திருவனந்தபுரம் விமான நிலையம் தனியாருக்கு குத்தகை: எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்.
- திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகை விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில அரசு திருவனந்தபுரம் விமான நிலையத்தை ஏற்று நடத்த விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட மத்திய அரசின் முடிவுக்கு மாநில அரசு ஒத்துழைக்காது எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 24.08.2020 அன்று சட்டப்பேரவையில் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அறிவித்தார். அரசின் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏரியில் மூழ்கவிருந்த 6 பேரை மீட்டவருக்கு ஜீவன் ரக்க்ஷாவிருது வழங்கிய முதல்வர்
- தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 24.8.2020 அன்று தலைமைச் செயலகத்தில், ஏரியில் மூழ்கி உயிருக்குப் போராடிய 6 நபர்களை மீட்டதற்காக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். ஸ்ரீதருக்கு வீர, தீர செயலுக்கான 2019-ஆம் ஆண்டுக்கான “ஜீவன் ரக்க்ஷா” விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தார். இவர், 2019-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது, தமிழ்நாடு அரசின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-உஸ்பெகிஸ்தான் தலைவர்கள் ஆலோசனை
- இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளின் முதல் தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் 24.8.2020 அன்று இணையவழியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளீதரன் மற்றும் உஸ்பெகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமர் சர்தோர் உமுர்சகோவ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இஸ்ரேலில் 1100 ஆண்டுகள் பழமையான தங்கநாணயங்கள் கண்டுபிடிப்பு
- இஸ்ரேலில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நாணயங்கள் அடங்கிய களிமண் பானையை கண்டுபிடித்த உள்ளூர் இளைஞர்கள் அதனை தொல்பொருள் துறையிடம் ஒப்படைத்தனர். ஒன்பதாம் நூற்றாண்டின் அப்பாஸிட் கலிபா காலத்திற்கு முந்தைய 24 காரட் 425 தூய தங்க நாணயங்கள் அந்த நேரத்தில் கணிசமான தொகையாக இருந்திருக்கும் என்று தொல்பொருள் ஆணையத்தின் நாணய நிபுணர் ராபர்ட் கூல் தெரிவித்தார்.
அசாமில் திறக்கப்பட்ட இந்தியாவின் நீளமான ரோப்வே சேவை
- அசாம் மாநிலத்தில் குவஹாத்தியின் கச்சாரி காட்டில் இருந்து வடக்கு குவஹாத்தியில் உள்ள டவுல் கோவிந்தா கோயில் வரை இந்த ரோப்வே சேவை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மபுத்ரா நதியில் 1.8 கி.மீ நீளமுள்ள ரோப்வே, எட்டு நிமிட நேரத்தில் தனது பயண தூரத்தை அடையும் எனவும் தற்போது கரோனா தொற்று காரணமாக 15 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரோப்வே வலிமைமிக்க பிரம்மபுத்திராவின் அழகானக் காட்சியை வழங்கும். இது மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்தும்.” என அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டை விட 28% அதிகம்
- இந்த வருடம் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் துவங்கி பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இதுவரை சராசரியாக 252.2 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டை விட தென்மேற்கு பருவமழை 28% அதிகமாக பெய்துள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் நேற்று 23.08.2020 சராசரியாக 52.93 மி.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் 7 இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் செப்டம்பரில் முடியும்
- தமிழகத்தில் கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் மற்றும் ஈரோடு மாவட்டம் கொடுமணல், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை என 7 இடங்களில் அகழாய்வு நடக்கிறது. இவை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் இதற்கான அதிக ஊக்கத்தை அளித்துள்ளார். 7 இடங்களில் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வு வரும் செப்டம்பரில் நிறைவு பெறும்.
- தமிழகத்தில் இந்திய தொல்லியல் துறை 160 இடங்களிலும், தமிழக தொல்லியல் துறை 76 இடங்களிலும் அகழாய்வுகளை நடத்தியுள்ளது. இரண்டு கள ஆய்வுகள் தற்போது நடைபெறுகின்றன. தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் தொல்லியல் சார்ந்த இடங்களை கண்டறியும் பணி நடைபெறுகிறது. 7 விதமான தொழில் நுட்பங்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. அகழாய்வுகள் நடைபெறும் 7 இடங்களில் 3,599 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.
