101 ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடு: ராஜ்நாத் சிங் அறிவிப்பு
உள்நாட்டில் ராணுவ தளவாடங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 101 வகையான ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாகவும், உள்நாட்டில் உள்ள ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் படிப்படியாக ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்து உள்ளார். உலகில் ராணுவ தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 8 ஆண்டுகளாக ராணுவ தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழில்துறை மீண்டு எழுவதற்காக, மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவித்தது. அந்த திட்டங்களில் ஒன்று, வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் ஆகும். இந்நிலையில், வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிதியத்தின் கீழ், தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், விவசாய அமைப்புகள், விவசாய உற்பத்தி அமைப்புகள், வேளாண் தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு 4 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். 11 பொதுத்துறை வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்காக, அவ்வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குளிர்பதன சேமிப்பு மையங்கள், சேமிப்பு கிடங்குகள், மின்னணு வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை அமைக்க இந்த கடன் வழங்கப்படும்.
இந்திய விமானிகள் 4 பேருக்கு ரஷியாவில் முதல் கட்ட பயிற்சி நிறைவு
ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய விமானிகள் 4 பேருக்கு ரஷியாவில் முதல் கட்ட பயிற்சி முடிந்தது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான (இஸ்ரோ) விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை வருகிற 2022-ம் ஆண்டு செயல்படுத்த உள்ளது. இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்காக இந்திய விமானப்படையில் இருந்து 25 விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த 4 பேருக்கும் ரஷியாவில் காகரினில் உள்ள காஸ்மோனட் பயிற்சி மையத்தில் கடந்தபிப்ரவரி 10-ந்தேதி பயிற்சி தொடங்கியது. ஒடிசா மாநில விமானப்படையை சேர்ந்த கமாண்டரான நிகில் ராத் உள்ளிட்ட 4 விமானிகளும் முதல் கட்ட பயிற்சியை முடித்து உள்ளனர்.
இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றார்
இலங்கை பிரதமராக 74 வயதான ராஜபக்சே மீண்டும் பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழா தலைநகர் கொழும்பு அருகே கெலனியா என்ற இடத்தில் உள்ள ராஜமகா விகாரயா புத்த கோவிலில் நேற்று காலை நடைபெற்றது. ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்பது இது 4-வது முறை ஆகும். 1970-ம் ஆண்டில் முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட ராஜபக்சே 2004-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2005-ம் ஆண்டு நவம்பர் வரையும், பின்னர் 2018-ம் ஆண்டில் 52 நாட்களும், அதன்பிறகு கடந்த ஆண்டு நவம்பர் முதல் இதுவரையும் ஏற்கனவே மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார். இதுதவிர 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இரு முறை அதிபராக பதவி வகித்து இருக்கிறார்.
உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகளை ஈா்க்க வலைதளம்: நிா்மலா சீதாராமன் தொடக்கி வைத்தாா்
நாடு முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் உள்கட்டமைப்பு திட்டங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈா்க்கும் வகையில் ஒருங்கிணைந்த தகவல் வலைதளத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் காணொலி மூலம் தொடக்கி வைத்தாா். நாட்டில் மத்திய அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களின் தகவல்களும், அதில் தனியாா்-அரசு கூட்டு முதலீடு செய்வது குறித்த தகவல்களும் இந்த புதிய ஒருங்கிணைந்த வலைதளத்தில் இடம்பெறும். மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும் தங்கள் துறைகளில் நடைபெறும் அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த தகவல்களை உடனடியாக இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாா்.
லெபனான் வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹசன் தியாப் ராஜிநாமா
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று, அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தனது பதவியை ராஜிநாமா செய்தார். லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த 2013}ஆம் ஆண்டு முதல் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் ரசாயனம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இது எதிர்பாராதவிதமாக வெடித்து, கடந்த 4 ஆம் தேதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 160 பேர் பலியாகினர்; 6,000 பேர் காயமடைந்தனர். 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். பல கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹசன் தியாப் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, லெபனானில் போராட்டங்கள் நிகழ்ந்தன. இந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இவர் அரசியலுக்கு வரும் முன், பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் ஆவார்.
பெலாரஸ் அதிபா் தோதல்: 6-ஆவது முறையாக லுகஷென்கோ வெற்றி
பெலாரஸில் நடைபெற்ற அதிபா் தோதலில் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தொடா்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்றாா்.
கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபா் தோதல் நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோவை எதிா்த்து ஸ்வியட்லானா ஷிகானோஸ்கயா போட்டியிட்டாா். அதில் அதிபா் லுகஷென்கோவுக்கு ஆதரவாக 80.23 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக பெலாரஸ் தோதல் ஆணையம் அறிவித்தது. அவா் தொடா்ந்து ஆறாவது முறையாக பெலாரஸின் அதிபராக பதவியேற்கவுள்ளாா். கடந்த 26 ஆண்டுகளாக அதிபா் பதவியை லுகஷென்கோ வகித்து வருகிறாா்.
சென்னை-போர்ட்பிளேர் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்
சென்னையையும் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரையும் கடல் வழியாக இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி போர்ட்பிளேர் நகரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் இருந்து அந்தமானுக்கு கடலுக்கு அடியில் 2,312 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.1,224 கோடி செலவில் கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டு உள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்த பணியை 24 மாதங்களுக்கும் குறைவான காலத்தில் செய்து முடித்து இருக்கிறது. இந்த கண்ணாடி இழை கேபிள் திட்டம் சென்னை-போர்ட்பிளேரையும், போர்ட்பிளேர்-லிட்டில் அந்தமானையும், போர்ட்பிளேர்-சுவராஜ் தீவையும் இணைக்கிறது. மேலும் லாங் தீவு, ரங்கத், கமமோர்ட்டா, கார் நிகோபார், கிரேட்டர் நிகோபார் ஆகியவற்றையும் இணைக்கிறது. இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னை-போர்ட்பிளேர் இடையேயான கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அந்தமானில் ரூ.10 ஆயிரம் கோடியில் புதிய துறைமுகம்
கடல் வழி போக்குவரத்தில் அந்தமான் முக்கியவத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்து உள்ளது. எனவே கிரேட் நிகோபாரில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மிகப்பெரிய துறைமுகம் கட்ட மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. இதன் மூலம் அங்கு பெரிய கப்பல்களை நிறுத்த முடியும். மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் அங்கு வரவும், அங்கிருந்து சரக்குகளை மற்றொரு துறைமுகத்துக்கு கொண்டு செல்லவும் இது உதவியாக இருக்கும்.
ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடையை நீட்டிக்க 6 வளைகுடா நாடுகள் கோரிக்கை
மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. மேலும் ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நீடித்தது. இதன் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா. ஆயுத தடையை விதித்தது. இதன் மூலம் ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. அக்டோபரில் முடிவுக்கு வர இருக்கும் ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடையை மேலும் நீட்டிக்க வேண்டும் என சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன், குவைத் மற்றும் பக்ரைன் ஆகிய 6 வளைகுடா நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் ஒன்றை உள்ளது.
பாலெர்மோ சர்வதேச பெண்கள் ஓபன் டென்னிஸ் போட்டி: பியோனா பெர்ரோ சாம்பியன்
பாலெர்மோ சர்வதேச பெண்கள் ஓபன் டென்னிஸ் போட்டி இத்தாலியில் நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 5 மாத இடைவெளிக்கு பிறகு அரங்கேறிய முதல் சர்வதேச டென்னிஸ் போட்டியான இதன் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 44-வது இடத்தில் இருக்கும் பியோனா பெர்ரோ (பிரான்ஸ்), தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள அனெட் கோன்டாவிட்டை (எஸ்தோனியா) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பியோனா பெர்ரோ 6-2, 7-5 என்ற நேர்செட்டில் அனெட் கோன்டாவிட்டை வீழ்த்தி ‘சாம்பியன்’ பட்டத்தை தனதாக்கினார்.
