நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதார அடையாள அட்டை
- டெல்லியில் நடைபெற்ற 74-ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, 3 வகையான கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் இருப்பதாக கூறியதோடு, நாட்டு மக்கள் அனைவருக்கும் தனி சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
- ‘தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்’ என்ற புதிய திட்டம் 15.08.2020 அன்று தொடங்கப்படுகிறது. தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும்.
- அதில் அவர்களுக்கு இருக்கும் நோய், நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள், பரிசோதனை அறிக்கைகள், கொடுப்பட்ட மருந்துகள் உள்ளிட்ட தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும். தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் கீழ் மக்களின் சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.
- கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது குடிநீர் வழங்கும் ஜலஜீவன் திட்டத்தை அறிவித்தேன். அந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 1 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது என்றும் அறிவித்தார்.
'ஸ்மார்ட் சிட்டி' திட்ட செயல்பாட்டில் இந்திய அளவில் கோவை ஐந்தாமிடம்
- ''ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், தமிழக அளவில் கோவை மாநகராட்சி முதலிடத்திலும், அகில இந்திய அளவில் ஐந்தாமிடத்திலும் இருக்கிறது,'' என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் கூறினார்.
74-ஆவது சுதந்திர தின நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உரையாற்றியதில் முக்கியமானவை
- மாநில அரசின் நிதி ஆதாரத்தை கொண்டு கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ரூ.6,650 கோடி செலவிடப்பட்டுள்ளது.
- குறுகிய காலத்தில் 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, அவை அனைத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
- அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் மருத்துவர் ஆகும் வகையில் அவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடாக 7.5 சதவீதம் வழங்க தமிழக அரசு முடிவு செய்து, அதையே வரலாற்று சிறப்புமிக்க சட்டமாக பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- கடந்த 8 ஆண்டுகளில், 6 முறை உணவு தானிய உற்பத்தியில் 100 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டி அரசு சாதனை படைத்துள்ளது. டெல்டா பகுதியிலுள்ள 4 லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் தற்போது குறுவை நெல் பயிர் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளனர்.
- இந்தியாவின் கடல் மீன் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
- பள்ளிகளில் வசதிகளை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் 49 சதவீதத்தை எட்டி, தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
- சமீபத்தில் தேசிய தர நிர்ணயக் கட்டமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், உயர் கல்வி தரவரிசைப் பட்டியலில், அகில இந்திய அளவில் உள்ள முதல் 100 பல்கலைக்கழகங்களில், தமிழ்நாட்டைச் சார்ந்த 18 பல்கலைக்கழகங்களும், முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டை சார்ந்த 18 பொறியியல் கல்லூரிகளும், முதல் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 32 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இடம் பெற்று சாதனை படைத்துள்ளன.
- கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
- தமிழ்நாடு புதிய முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
- குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய ரூ.7,043 கோடி கடன் ஒப்புதல் வழங்கப்பட்டு, தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது.
- சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும். சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.8,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இந்தியா
- உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. 18.08 லட்சம் பேர் தொற்றில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்பினர். உலகளவில் பார்த்தால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொரோனாவில் இருந்து வீடு திரும்பியோரின் பட்டியலில் பிரேசில்தான் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 32.26 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளான நிலையில், கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26.16 லட்சமாக உள்ளது.
- பிரேசிலை தொடர்ந்து இந்தியா இதில் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி, தொற்றுக்கு 25.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 18 லட்சத்து 8 ஆயிரத்து 936 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பட்டியலில் உலக அளவில் அமெரிக்கா 3-ம் இடத்தில் உள்ளது.
- உலகளவில் கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவையும், பிரேசிலையும் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பட்டியலில் இந்திய மாநிலங்கள்
- கொரோனாவில் இருந்து குணம் அடைவதில் தேசிய சராசரியை விஞ்சிக்காட்டி தமிழகம் உள்ளிட்ட 30 மாநிலங்கள் சாதனை படைத்துள்ளன. இந்த மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு இருக்கிறார்கள்.
- முதல் இடம் வகிக்கிற டெல்லியில் மீட்பு விகிதம் 89.87 சதவீதம், இரண்டாம் இடத்தில் இருக்கிற தமிழகத்தில் மீட்பு விகிதம் 81.62 சதவீதம் ஆகும். குஜராத் 77.53 சதவீதத்துடன் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இறப்புவிகிதம் 1.94 சதவீதமாக குறைந்து இருப்பது கவனத்தை கவர்வதாக அமைந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு
- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். 2014-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி இப்போது சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கும் முழுக்கு போட்டுள்ளார். ஆனாலும் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாட திட்டமிட்டு உள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 39 வயதான டோனி 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். அப்போது இந்திய அணிக்கு பேட்டிங்குடன் கூடிய விக்கெட் கீப்பர் தேவையாக இருந்தது.
தோனியின் சாதனைகள்
- மூன்று கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் - இந்திய அணி 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும், 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்றது
- இலங்கைக்கு எதிரான 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 91 ரன்கள் திரட்டி ஆட்டநாயகனாக ஜொலித்தது
- டோனி இதுவரை இந்திய அணிக்காக 90 டெஸ்டுகளில் விளையாடி 6 சதம் உள்பட 4,876 ரன்களும், 350 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 10 சதம், 73 அரைசதம் உள்பட 10,773 ரன்களும் (சராசரி 50.57) குவித்துள்ளார். இதில் 229 சிக்சரும் அடங்கும். 2005-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் விளாசியது ஒரு நாள் போட்டியில் அவரது அதிகபட்சமாகும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 98 ஆட்டங்களில் விளையாடி 2 அரைசதம் உள்பட 1,617 ரன்கள் எடுத்துள்ளார்.
சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு
- சுதந்திர தினமான நேற்றைய தினம் இரவு 7.29 மணிக்கு டோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே இந்திய அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- 33 வயதான சுரேஷ் ரெய்னா உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். 2005-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆடினார். 226 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 5 சதம் உள்பட 5,615 ரன்கள் சேர்த்துள்ளார். 18 டெஸ்ட் மற்றும் 78 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனைக்குரியவர் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டை விட்டு விலகினாலும், ஐ.பி.எல்.-ல் தொடர்ந்து விளையாடுவார்.
ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்கக்கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது
- மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா. ஆயுத தடையை விதித்தது. இதன் மூலம் ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் ஈரான் மீதான ஆயுத தடை 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காலாவதியாகும் என ஐ.நா. உத்தரவாதம் அளித்தது.
- இதனிடையே இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது. இந்த நிலையில் ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடை வருகிற அக்டோபரில் காலாவதியாகும் நிலையில் அந்த தடையை காலவரையின்றி நீட்டிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. இது தொடர்பாக 15 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்படும் ஒரு தீர்மானம் நிறைவேற வேண்டுமானால் 15 உறுப்பு நாடுகளில் 9 நாடுகள் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
- அமெரிக்கா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகிய இரு நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகள் வாக்களிக்கவில்லை. போதிய ஆதரவு இல்லாததால் அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது.
ரஷ்ய தடுப்பூசியின் முதல் கட்ட உற்பத்தி துவங்கியது
- ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் 5 என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் கட்ட தொழிற்சாலை உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் காமாலேயா ஆராய்ச்சி நிறுவனமும், பாதுகாப்பு அமைச்சகமும் இணைந்து அந்நாட்டின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரித்துள்ளன. இதனை ஆகஸ்ட் 11-ம் தேதி அந்நாட்டு அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஸ்புட்னிக் 5 என பெயரிட்டார்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 25 அடி உயர பாரத மாதா வெண்கல சிலை திறப்பு
- நாட்டின் 74வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மத்திய பிரதேச தலைநகர் போபாலில் மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் 25 அடி உயரம் கொண்ட பாரத மாதா வெண்கல சிலையை திறந்து வைத்தார். போபாலில் உள்ள போர்வீரர்கள் நினைவிடமான சவுர்யாவில் தாமரை மலர் மீது கையில் தேசிய கொடியுடன் நிற்பது போன்று பாரதமாதா சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் பீடத்தில் அசோக சக்கரம், தேசிய கீதம், தேசிய முழக்கம் போன்றவை இடம் பெற்றுள்ளன.
Post a Comment