- கீழடி ஆய்வில், வாழ்விடங்கள், ஈமக்காடுகள், தொழில்கூடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக க, ய என்ற தமிழி(தமிழ்-பிராமி) எழுத்துகள் செவ்வண்ண பூச்சு பெற்ற மண்பாண்ட ஓடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், சூது பவளம், மணிகள் அதிகளவில் கிடைத்துள்ளன. இவை எங்கிருந்து வந்திருக்கும் என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது. சுடுமண்ணால் ஆன முத்திரை, எடை கற்கள், அலுமினியம் கலந்த செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
- அகரத்தில் நுண்கற்காலத்தை சேர்ந்த மெல் அலகு கத்திகள், வழவழப்பான கல் மழுக்கள், சிறிய கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் கூடிய தங்க நாணயங்கள், சீன மண்பாண்டத்தின் விளிம்பு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
- ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள், மேற்கூரை ஓடுகள், கிண்ணங்கள் உள்ளிட்டவை எடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் காசுகள், கல்பந்துகள், சுடுமணல் ஓடுகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.
- கற்களால் ஆன ஆயுதங்கள் கிடைத்து உள்ளதை பார்க்கும் போது, தமிழனின் வரலாறு 3 லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
- அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க டிரம்ப் அவசர ஒப்புதல் அளித்தார். உலக அளவில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு பல நாடுகள் பிளாஸ்மா சிகிச்சை முறையை பின்பற்றுகின்றன. இதில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் இருந்து பிளாஸ்மாவை தானமாக பெற்று, புதிய நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பின் உச்சமாக திகழும் அமெரிக்காவில் 58 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். எனவே அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறைக்கு 23.08.2020 அன்று அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சிகிச்சைக்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ.) ஒப்புதல் அளிக்க தாமதித்து வந்த நிலையில், டிரம்ப் நேரடியாக அவசர ஒப்புதல் அளித்து உள்ளார்.
காஷ்மீரில் உருவாகும் உலகின் உயரமான ரயில்வே மேம்பாலம்
- ஜம்மு காஷ்மீரில் அமையவுள்ள உலகின் உயரமான ரயில்வே மேம்பாலப் பணிகள் 2022 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரியாசி மாவட்டத்தில் உலகின் உயரமான ரயில்வே மேம்பாலம் அமைய உள்ளது. ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த மேம்பாலம் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கை ஜம்மு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இணைக்கும் வகையில் இந்தப் பாலம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாலம் கட்டிமுடிக்கப்பட்டால் கத்ராவிலிருந்து ஸ்ரீநகருக்கு 5 மணி நேரத்தில் சென்றடைய முடியும். சுமார் 1.3 கிமீ தூரம் அமைக்கப்படும் இந்தப் பாலம் ரிக்டர் அளவில் 7 க்கும் அதிகமான அளவிலான நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் உருவாக்கி வருகிறது.
1 மீ அளவில் உயர இருக்கும் கடல்நீர்மட்டம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
- கடந்த 30 ஆண்டுகளில் அதிகரிக்கும் கரியமில வாயுக்களின் உமிழ்வால் 28 லட்சம் கோடி பனிப்பாறைகள் உருகிவிட்டதாக இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டன் பல்கலைக்கழக கல்லூரி, லீட்ஸ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வில் அதிகரித்து வரும் வெப்பமயமாதலால் இந்த நூற்றாண்டிற்குள் கடல்மட்டம் 1 மீட்டர் அளவு உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ”ஒவ்வொரு சென்டிமீட்டர் கடல் மட்ட உயர்வும் 10 லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து இடம்பெயர காரணமாக அமையும்" என்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் துருவ கண்காணிப்பு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் ஆண்டி ஷெப்பர்ட் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இடையில் புவியின் வெப்பநிலை 0.2 செல்சியஸ் உயர்ந்து வருகிறது. இது அதிகரித்து வரும் பனிப்பாறைகள் இழப்பால் 0.3 செல்சியஸாக உயரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
Post a Comment