'நடப்பு நிதியாண்டில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடவில்லை': ரிசர்வ் வங்கி அறிவிப்பு
- 2019-20ம் நிதியாண்டில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் எதுவும் அச்சிடப்படவில்லை எனவும், கடந்த சில ஆண்டுகளாக 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்து வருவதாகவும் ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 2018 மார்ச் மாத இறுதியில் 33,632 லட்சமாக இருந்தது. 2019 மார்ச் மாத இறுதியில் 32,910 லட்சமாகவும், 2020 மார்ச் மாத இறுதியில் 27,398 லட்சமாகவும் குறைந்துள்ளது. 2020ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் மொத்த நோட்டுகள் 2.4 சதவீதமாக இருந்தது. இதுவே முந்தைய 2019 மார்ச் மாத இறுதியில் 3 சதவீதமாகவும், 2018 மார்ச் மாத இறுதியில் 3.3 சதவீதமாக இருந்தது.
விண்மீன் மண்டலத்தில் தீவிர புற ஊதா கதிர் உமிழ்வு: கண்டறிந்து சாதித்தது இந்திய செயற்கைகோள்!
- பூமியில் இருந்து 9.3 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், விண்மீன் மண்டலத்தில், தீவிர புற ஊதா கதிர் உமிழ்வு இருப்பதை இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைகோளான 'அஸ்ட்ரோசாட்' கண்டறிந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு செப்., 28ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி-30 ராக்கெட் மூலம் 'அஸ்ட்ரோசாட்' உள்ளிட்ட 7 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. செயற்கைகோள் செயல்பாடுகளை கண்காணித்து வந்த மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
- நம் விஞ்ஞானிகள் தலைமையிலான சர்வதேச வானியலாளர்கள் குழு, மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளனர். இந்தியாவின் முதல் பல அலைநீள செயற்கைக்கோள், ஐந்து தனித்துவமான எக்ஸ்ரே மற்றும் புற ஊதா தொலைநோக்கிகள், ஆஸ்ட்ரோசாட் உடன் இணைந்து செயல்படுகிறது. இது 'AUDFs01' என அழைக்கப்படும் ஒரு விண்மீன் மண்டலத்திலிருந்து தீவிர புற ஊதா ஒளியைக் கண்டறிந்துள்ளது. இது பூமியிலிருந்து 9.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
6-வது மாநில நிதி ஆணைய கூட்டம்
- 6-வது மாநில நிதி ஆணையத்தின் முதல் கூட்டம் நோய் தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் நேற்று நடந்தது. ஆணையத்தின் தலைவர் மோகன் பியாரே தலைமை தாங்கினார். உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் மற்றும் மின் கட்டணம் செலுத்துதல், குப்பைகளை அகற்றுவது ஆகியவற்றில் எதிர்கொள்ளும் சவால்கள், இயற்கை பேரழிவுகளில் உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல் உடைக்கப்படுகிறது
- நாட்டின் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலாக ‘ஐ.என்.எஸ். விராட்’ போர்க்கப்பல் வலம் வந்தது. 1987-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் 30 ஆண்டுகள் இந்திய கடற்படையில் நீண்ட நெடிய சேவை புரிந்தது. 3 ஆண்டுகளுக்கு முன் ஐ.என்.எஸ். விராட் தனது ஆயுளை இழந்தது. இதையடுத்து, இந்திய கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பலை உடைப்புக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.
- மும்பை கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள இந்த கப்பல் உடைப்பதற்காக குஜராத் மாநிலத்தின் அலாங் பகுதிக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்-2020) கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
41-வது, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற உள்ளது
- ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறை கடந்த 2017 ஜூலையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநில அரசுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய, மத்திய அரசு இழப்பீட்டு தொகை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 27-ல் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. கொரோனா பரவலை தடுக்க பிறப்பித்த ஊரடங்கால், மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் குறைந்துள்ளது. அத்துடன், ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்காக, மாநில அரசுகளுக்கு வழங்கும் இழப்பீட்டிற்கான நிதியத்திலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும், 41-வது, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், ஆகஸ்ட் 27-ல் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள்: ஆண்டர்சன் சாதனை
- இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் சௌதாம்படனில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 599 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் ஆண்டர்சன். இந்த நிலையில், 25.08.2020 அன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மழை காரணமாக நீண்ட நேரத்துக்குப் பிறகே ஆட்டம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, 31 ரன்கள் எடுத்திருந்த அசார் அலியை ஆண்டர்சன் வீழ்த்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில், முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்ன் (708) மற்றும் அனில் கும்ப்ளே (619) ஆகியோருக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் ஆண்டர்சன் உள்ளார்.
தேசிய மாற்றுப் பாலினத்தவா் ஆணையம்: மதுரையைச் சோ்ந்தவா் பிரதிநிதியாக நியமனம்
- மத்திய சமூக நீதி அமைச்சரை தலைவராகக்கொண்டு இயங்கும் தேசிய மாற்றுப் பாலினத்தவா் ஆணையத்தில், பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த செயலா்கள் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். அத்துடன், நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு என 5 பிராந்தியங்களில் தலா ஒரு மாற்றுப் பாலினத்தவா் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளனா். இதில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, லட்சத்தீவு ஆகியவற்றை உள்ளடக்கிய தெற்கு பிராந்திய பகுதிக்கு, மதுரையைச் சோ்ந்த கோபிசங்கா் நியமிக்கப்பட்டுள்ளாா். இவரது பதவிக் காலம் மூன்று ஆண்டுகளாகும்.
ரூ.40 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு
- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லியின் முதலாவது நினைவு தினத்தையொட்டி, நிறுவனங்களுக்கான சரக்கு-சேவை வரி விலக்கு உச்சவரம்பை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக மத்திய அரசு உயா்த்தியுள்ளது. நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. மாநில அரசுகள் விதித்து வந்த மறைமுக வரிகள் அனைத்தும் சரக்கு-சேவை வரிக்குள் இணைக்கப்பட்டன. இந்த உச்சவரம்பு முன்பு ரூ.20 லட்சமாக இருந்தது. மேலும், ரூ.1.5 கோடி வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் 1 சதவீத சரக்கு-சேவை வரியை மட்டும் செலுத்தும் நோக்கில் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
Post a Comment