TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
சென்னைத் துறைமுக நிதி ஆலோசகராக பி.எஸ்.வேமன்னா பொறுப்பேற்பு
சென்னைத் துறை முகத்தின் நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலராக சி.எஸ்.வேமன்னா (48) செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். எண்ணூர் காமராஜ் துறைமுகத்தில் தலைமை நிதி மேலாளராக கடந்த 6 ஆண்டுகளாகப் பணியாற்றியவர் வேமன்னா. இதற்கு முன்பு ஓஎன்ஜிசி, பிஎஸ்என்எல், ஐசிஎஃப் உள்ளிட்ட நிறுவனங்களில் நிதி அலுவலராகப் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், சென்னைத் துறைமுக நிர்வாக முக்கியப் பொறுப்புகளில் ஒன்றான நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலராக பி.எஸ்.வேமன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்னர் தலையும், செழியன் பெயரும் கொண்ட மேலும் ஒரு கொற்கை பாண்டியர் நாணயம்: இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்தார்
மன்னர் தலையும், செழியன் பெயரும் கொண்ட மேலும் ஒரு கொற்கை பாண்டியர் நாணயத்தை தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் தலைவரும், தினமலர் நாளிதழ் ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொன்மையான தமிழக நாணயங்களைச் சேகரிக்கும் நண்பர் ஒருவர் அண்மையில் ஒரு சிறிய வடிவிலான செம்பு நாணயத்தைக் கொடுத்தார். அதை சுத்தம் செய்தபோது நாணயத்தின் முன்புறத்தில், இடதுபுறம் நோக்கி, மன்னரின் தலை அச்சாகி இருந்ததை பார்த்தேன். மன்னரின் முகத்திற்கு எதிரே, நாணயத்தின் இடதுபக்க விளிம்பின் அருகே, கீழிருந்து மேல்நோக்கி, தமிழ் பிராமி எழுத்து முறையில், நான்கு எழுத்துக்கள் உள்ளன.
கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்ப்பு:
மத்திய அரசு ஊழியர்களுக்கான கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கமான 14 விடுமுறை தினங்களுடன் மூன்று பண்டிகைகள் தினத்தன்று அவற்றை கட்டாய விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து வரையறுக்கப்பட்ட விடுமுறைப் பட்டியலுக்கு மத்திய அரசு மாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு, அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஆர்ப்பாட்டங்களுக்கும் அழைப்பு விடுத்தன. கட்டாய விடுமுறை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் பிரச்னையுடன், இந்த விடுமுறை விவகாரமும் சேர்ந்துள்ள கொண்ட நிலையில் மத்திய அரசு திடீரென விடுமுறைப் பட்டியலை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும்: பன்னீர்செல்வம் அறிவிப்பு
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு விவரங்கள்:
- தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படும்.
- விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படும்.
- இதற்கான அன்னவாரி சான்றிதழ் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
- பயிர்க்கடன்களை மத்தியகால கடன்கனாக மாற்றி அமைக்க வழிவகை செய்யப்படும்.
- வறட்சி நிவாரணக் கோரிக்கை மனு மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்படும்.
- 3 சதவீதத்திற்கு அதிகமாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்படும்.
- நெல்பயிர் ஏக்கருக்கு ரூ.5,465, மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,000 வழங்கப்படும்.
- வறட்சியில் இருந்து மக்களை காக்க மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும்.
- கிராமப்புற வேலை உறுதித்திட்ட நாள்கள் 150 ஆக உயர்த்தப்படும்.
- தற்கொலை செய்துகொண்ட 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
குஜராத் முதலீட்டாளர் மாநாடு
குஜராத்தில் நடைபெற்றுவரும் 8-ஆவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். குஜராத் மாநிலம், காந்திநகரில் 8-ஆவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். "வைப்ரண்ட் குஜராத்' என்ற பெயரிலான இந்த மாநாட்டை தொடங்கி வைப்பதற்கு முன்பு பல்வேறு நாடுகளின் தலைவர்களையும், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வணிக இதழான "ஃபார்ச்சூன்' வெளியிட்ட சிறந்த 500 நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளில் பலரையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் அதிபர் பால் ககாமே, செர்பியா பிரதமர் அலெக்சாண்டர் உசிக், ஜப்பான் பொருளாதார அமைச்சர் சிகோ ஹிரோசிகே உள்ளிட்டோரையும் மோடி சந்தித்துப் பேசினார்.
இந்தியப் பெருங்கடல் வெப்பமடைந்து வருவதே இந்தியாவில் நிலத்தடி நீர் குறைய காரணம்: ஐஐடி ஆய்வில் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர் குறைவதற்கு, இந்தியப் பெருங்கடல் வெப்பமடைந்து வருவதே முக்கிய காரணம் என்று, குஜராத் மாநிலம், காந்திநகர் ஐஐடி ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் விமல் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்தியாவைப் பொருத்தவரை, விவசாயம் பெருமளவில் நிலத்தடி நீரை நம்பியே உள்ளது. அதிலும் குறிப்பாக, வறட்சியான வட மாநிலப் பகுதிகள் நிலத்தடி நீரை சார்ந்தே உள்ளன. கடந்த 1950-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டில் எடுக்கப்படும் நிலத்தடி நீரின் அளவு 10 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் அதிலும் குறிப்பாக வட மாநிலப் பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவு வெகுவாக குறைந்திருப்பது, செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா: 4 இந்திய வம்சாவளி விஞ்ஞானிகளுக்கு அதிபர் விருது
அமெரிக்காவைச் சேர்ந்த 4 இந்திய வம்சாவளியினர், இளம் விஞ்ஞானிகளுக்கான அதிபர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் வகையில் "ஆரம்ப நிலை விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கான அதிபர் விருது' கடந்த 1996 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டுக்கான இந்த விருதுக்கு 102 விஞ்ஞானிகளை அதிபர் ஒபாமா தேர்வு செய்துள்ளார். அவர்களில், மான்ட்க்ளேர் மாகாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்
பங்கஜ் லால், வடகிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கெளசிக் சவுத்ரி, இகான் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மணீஷ் அரோரா, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராதனா திரிபாதி ஆகிய இந்திய வம்சாவளி விஞ்ஞானிகளும் அடங்குவர். அமெரிக்காவில், அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுத் துறையில் வழங்கப்படும் மிகப் பெரிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
'ஃபிஃபா சிறந்த வீரர்' விருது வென்றார் ரொனால்டோ
சர்வதேச கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் (ஃபிஃபா) "2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர்' விருதை போர்ச்சுகல் நாட்டு கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார். "2016-ஆம் ஆண்டானது, எனது கால்பந்து வாழ்க்கையின் மிகச் சிறந்த ஆண்டு' என்று விருதை வென்ற ரொனால்டோ குறிப்பிட்டார். இந்த விருதுக்காக, ரொனால்டோவுக்கு ஆதரவாக 34.5 சதவீதம் பேரும், ஆர்ஜென்டீனா வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு ஆதரவாக 26.4 பேரும் வாக்களித்துள்ளனர். தேசிய கால்பந்து அணிகளின் பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களைக் கொண்டு இந்த விருதுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.