TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
ஐராவதம் மகாதேவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனுக்கு, அரிமா சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது புதன்கிழமை அளிக்கப்படுகிறது. கல்வெட்டியியல் ஆராய்ச்சிக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது ஐராவதம் மகாதேவனுக்கு வழங்கப்படுகிறது.
தொ.பரமசிவனுக்கு உலகத் தமிழ் பண்பாட்டு மைய தமிழறிஞர் விருது
பண்பாட்டு அறிஞர் பேராசிரியர் தொ. பரமசிவனுக்கு, கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பில் தமிழறிஞர் விருதும், ரூ.1 லட்சம் பொற்கிழியும் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பில், ஆண்டுதோறும் படைப்பாளிகள், தமிழறிஞர்கள், பிற துறைகளில் இருந்து தமிழுக்கு சேவை ஆற்றும் நபர்கள் என்ற அடிப்படையில் தலா மூவரை தேர்வு செய்து விருதுகளும், ரூ.1 லட்சம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த விருது தொடர்ந்து வழங்கப்படுகிறது. 2016ஆம் ஆண்டுக்கு இலக்கிய விருது எழுத்தாளர் சிவசங்கரி, சூழலியல் விருது தியோடர் பாஸ்கரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும், தமிழறிஞர் விருது பேராசிரியர் தொ. பரமசிவனுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக காவல் துறையில் பணியாற்றும் 22 பேருக்கு குடியரசு தலைவரின் பதக்கம்: மத்திய உள்துறை அறிவிப்பு
நிகழாண்டுக்கான குடியரசுத் தலைவரின் சீர்மிகு, சிறப்புப் பணிக்கான (மெச்சத்தக்க) பதக்கம் தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் 22 பேருக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் காவல்துறைகள், மத்திய காவல் படைகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் 777 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
பெயர் வெளியிடாத நபர்களால் கட்சிகளுக்கு ரூ.7,833 கோடி நன்கொடை
பெயர் வெளியிட விரும்பாத நபர்கள் மூலம் முக்கிய அரசியல் கட்சிகள், ரூ.7,833 கோடி நன்கொடை பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.3,323 கோடி நன்கொடை கிடைத்திருப்பதாகவும், அதற்கு அடுத்தபடியாக பாஜகவுக்கு ரூ.2,125 கோடி கிடைத்திருப்பதாகவும் தெரிகிறது. அதேபோன்று மாநில அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை சமாஜவாதி கட்சிக்கு அறியப்படாத நபர்கள் வாயிலாக ரூ.766 கோடி நன்கொடையாகக் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐஐஎம்களுக்கு பட்டமளிக்கும் அதிகாரம்: மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல்
மாணவர்களுக்கு பட்டமளிக்கும் அதிகாரத்தை இந்திய மேலாண்மைக் கழகங்களுக்கு (ஐஐஎம்) வழங்கும் வரைவு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஸ்மார்ட் ஃபோன்களுக்கு ரூ.1,000 மானியம்: மத்திய அரசுக்கு முதல்வர்கள் குழு பரிந்துரை
வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிநவீன செல்லிடப்பேசிகள் (ஸ்மார்ட் ஃபோன்) வாங்கும்போது மானியமாக ரூ.1,000 வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில முதல்வர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. மின்ணணு பரிவர்த்தனையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் ஆகியோர் அடங்கிய முதல்வர்கள் குழு, பிரதமர் மோடியிடம் செவ்வாய்க்கிழமை வழங்கியது.
