐபி தொழில்நுட்பம் உள்ளது. இதனை நேவல் மெட்டிரியல் ஆராய்ச்சி ஆய்வகம்(என்எம்ஆர்எல்) உருவாக்கியுள்ளது.
பெய்ஜிங்கில் இணையவழி புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு
 • பெய்ஜிங்கில் வரும் செப்டம்பர் மாதத்தில் இணையவழியில் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வரும் நிலையில், கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தற்போது இணைய வழியில் புத்தக கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில்  செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்கும் 27வது புத்தக கண்காட்சியை தேசிய பத்திரிகை மற்றும் பதிப்பக நிர்வாகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், பெய்ஜிங் நகராட்சி நிர்வாகம், சீனாவின் பதிப்பக கூட்டமைப்பு மற்றும் எழுத்தாளர் கூட்டமைப்பு ஆகியவை சேர்ந்து நடத்த உள்ளது. 
 • சுமார் 4,00,000 புத்தகங்கள் இணையவழி கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. 1986-ஆம் ஆண்டிலிருந்து இணையவழியில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவிலிருந்து இறக்குமதியாகும் கோழி இறைச்சிக்கு ஹாங்காங் அரசு தடை
 • பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் ரஷியாவிலிருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்யப்படுவதை தற்காலிகமாக நிறுத்த ஹாங்காங்கின் உணவு பாதுகாப்பு ஆணையம் புதன்கிழமை முடிவு செய்துள்ளது. ரஷியாவின் ஓம்ஸ்காயாவில் எச்5 நோய்க்கிருமிகள் பரவலின் காரணமாக பறாவைக்காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துருந்தது. இதனைத் தொடர்ந்து  ஹாங்காங் அரசாங்கத்தின்  உணவு  ரஷியாவிலிருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய தற்காலிக தடை விதித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் கிராவ்லி முன்னேற்றம்
 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் முதலிடத்திலும், இந்தியாவின் விராட் கோலி 2-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் கம்மின்சும் (ஆஸ்திரேலியா), 2-வது இடத்தில் ஸ்டூவர்ட் பிராட்டும் (இங்கிலாந்து) தொடருகிறார்கள். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறினார்.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting