TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
தமிழகத்தில் அரசு வேலைக்கு பதிவு செய்தோர் 81.3 லட்சம்
தமிழகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 81.3 லட்சமாகும். தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை விவரங்களை தமிழக அரசு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, 81,33,734 பேர் வேலைக்காகப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 41,98,252 பேர் பெண்கள். இவர்களில் பொறியியல் பட்டதாரிகள் 2.46 லட்சம் பேரும். கலை படிப்பு படித்தோர் 4.43 லட்சம் பேரும், கலை-அறிவியல் படிப்பு படித்தோரின் 5.97 லட்சம் பேருமாக உள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 33,30,337 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோர் 21,88,077 பேரும் உள்ளனர்.
இன்று குடியரசு தின விழா: முதல் முறையாக தமிழக முதல்வர் கொடியேற்ற உள்ளார்
நாட்டின் 68-ஆவது குடியரசு தின விழா தமிழக அரசு சார்பில் சென்னை கடற்கரை சாலையில் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, வீரதீரச் செயல்களுக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அளிக்கவுள்ளார். குடியரசு தினத்தின்போது, ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு குடியரசு தினத்தின் போது, முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றவுள்ளார். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும், மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராகவும் உள்ள வித்யாசாகர் ராவ், அந்த மாநிலத்தில் கொடியேற்றவுள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி அதிகாரிகள் 10 பேருக்கு தேசிய விருதுகள்
கடந்த ஆண்டு தேர்தல் பணிகளில் சிறப்பாகப் பரிணமித்த மாநிலங்கள் பிரிவில் தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றில் பணியாற்றி வரும் 10 அதிகாரிகளுக்கு தேசிய விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
- சிறப்பாகத் தேர்தல் பணியாற்றிய மாநிலங்கள் வரிசையில், தேர்தல் மேலாண்மையில் முதன்மையாக விளங்கிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி,
- வாக்காளர் கல்வி, வாக்காளர்கள் பங்களிப்பில் சிறந்து விளங்கிய புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி வி.கந்தவேலு;
- சிறந்த தேர்தல் நடைமுறைகள் பிரிவின்கீழ் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி கே.வீரராகவா (வாக்காளர் கல்வி, தேர்தல் பங்களிப்பு);
- திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி கே.எஸ்.பழனிசாமி (சிறந்த வாக்காளர் பதிவு மேலாண்மை);
- காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.கவாஸ்,
- திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சரவணன் (சிறந்த பாதுகாப்பு மேலாண்மை);
- வருமான வரித்துறை முதன்மை இயக்குநர் பி.ஆர்.பாலகிருஷ்ணன்,
- கூடுதல் இயக்குநர் ராய் ரோஸ் (தேர்தல் செலவின கண்காணிப்பு);
- புதுச்சேரியில் உள்ள தேசிய தகவல் மையத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் கோபி சுவாமிநாதன் (தகவல் தொழில்நுட்ப முயற்சி);
- தேசிய ஊடக விருது பிரிவின்கீழ், வாக்காளர் கல்வி மற்றும் விழிப்புணர்வில் சிறப்பாக செய்திகளை வழங்கியதற்காக தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பப்படும் "தந்தி டிவி'க்குரிய விருது அதன் மேலாண் இயக்குநர் பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்டது.
ஜேசுதாஸ், ஜக்கி வாசுதேவ், சோ, பவாருக்கு பத்ம விருதுகள், கோலி, மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது
பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், மறைந்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி, சத்குரு ஜக்கி வாசுதேவ், தமிழக தடகள வீரர் மாரியப்பன், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா - ஐக்கிய அரபு அமீரக நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்டவை தொடர்பாக 14 முக்கிய ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையெழுத்தாகின. அபுதாபி நாட்டு இளவரசர் ஷேக் முகமது பின் சையது, அரசு முறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தார். தில்லியில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்.
இந்தியாவின் ஆதரவு, நேபாளத்தின் உள்விவகாரத்தில் தலையிடுவதாக ஆகாது
நேபாளத்துக்கான இந்தியாவின் ஆதரவு, அதன் உள்விவகாரத்தில் தலையிடுவதாக அர்த்தமாகாது என்று அந்த நாட்டுக்கான இந்தியத் தூதர் ரஞ்சித் ரே தெரிவித்தார்.
இந்திய - சீன எல்லை ராணுவ வீரர்கள் சந்திப்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக் பிராந்தியத்தில் உள்ள சுசுல் பகுதியில், இந்திய - சீன எல்லைப் பகுதியில் பணியாற்றும் இரு நாட்டு ராணுவ வீரர்களின் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.
