தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு
- தேசிய நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலீப் மற்றும் சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சரஸ்வதி ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
- ஆசிரியராக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் டில்லி விக்யான் பவனில் செப்டம்பர் 5-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் விருது வழங்கப்படும்.
இந்திய தேர்தல் ஆணையராக ராஜிவ்குமார் சுக்லா நியமனம்
- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஆசிய வளர்ச்சி வங்கியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பதவிக்கு ராஜிவ் குமார் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பதவிக்கு 1984-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேடரும், முன்னாள் நிதித்துறை செயலாளருமான ராஜிவ் குமார் சுக்லா நியமிக்கப்பட்டார்.
பிரதமரின் முன்மாதிரி கிராம வளர்ச்சி திட்டம்: 96 சதவீதத்துடன் தமிழகம் 'நம்பர் 1'
- பிரதமரின் கிராம வளர்ச்சித் திட்டத்தில் (Sansad Adarsh Gram Yojana), 96 சதவீத திட்டப்பணிகளை நிறைவேற்றிய தமிழகம், முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்கம் ஒரு சதவீத பணிகளை கூட நிறைவேற்றவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, தான் பிரதமராக பதவியேற்ற முதலாம் ஆண்டில், 2014 அக்டோபர் மாதம், ஒவ்வொரு எம்.பி.,யும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து முன்மாதிரியாக உருவாக்க வேண்டும் என அறிவித்தார். இது அறிவித்து 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தில் இந்திய அளவில் இதுவரை 63 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.
- இத்திட்டத்தில், 96 சதவிகித பணிகளை முடித்து, தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 88 சதவீத பணிகளை முடித்த உத்திரபிரதேசம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மகாராஷ்டிரா 44%, ஒடிசா 42%, பஞ்சாப் 37%, பிகார் 36%, அசாம் 25% பணிகளை முடித்துள்ளன. மேற்கு வங்கம் ஒரு புராஜக்டை மட்டுமே முடித்துள்ளது.
ஒரு வருடத்தில் 4,400 முறை நிலவை வலம் வந்த சந்திராயன்-2
- நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம், இஸ்ரோ, கடந்த ஜூலை., 22ல் சந்திராயன் 2 என்ற விண்கலத்தினை ஜி.எஸ்.எல்.வி., 3 ராக்கெட் மூலம் ஏவியது. சந்திராயன்-2 வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு இன்றுடன் (ஆகஸ்டு 22) ஒரு வருடம் ஆகும் நிலையில் இதுவரை மொத்தம் 4,400 முறை நிலவை வெற்றிகரமாக சுற்றி வந்துள்ளது. விண்கலத்தின் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவின் சுற்று வட்டப்பாதையில் நிலவிலிருந்து 100 அல்லது 125 கி.மீ., தொலைவில் சுற்றி வருகிறது. மேலும், 7 வருடங்கள் நிலவைச் சுற்றி வருவதற்கு தேவையான எரிபொருள் அதில் இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நொய்டாவில் குடிநீர் விநியோகத்தைக் கணக்கிட தண்ணீர் மீட்டர் அறிமுகம்
- உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவைக் கணக்கிட தண்ணீர் மீட்டர் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை தொழில்நுட்பங்களை கண்காணிக்க 'ஹரித் பாத்' மொபைல் ஆப்
- புதிய பசுமை நெடுஞ்சாலை கொள்கை (தோட்டக்கலை) மறுஆய்வு செய்வதற்கும், சாலை கட்டுமானத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து விவாதிப்பது தொடர்பாக நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
- அதில் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் கட்டுமானம் தொடர்பாக கட்கரி, ஹரித் பாத் என்னும் மொபைல் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அனைத்து தேசிய தோட்ட திட்டங்களின் கீழ் ஒவ்வொன்றுக்கும் அதற்கான இடம், வளர்ச்சி , பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் அதன் இலக்குகள் ,அதன் ஒவ்வொரு கள அலகுகளின் சாதனைகள் ஆகியவற்றைக் கண்காணிக்க இந்திய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI ) இந்த பயன்பாட்டை உருவாக்கியுள்ளது.
கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ: அவசர நிலை பிரகடனம்
- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயால் மாகாணத்தின் கவர்னர் கவின் நியூசோம் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். கடந்த 3 நாட்களில் அம்மாகாணத்தில் 11 ஆயிரம் இடங்களில் மின்னல் தாக்கியதில் 367 இடங்களில் தீப்பற்றி எரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டுத்துறைக்கான விருதுகள் மத்திய அரசு அறிவிப்பு
- இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம் தேதியை, தேசிய விளையாட்டு தினமான கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில், விளையாட்டுத்துறையில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு மத்திய அரசு சார்பில் 'கேல் ரத்னா', 'அர்ஜுனா' உள்ளிட்ட விருது வழங்கி கவுரவிக்கப்படும். வரும் ஆகஸ்ட் 29 ம் தேதி தேசிய விளையாட்டு தினத்தன்று, இந்த விருதுகளை ஜனாதிபதி வழங்க உள்ளார். இந்த தேசிய விருது வழங்கும் விழா ஆன்லைனில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விருது பெற்றவர்கள் விவரம்
ராஜீவ் காந்தி கேல் ரத்னா'விருது
- மிக உயரிய ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதை இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரர் மாரியப்பன், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஆகியோர் பெறுகிறார்கள். கேல் ரத்னா விருதை ஒரே ஆண்டில் 5 பேர் அறுவடை செய்வது இதுவே முதல்முறையாகும். இந்திய கிரிக்கெட் வீரர்களில் கேல்ரத்னா விருதை பெறும் 4வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன்பு, சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோஹ்லி, ஆகியோர் பெற்றுள்ளனர்.
