TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 23.05.2018. TNPSC தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...
இன்றைய நடப்பு நிகழ்வுகளின் முக்கிய தலைப்புகள் Date: 23.05.2018
ஸ்டெர்லைட் - (துப்பாக்கிச் சூடு) நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைவராகக் கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய மதுரைக் கிளை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்குத் தடை விதிக்கக் கோரி பேராசிரியை பாத்திமா தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாட்டின் 19 % கொய்மலர் உற்பத்தி தமிழகத்தில் நடைபெறுகிறது
நாட்டின் 19 சதவீத கொய்மலர் உற்பத்தி தமிழகத்திலிருந்து நடைபெறுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டார். கொய்மலர் சாகுபடிக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் தளி பகுதியில் கொய்மலர் சாகுபடி-ஆராய்ச்சி மையம் ரூ. 8.8 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இம் மையத்தின் மூலம் கொய்மலர் சாகுபடியில் மேலும் புதிய உத்திகளைக் கையாளவும், போதிய அளவில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.321 கோடி
கடந்த 2016-17 நிதியாண்டில் 32 மாநிலக் கட்சிகளுக்கு கிடைக்கப் பெற்ற மொத்த வருவாய் ரூ.321 கோடியாக உள்ளது. இதில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜவாதி கட்சி ரூ.82.76 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை ஆளும் அதிமுக, ரூ.48.88 கோடியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. வரவைக் காட்டிலும் கூடுதலாக செலவழித்த கட்சிகளின் பட்டியலில் அதிமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.
எடியூரப்பா, ஸ்ரீராமுலுவின் ராஜிநாமாவை ஏற்றார் மக்களவைத் தலைவர்
எம்.பி. பதவியிலிருந்து பாஜக மூத்த தலைவர்கள் எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோர் ராஜிநாமா செய்ததை, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டார். ஷிமோகா மக்களவை தொகுதி எம்.பி.யாக எடியூரப்பாவும், பெல்லாரி தொகுதி எம்.பி.யாக ஸ்ரீராமுலுவும் இருந்தனர்.
பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக 2ஆவது நாளாக சோதனை
- பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை தொடர்ந்து 2ஆவது நாளாக ஒடிஸா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமையும் (22.05.2018) வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. முன்னதாக, ஒடிஸாவின் பாலசோர் மாவட்டத்தில் பிரமோஸ் ஏவுகணை திங்கள்கிழமையும் சோதித்து பார்க்கப்பட்டது.
- அதையடுத்து 2ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தப்பட்டுள்ளது. மொபைல் லாஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, தனது இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது. பிரமோஸ் ஏவுகணையானது
- இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), ரஷியாவின் என்பிஒஎம் அமைப்பு ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்டது.
கியூபா விமான விபத்து: பலி எண்ணிக்கை 111-ஆக உயர்வு
கியூபா தலைநகர் ஹவானா விமான நிலையத்திலிருந்து ஹோல்கைன் நகருக்கு அந்த நாட்டு அரசுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 107 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது. விமானம் உயரே எழும்பிய சில நிமிடங்களில், விமான நிலையத்துக்கு அருகே உள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 110 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் 3 பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விமானத்திலிருந்து படுகாயத்துடன் மீட்கப்பட்ட 3 பெண்களில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, அந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 111-ஆக உயர்ந்துள்ளது.
மலேசியாவின் முதல் சீக்கிய அமைச்சரானார் கோவிந்த் சிங் தேவ்
மலேசியாவின் முதல் சீக்கிய அமைச்சர் என்ற பெருமையை கோவிந்த் சிங் தேவ் (45) பெற்றுள்ளார். இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட இவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயகச் செயல் கட்சியைச் சேர்ந்த கோவிந்த் சிங் தேவுக்கு தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா துறை அமைச்சகத்தை மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது ஒதுக்கினார். அக்கட்சியைச் சேர்ந்த இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மற்றொரு எம்.பி.யான எம்.குலசேகரனுக்கு மனித வளத் துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது
உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து அணிக்கு ஹாரிகேன் கேப்டன்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஹாரிகேன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரஷியாவில் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை உலகக் கோப்பை போட்டிகள் நடக்கின்றன. இதில் மோதவுள்ள 32 நாடுகள் தங்கள் அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
Post a Comment