தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு
2022ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது
2021ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது
2022ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கு மு. மீனாட்சி சுந்தரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது குமரி அனந்தனுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 2022ஆம் ஆண்டிற்கான “அய்யன் திருவள்ளுவர் விருது” பெங்களுரில் வாழ்ந்துவரும் மு.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும், 2021ஆம் ஆண்டிற்கான “பெருந்தலைவர் காமராசர் விருது’ சொல்லின் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கும் வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் முதலான திருக்குறள் தொடர்பான தொண்டுபுரிந்துவருபவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், பெங்களுர் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவரும், 2009ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் பெங்களுரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராகவும் கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவி, திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக இருந்து பணியாற்றியவரும் பெங்களுர் இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் முதுநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் பெங்களுரில் வசிக்கும் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மு. மீனாட்சி சுந்தரம் (வயது 78) அவர்களுக்கு தமிழ்நாடு அரசு, 2022 ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஒரு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள். இவ்விருதுகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படவுள்ளது.
Courtesy: Dinamani
Post a Comment