தயான்சந்த் விருது
- தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் ரஞ்சித் குமார், குல்தீப் சிங்(தடகளம்) ஜின்சி பிலிப்ஸ்(தடகளம்) என்.உஷா(குத்துச்சண்டை) நந்தன் பி பால்(டென்னிஸ்) உள்ளிட்ட 15 வீரர்களுக்கு தயான்சந்த் விருது வழங்கப்பட உள்ளது.
துரோணாச்சார்யா விருது
- சிறந்த வீரர்களை உருவாக்கிய 13 பயிற்சியாளருக்கு இந்த ஆண்டு துரோணாச்சார்யா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மேந்திரா திவாரி(வில்வித்தை) ஷிவ் சிங்(குத்துச்சண்டை) நரேஷ் குமார்(டென்னிஸ்) ஜூட் பெலிக்ஸ்(ஹாக்கி), ஜஸ்பல் ராணா(துப்பாக்கிச்சுடுதல்) உள்ளிட்ட 13 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜூனா விருது பெறுபவர்கள்
- அர்ஜூனா விருதை அதானு தாஸ் (வில்வித்தை), டுட்டீ சந்த் (தடகளம்), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி (இருவரும் பேட்மிண்டன்), விகேஷ் பிகுவான்ஷி (கூடைப்பந்து), மனிஷ் கவுசிக், லவ்லினா போர்கோஹைன் (இருவரும் குத்துச்சண்டை), இஷாந்த் ஷர்மா, தீப்தி ஷர்மா (இருவரும் கிரிக்கெட்), சவாந்த் அஜய் ஆனந்த் (குதிரையேற்றம்), சந்தேஷ் ஜின்கான் (கால்பந்து), அதிதி அசோக் (கோல்ப்), ஆகாஷ்தீப் சிங், தீபிகா (இருவரும் ஆக்கி), தீபக் (கபடி), காலே சரிகா சுதாகர் (கோ-கோ), தத்து பாபன் போகனல் (துடுப்பு படகு), மானு பாகெர், சவுரப் சவுத்ரி (இருவரும் துப்பாக்கி சுடுதல்), மாதுரிகா பத்கர் (டேபிள் டென்னிஸ்), திவிஜ் சரண் (டென்னிஸ்), ஷிவ கேசவன் (குளிர்கால விளையாட்டு), திவ்யா காக்ரன், ராகுல் அவாரே (இருவரும் மல்யுத்தம்), சுயாஷ் நாராயண் ஜாதவ் (பாரா நீச்சல்), சந்தீப் (பாரா தடகளம்), மனிஷ் நார்வால் (பாரா துப்பாக்கி சுடுதல்) உள்ளிட்ட 27 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு
- ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், நாட்டின் ஏற்று மதி அதிகரித்து வரும் நிலையில், சீனாவுக்கான ஏற்றுமதி வளர்ச்சி, 78 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதேசமயம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி சரிந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, மைனஸ் 60.2 சதவீதம் அளவுக்கு சரிந்த நிலையில், ஜூலையில் மைனஸ் 10.2 சதவீதம் என்ற அளவுக்கு மீட்சியை கண்டது.தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் ஏற்றுமதியும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது.
கரோனா தடுப்பூசி சோதனை: சீன தொழிலாளா்களுக்கு பப்புவா நியூ கினியா தடை
- சோதனை முறையில் கரோனா தடுப்பூசி போடப்பட்ட 48 சீனத் தொழிலாளா்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க பப்புவா நியூ கினியா மறுத்துவிட்டது. தங்களது ஒப்புதல் இல்லாமல் தங்கள் நாட்டில் பணியாற்றும் தொழிலாளா்களிடம் கரோனா தடுப்பூசி பரிசோதனையை சீனா மேற்கொண்டது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். இந்த நிலையில், எங்கள் நாட்டுக்கு வரும் சீனத் தொழிலாளா்களுக்கு அத்தகைய தடுப்பூசி பரிசோதனை முறையில் போடப்பட்டுள்ளது எந்த வகையிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சீனாவிலிருந்து வந்த கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவா்கள் உள்பட 180 தொழிலாளா்களைத் திருப்பி அனுப்பப்பட்டனா்.
துருக்கியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு -அதிபர் அறிவிப்பு
- துருக்கியின் கருங்கடலில் பெரிய அளவில் இயற்கை எரிவாயு இருப்பதாக அதிபர் எர்டோகன் அறிவித்தார். துருக்கி கருங்கடலில் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் துளையிடும் கப்பலான பாத்திஹ், சுமார் 3200 கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயுவைக் கண்டுபிடித்துள்ளது. இந்த இயற்கை எரிவாயுவை 2023-ம் ஆண்டு பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளோம் என கூறினார்.
Post a Comment