நாட்டின் முதல் கழுதைப் பால் பண்ணை : லிட்டர் ரூ.7000க்கு விற்பனை
இந்தியாவின் முதல்கழுதைப் பால் பண்ணை ஹரியானாவின் ஹிசார் பகுதியில் திறக்கப்படவுள்ளது. இங்கு ஒரு லிட்டர் கழுதைப் பால் 7000 ரூபாய்க்கு விற்கப்படலாம் என கூறப்படுகிறது.இந்தியாவில் பசு எருமை மற்றும் ஆடு போன்ற விலங்குகள் அவற்றின் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் என்.ஆர்.சி.இ. எனப்படும் குதிரை கழுதை உள்ளிட்ட விலங்குகள் குறித்து ஆய்வு செய்யும் தேசிய ஆராய்ச்சி மையம் ஹரியானாவின் ஹிசார் பகுதியில் கழுதைப் பால் பண்ணையை துவங்க திட்டமிட்டுள்ளது.அதன்மூலம் 'ஹலாரி' எனப்படும் ஒரு வகையான கழுதை இனத்தின் பாலை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.இதற்காக என்.ஆர்.சி.இ. 10 ஹலாரி கழுதைகளை வாங்கி இனப்பெருக்கம் செய்து வருகிறது.இந்தக் கழுதைகளின் பால் மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது புற்றுநோய் உடல் பருமன் ஒவ்வாமை உள்ளிட்ட பல நோய்களை எதிர்த்து போராடும் திறன் கொண்டது.சிறிய குழந்தைகளுக்கு பசு மற்றும் எருமைப் பால் மூலம் ஒவ்வாமை ஏற்படுவது வழக்கம்.
ஆனால் ஹலாரி கழுதைகளின் பால் ஒவ்வாமை பிரச்னையை ஏற்படுத்தாது.இப்படி மருத்துவ நற்குணங்களை கொண்டுள்ள இந்த கழுதையின் பால் ஒரு லிட்டர் 2000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை சந்தைகளில் விற்கப்படுகிறது.கழுதைப் பால் மூலம் தயாரிக்கப்படும் அழகுசாதன பொருட்களும் விலையும் அதிகம். இது 'சோப் லிப் பாம் பாடி லோஷன்' உள்ளிட்டவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முதன்முறையாக இந்திய தேசியக்கொடி
வரும் ஆகஸ்ட்15-ம் தேதி சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதையொட்டி யில் அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிகெட் ஆகிய மாகாணங்களில் வசித்து வரும் இந்தியர்கள் நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக்கொடியான மூவர்ண கொடியை ஏற்ற உள்ளனர். இந்த விழாவில் அமெரிக்க வாழ் இந்தியர்களும் பங்கேற்கின்றனர்.
ஆண்டுக்கு 100 யானைகள் பலி: மத்திய சுற்றுச்சூழல் துறை
ஒவ்வொரு ஆண்டும், யானைகள் மற்றும் மனிதர்கள் இடையே ஏற்படும் மோதல்களில், 100 யானைகள் உயிரிழப்பதாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக யானைகள் தினம் ஆகஸ்ட் 12-ல் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், நாட்டில் உள்ள யானைகள் குறித்த விபரங்களை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நேற்று, வெளியிட்டார். கடந்த, 2017ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், யானை மற்றும் மனிதர்களுக்கு இடையே, ஏற்படும் மோதல்களில், 100 யானைகள் உயிரிழக்கின்றன; யானைகள் தாக்கி, 500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்கின்றனர்.
பெர்சீட் விண்கற்கள் பொழிவை ஆக.11 இரவு முதல் காணலாம்
பெர்சீட் எனப்படும் விண்கற்கள் பொழிவை ஆக.11 முதல் ஆக. 13 வரை கண்டு ரசிக்கலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா அறிவித்துள்ளது. ஸ்விஃப்ட்-டட்டில் என்ற வால் நட்சத்திரம் சமீபத்தில் பூமியை கடந்து சென்ற போது விட்டுச் சென்ற குப்பைகள் காரணமாக கடந்த ஜூலை மாத இறுதியில் இருந்து பெர்சீட் விண்கற்கள் வானில் தென்பட்டு வருகின்றன. தற்போது அவற்றின் எண்ணிக்கை மற்றும் அளவு அதிகரித்துள்ளதாலும் வானிலையைப் பொருத்தும் எவ்வித உபகரணங்களும் இன்றி விண்கற்கள் பொழிவினை வெறும் கண்களால் கண்டு ரசிக்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த விண்கற்கள் மிகவும் பிரகாசமாகவும் மணிக்கு 1,32.000 மைல் வேகத்தில் பயணம் செய்பவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்கற்கள் பொழிவை அதிகாலை 2 மணி முதல் விடியற்காலை வரை பொதுமக்கள் தெளிவாக வானில் பார்க்க முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment