காஷ்மீரின் உதம்பூரில் மிகப்பெரிய யோகா மையம்
- ஜம்மு காஷ்மீரில் உதம்பூரில் மிகப்பெரிய யோகா மையம் கட்டப்பட்டு வருவதாகவும் அது 2021 ல் முடிவடையும் என அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள மந்தலையில் மிகப்பெரிய யோகா மையம் அமைய உள்ளது. இது தேசிய கட்டுமான கழகத்தால் ( National Projects Construction Corporation (NPCC) ) கட்டப்பட்டு 2021 ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மையம் அமைப்பதற்காக ஆகும் செலவு ரூ. 9,782 லட்சம் என கூறப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில் தீரேந்திர பிரம்மச்சாரியின் யோகா மையமான அபர்ணாவிற்கு பிரபலமானது. அதன் பாழடைந்த கட்டிடம் இன்னும் அங்கே உள்ளது. முன்னாள் பிரதமர் இந்திராவின் யோகா ஆசிரியராக திரேந்திர பிரம்மச்சாரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மச்சாரியின் மரணத்திற்குப் பிறகு, இது முந்தைய ஜம்மு-காஷ்மீர் அரசால் கையகப்படுத்தப்பட்டது.
சீன எல்லையில் படைகளை குறைக்க போவதில்லை:இந்தியா திட்டவட்டம்
- சீன எல்லைப்பகுதியில் படைகளை குறைக்க போவதில்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் சீனாவின் மக்கள் படை எனப்படும் சீனாவின் ராணுவம் காஷ்மீரின் லடாக் பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் ஊடுருவியது. இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தொடர்ந்து இரு நாடுகளிடையே ஏற்பட்ட உடன்பாட்டில் எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.
- இதனிடையே 22.08.2020 அன்று மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல், தலைமை பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்எம் நரவானே, கப்பல் படை தளபதி அட்மிரல் கரம்பிர்சிங் விமானபடை தளபதி ஆர்.கே.எஸ். பகதூரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இந்நிலையில் இந்தியா மீதான கண்காணிப்பை சீனா அதிகப்படுத்தி உள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டம் பராஹோட்டிக்கு அருகில் துன்ஜூன்லா பகுதியை ஒட்டி சீன எல்லை அமைந்துள்ளது. சீன தனது எல்லைப்பகுதியில் 180 டிகிரி வரை சுழலும் இரண்டு அதிசக்தி வாய்ந்த கேமராக்களை நிறுவி உள்ளது. மேலும் சோலாா் பேனல், காற்றாலை ஒன்றையும் கட்டி உள்ளது. இதன் காரணமாக இந்திய படைகள் எல்லைப்பகுதியில் இருந்து வாபஸ் பெற போவதில்லை என்பதில் இந்தியா திட்டவட்டமாக உள்ளது.
‛லீடர் ஷிப்' விருது-2020க்கு ஆனந்த் மகிந்திரா, ஷாந்தனு நாராயண் தேர்வு
- மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா, 'அடோப்' நிறுவன தலைவர் ஷாந்தனு நாராயண் ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான 'லீடர்ஷிப்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வர்த்தக ரீதியாக சிறப்பாக பங்காற்றும் அமெரிக்க மற்றும் இந்தியபெரு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த யு.எஸ்.ஐ.எஸ்.பி.எப். எனப்படும் அமெரிக்க - இந்தியதிட்டம் மற்றும் கூட்டுறவு கூட்டமைப்பு ஆண்டுதோறும் லீடர் ஷிப் விருதுகளை வழங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆகஸ்டு 31ம் தேதி முதல் செப். 3ம் தேதி வரை 'அமெரிக்க - இந்திய வாரம்; புதிய சவால்களை எதிர்கொள்ளுதல்' என்ற தலைப்பில் நடத்தப்பட உள்ள யு.எஸ்.ஐ.எஸ்.பி.எப். அமைப்பின் ஆண்டு மாநாட்டில் இருவருக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
2023-க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய்: அருணாசலப்பிரதேசம்
- 2024-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிவித்தார். அதன்படி நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் அருணாசலப்பிரதேசத்தில் 2023-ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் குழாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மூலம் மாநிலத்திற்கு சுத்தமான போதிய அளவு நீர் கிடைப்பதற்கான வாய்ப்பாக உள்ளது என்று மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் நடைபெற்று வந்த உள்நாட்டு போர் நிறுத்தம் - அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் தரப்பு அறிவிப்பு
- லிபியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போரை உடனடியாக நிறுத்துவதாக அரசு படையினர் தெரிவித்தனர். கிளர்ச்சியாளர்களும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர். 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போரை உடனடியாக நிறுத்துவதாக ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட திரிபோலியை தலைநகராக கொண்ட லிபிய அரசு தலைமை 22.08.2020 அன்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்த உடன் கடாபியின் ஆதரவு கிளர்சியாளர் கலிபா கப்தார் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் குழுவும் தாங்களும் லிபியாவில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிப்பதாக தெரிவித்தது.
‘பிட் இந்தியா’ சுதந்திர ஓட்டம் - பிரதமர் நரேந்திர மோடி
- நாடு முழுவதும் கடந்த 15-ந்தேதி 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி ‘பிட் இந்தியா’ சுதந்திர ஓட்டம் என்ற இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். இந்த இயக்கத்தில் கலந்துகொள்பவர்கள், உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கும், எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் அவர்கள் இருக்கும் பகுதியிலேயே, எந்த நேரத்திலும் சுதந்திரமாக ஓடுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அவசர பயன்பாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா அனுமதி
- உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அந்த வகையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவிலும் பல்வேறு நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து உள்ளன. இதில் கடந்த மாதம் 22-ந் தேதி அவசர பயன்பாட்டுக்கான தடுப்பூசி பரிசோதனையை சீனா தொடங்கியது.
- உள்ளூர் நிறுவனங்கள் தயாரித்த இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களுக்கு லேசான பக்க விளைவுகள் இருந்தன. எனினும் காய்ச்சல் போன்ற குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் எதுவும் காணப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவசர பயன்பாடுகளுக்கு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்திக்கொள்ள சீனா அனுமதி அளித்து உள்ளது. குறைவான காலகட்டத்தில் தொற்றுக்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பவர்களுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக சீனாவின் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
சீனா புதிய செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது
- சீனா புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கை கோளை 23.08.2020 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜியுவான் செயற்கை கோள் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 10.27 மணிக்கு சீனா செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ‘காபென்9 05’ என்ற அந்த செயற்கை கோள் ‘மார்ச்2 டி கேரியர்’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்கை கோள் நில அளவீடுகள், நகர திட்டமிடல், சாலைகள் வடிவமைப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு, பேரழிவு தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்கு இந்த செயற்கை கோள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலிஸ், லிசா, ஜாகீர் அப்பாஸ் - ‘ஹால் ஆப் பேம்’ என்ற பட்டியலில் சேர்த்து ஐ.சி.சி. கவுரவம்
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களை ‘ஹால் ஆப் பேம்’ என்ற பட்டியலில் சேர்த்து கவுரவித்து வருகிறது. இந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் பேட்ஸ்மேன் ஜாகீர் அப்பாஸ், தென்ஆப்பிரிக்க முன்னாள் ஆல்-ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ், ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் லிசா ஸ்தலேகர் ஆகியோர் இந்த பட்டியலில் நேற்று புதிதாக சேர்க்கப்பட்டனர். இந்தியாவை பூர்விகமாக கொண்ட 41 வயதான லிசா ஸ்தலேகர் 2005 மற்றும் 2013-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்தவர் ஆவார்.
கூடுதல் தகவல்:
- 2009-ம் ஆண்டு அறிமுகம் ஆன ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இதுவரை 6 இந்தியர்கள் உள்பட 93 வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் கடந்த பிறகு தகுதியானவர்களுக்கு இந்த கவுரவம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் கேம்ரூன் ஒயிட் ஓய்வு
- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் கேம்ரூன் ஒயிட் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்டுகள், 91 ஒருநாள், 47 டி20 ஆட்டங்களில் ஒயிட் விளையாடியுள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் 2 சதங்களும் 11 அரை சதங்களும் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காகக் கடைசியாக 2018-ல் விளையாடினார். 2002-ல் ஆஸ்திரேலிய அணி யு-19 உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியின் கேப்டனாக இருந்தார்.
Post a Comment