கியோட்டோ உடன்படிக்கையை அமல்படுத்த இந்தியா முடிவு
புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கியோட்டோ சர்வதேச உடன்படிக்கையை அமல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான சர்வதேச முயற்சியில் இந்தியாவின் பங்களிப்பை மனதில் கொண்டு, கியோட்டோ உடன்படிக்கையை அமல்படுத்துவது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது. உலக நாடுகளின் மாசு வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உடன்படிக்கை ஜப்பானின் கியோட்டோ நகரில் கடந்த 1997-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையில், 2008-முதல் 2012-ஆம் ஆண்டுவரை உலக நாடுகள் மாசு வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. இந்த நிலையில், 2013 முதல் 2020-ஆம் ஆண்டு வரை மாசு வாயு வெளியேற்றத்துக்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் இரண்டாம் கட்ட கியோட்டோ உடன்படிக்கை கத்தார் தலைநகர் தோஹாவில் 2012-ஆம் ஆண்டு கையெழுத்தானது.இந்த உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டிருந்தாலும், வளரும் நாடுகள் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை எட்டுவது கட்டாயம் என்பதால் இந்தியா அதனை இதுவரை அமல்படுத்தாமல் இருந்துவந்தது.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மறு அளவீடு செய்ய முடிவு
இமயமலையில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மறுஅளவீடு செய்ய இந்திய நில அளவீட்டுத் துறையான "ஜியலாஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா' முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய நில அளவீட்டுத் துறை தலைவர் ஸ்வர்ண சுப்பா ராவ், ஹைதபாபாதில் கூறியதாவது: எவரெஸ்ட் சிகரத்தை மறு அளவீடு செய்ய ஒரு குழுவை அனுப்ப இருக்கிறோம். பல்வேறு தரப்பினர் எவரெஸ்ட் சிகரத்தின் அளவீடு செய்தாலும், "ஜியலாஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா' கூறிய 29,028 அடி உயரம் என்பதுதான் எவரெஸ்ட்டின் சரியான உயரமாகும். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எவரெஸ்ட்டின் உயரம் குறித்து பல்வேறு தரப்பினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தெளிவுபடுத்தவும், நிலத்தட்டுகளின் நகர்வு குறித்த அறிவியல் ஆய்வுக்கு உதவும் நோக்கத்துடனும் எவரெஸ்ட்டின் உயரம் மறு அளவீடு செய்யப்படுகிறது.
முதியோருக்கான புதிய ஓய்வூதிய காப்பீட்டுத் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான புதிய ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
தேசிய பெண் குழந்தை தினம் (ஜன.24)
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் என்று கூறி தேசிய பெண் குழந்தை தினத்துக்கு (ஜன.24) பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். பெண் குழந்தைகளின் அசாதாரண சாதனைகளை கொண்டாடுவதற்கு தேசிய பெண் குழந்தை தினம் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை: முடிவை ஒத்திவைத்தது மத்திய அமைச்சரவை
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து முடிவெடுக்காமல் மத்திய அமைச்சரவை ஒத்திவைத்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டுமானால், அவர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கும், அவர்கள் சார்பில் அவர்களின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகள் வாக்களிப்பதற்கும் வகைசெய்யும் விதத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆஸ்கர் விருதுக்கு இந்திய நடிகர் தேவ் படேல் பெயர் பரிந்துரை: 14 பிரிவுகளின் கீழ் "லா லா லேண்ட்' திரைப்படம் பரிந்துரை
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் திரைத்துறையினருக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.nஇதில், 14 பிரிவுகளின் கீழ் ஹாலிவுட் படமான "லா லா லேண்ட்' என்ற திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல், "லயன்' என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்த இந்திய நடிகரான தேவ் படேல் சிறந்த துணை நடிகருக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 2017-ஆம் ஆண்டுக்கான 89-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதையொட்டி, அந்த விருதுக்கான பரிந்துரைகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன.
"பிரெக்ஸிட்' குறித்து நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்: பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்த முடிவு தொடர்பாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நியூபர்கர் தீர்ப்பில் தெரிவித்ததாவது: ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் முடிவை அரசு தன்னிச்சையாக எடுக்க முடியாது. அது தொடர்பாக நடைபெற்ற பொது வாக்கெடுப்பு இறுதியானது அல்ல. நாடாளுமன்றத் தீர்மானம் மூலம்தான் வெளியேறும் முடிவுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் பெற இயலும். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து அதனை சட்டமாக இயற்ற வேண்டும். அதன் அடிப்படையிலேயே ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் நடவடிக்கையைத் தொடங்க இயலும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஏஐஎஃப்எஃப் விரைவில் "ஃபுட்பால் இந்தியா'
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎஃப்எஃப்) பெயர் விரைவில் "ஃபுட்பால் இந்தியா' என்று மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்திய மகளிர் லீக்' (ஐடபிள்யுஎல்) என்ற பெயரில் மகளிருக்கான கால்பந்து போட்டியை நடத்த அகில இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது. இந்தப் போட்டிகள் வரும் 28-ஆம் தேதி முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரையில் தில்லியில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா சாம்பியன்
இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தி ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2-ஆவது இன்னிங்ஸில் 203 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரெஸ்ட் ஆப் இந்தியா அணி வீரர் ரித்திமான் சாஹா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்
நன்றி: தினமணி நாளிதழ்
Courtesy: Dinamani
Post a Comment