இந்திய எல்லையில் சீனா அத்துமீறல் அமெரிக்க செனட் கண்டன தீர்மானம்
- இந்தியாவின் லடாக் எல்லையில், சீனா மேற்கொண்ட அத்துமீறல் நடவடிக்கையை கண்டித்து, அமெரிக்க பார்லி.,யின் செனட் சபையில், கண்டன தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில், குடியரசு கட்சி கொறடாவான, ஜான் கோர்னைன், செனட் தேர்வுக்குழு உறுப்பினர், மார்க் வார்னர் இருவரும். சீனாவின் அத்துமீறலை எதிர்த்து, கண்டன தீர்மானம் தாக்கல் செய்தனர்.
இந்தியா வரும் பிரதமருக்கான போயிங் 777 அதிநவீன விமானம்
- இந்தியாவில் தற்போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகிய மிக முக்கியமான பிரமுகர்கள் ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த விமானங்கள் ஏர் இந்தியா ஒன் என்று அழைக்கப்படுகிறது.இந்த நிலையில் நாட்டின் வி.வி.ஐ.பி.க்கள் பயன்பாட்டுக்காக 2 ஜம்போ விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.1,422 கோடியே 99 லட்சத்து 36 ஆயிரம் ( 190 மில்லியன் அமெரிக்க டாலர் ) மதிப்பில் 2 போயிங் 777 விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கான முதல் போயிங் 777 விமானம் தற்போது தயாராகி விட்டது.
- இந்த விமானத்தை பெறுவதற்காக ஏர் இந்திய அதிகாரிகள் தற்போது அமெரிக்கா சென்றுள்ளனர். மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் உடன் சென்று உள்ளனர். இந்த போயிங் 777 விமானம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகளை கொண்டது என்பது சிறப்பு அம்சமாகும்.
74வது சுதந்திர தின விழா; செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி
- இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி, ஆகஸ்ட் 15-ல் டில்லி செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். செங்கோட்டையில் பிரமாண்டமாக நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டு எளிய முறையில் நடைபெற உள்ளது. முக்கிய விவிஐபி.,க்கள் 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7வது முறையாக செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி, நாட்டுமக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
23 லட்சம் பிபிஇ கிட்டுகள் 5 நாடுகளுக்கு ஏற்றுமதி
- அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், செனகல் மற்றும் ஸ்லோவேனியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு 23 லட்சம் பிபி இ கிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மத்திய அரசுக்கு ரூ 57,128 கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்
- மத்திய அரசுக்கு ஈவுத் தொகையாக ரூ 57,128 கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கி உள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிர்வாக கூட்டம் 14.08.2020 அன்று புதுடில்லியில் நடந்தது. கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கொரோனா பரவல் மற்றும் பாதிப்பால் மத்திய அரசின் வரி வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. அத்துடன் அரசுக்கு செலவுகளும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக நடப்பு ஆண்டு 2019-20ல் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு 6 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
- இச்சூழலில் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் ரிசர்வ் வங்கி அளிக்கும் நிதி, வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 'RBI Act 1934' ன் படி ரிசர்வ் வங்கி லாபமாக ஈட்டிய தொகை மத்திய அரசுக்கு கொடுக்கப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு கடனாக கொடுத்த வகையில் கணிசமாக லாபம் ஈட்டியுள்ளது.
'கோவாக்சின்' தடுப்பூசி பாதுகாப்பானது: முதல்கட்ட பரிசோதனை முடிவில் தகவல்
- கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள 'கோவாக்சின்' தடுப்பூசி மருந்து பாதுகாப்பானது என முதல்கட்ட பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.
காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்
- ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கால் விற்பனையாகாமல் தேக்கமடைந்த காலாவதியான பீரை பயன்படுத்தி, சுத்திகரிப்பு நிலையம் ஒன்று மின்சாரம் தயாரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள 'தி கிளெனெல்க்' என்ற கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உணவகங்கள், மதுபான விடுதி மற்றும் பார்களில் விற்பனையாகமல் கெட்டு போன பீர்களை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக மாற்றியுள்ளது.
தமிழக காவல்துறையில் 15 பேருக்கு முதல்-அமைச்சர் விருது
- தமிழக காவல்துறையில் சிறந்த சேவை, புலனாய்வு பணிக்காக 15 பேருக்கு முதல்-அமைச்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு 2020-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்-அமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
“அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு” - சத்து மாத்திரை, சோதனை கருவிகள் அடங்கிய பெட்டகம்
- கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மூலமாக “அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு” சேவை திட்டத்தின் கீழ், சலுகை விலையான ரூ.2,500-ல், 14 நாட்களுக்கான தொகுப்பாக ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி, ஒரு டிஜிட்டல் வெப்பமானி, 14 முககவசங்கள், ஒரு கைகழுவும் சோப்பு, அதிமதுரம் மற்றும் கபசுரக் குடிநீர் பவுடர் பாக்கெட்டுகள், 60 அமுக்ரா சூரணம் மாத்திரைகள், 14 வைட்டமின்-சி மாத்திரைகள், 14 ஜிங்க் மாத்திரைகள், 14 மல்டி வைட்டமின் மாத்திரைகள், கோவிட் கையேடு ஆகியவை அடங்கிய பெட்டகங்களை வழங்கிடும் அடையாளமாக, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அலுவலருக்கு பெட்டகத்தை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
Post a Comment