சராசரி நபர் வருமானம் கடந்த 60 ஆண்டுகளில் 10மடங்கு அதிகரித்துள்ளது
68-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி இன்று உரையாற்றினார். அப்போது அவர் சராசரி நபர் வருமானம் கடந்த 60 ஆண்டுகளில் 10மடங்கு அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் எற்றுமதியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்று கூறினார். மேலும் சுதந்திரம் அடைந்த பிறகு நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை பட்டியலிட்டு பேசினார். இந்தியா அறிவியல் தொழில்நுட்ப வளம், அணுசக்தி துறையில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2014 தேர்தலில் 83.4 கோடி வாக்காளர்களின் 66 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார் அபுதாபி இளவரசர்
நடைபெறவுள்ள குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளில் அபுதாபி இளவரசர் முகமது பின் சயது அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இதற்காக இந்தியா வந்துள்ள அவரை தில்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திரமோடி நேரில் சென்று வரவேற்றார்.
36 பேருக்கு ஜீவன் ரக்சா பதக்கங்கள் அறிவிப்பு
வீரதீர செயல்களில் ஈடுபட்டு மனித உயிர்களை காப்பாற்றுவோரை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஜீவன் ரக்சா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்காக மொத்தம் 36 பேருக்கு ஜீவன் ரக்சா பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இந்த பதக்கங்கள் வழங்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்திருப்பதாக உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வோத்தம் ஜீவக் ரக்சா பதக்கம், உத்தம் ஜீவக் ரக்சா பதக்கம், ஜீவன் ரக்சா பதக்கம் என மூன்று பிரிவுகளில் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து தலா 5 பேர் இந்த பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
ஐ.நா.வுக்கான தூதராக இந்திய - அமெரிக்கர் நிக்கி ஹேலி நியமனம்: அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி நியமிக்கப்படுவதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. ஐ.நா.வுக்கான அடுத்த அமெரிக்கத் தூதர் பதவிக்கு, தெற்கு கரோலிணா மாகாண ஆளுநரான நிக்கி ஹேலியை (45) நியமிக்கவிருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், அந்த நாட்டின் கேபினட் அந்தஸ்து கொண்ட ஒரு பதவிக்கு நியமிக்கப்படும் முதல் இந்திய-அமெரிக்கர் என்ற சாதனையை நிக்கி ஹேலி படைத்துள்ளார். ஏற்கெனவே, தெற்கு கரோலினாவின் ஆளுநராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஒரு அமெரிக்க மாகாணத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். லூசியானா மாகாணத்தின் ஆளுநர் பாபி ஜிண்டாலுக்கு அடுத்தபடியாக, நிக்கி ஹேலிதான் மாகாண ஆளுநராகப் பதவியேற்ற அமெரிக்க-இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய பெற்றோருக்குப் பிறந்தவர்
ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்படுமா? - நிதியமைச்சகம் பதில்
ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும் என்ற மாநில முதலைமைச்சர்களின் குழு பரிந்துரை தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் பொருட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் முதலமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் மோடியிடம் செவ்வாய்க்கிழமை அன்று அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும், கடன் அட்டை மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் வரிவிதிப்பு ரத்து, டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளுக்கு வரிச்சலுகை மற்றும் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.1000 மானியம் உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.
ஊக்கமருந்து விவகாரம்: உசேன் போல்டின் ஒலிம்பிக் பதக்கம் பறிப்பு
உலகின் அதிவேக மனிதரும், ஜமைக்கா ஓட்டப் பந்தய வீரருமான உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் வென்ற 9 தங்கப் பதக்கங்களில் ஒன்றை பறிகொடுத்துள்ளார். 2008, 2012, 2016 ஆகிய மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள போல்ட், அதில் 100 மீ., 200 மீ., 4*100 மீ. தொடர் ஓட்டங்களில் தங்கம் வென்றிருந்தார். ஒட்டு மொத்தமாக 9 தங்கப் பதக்கம் வென்றிருந்த போல்ட், இப்போது ஒரு தங்கப் பதக்கத்தை பறிகொடுத்ததன் மூலம் "டிரிப்பிள்-டிரிப்பிள்' (மூன்று ஒலிம்பிக்கிலும் தலா மூன்று தங்கம் வென்றவர்) என்ற அந்தஸ்தை இழந்துள்ளார். 2008-இல் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற போல்ட் அணியில் இடம்பெற்றிருந்த நெஸ்டா கார்ட்டர் ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமானதைத் தொடர்ந்து ஜமைக்கா அணியின் தங்கப் பதக்கத்தை பறித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி).
பத்மஸ்ரீ விருது: விளையாட்டு வீரர்கள் பட்டியல்
பல்வேறு துறைகளில் அளப்பரிய சாதனைப் படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் விளையாட்டு வீரர்களில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாராலிம்பிக் வீரர் மாரியப்பன், பாராலிம்பிக் வீராங்கனை தீபா மாலிக், ரியோ ஒலிம்பிக்கில் நான்காம் இடம் பிடித்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பார்வையற்றோர் அணியின் கேப்டன் சேகர் நாயக், ஹாக்கி கேப்டன் ஸ்ரீஜேஷ், வட்டு எறியும் வீரர் விகாஸ் கெளடா போன்றோர் பத்மஸ்ரீ விருதைப் பெறவுள்ளார்கள்.
தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்குப் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த டி.மாரியப்பன் (21), மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல், உயரம் தாண்டுதலில் 1.89 மீ தாண்டி தங்கம் வென்றார்.
Post a Comment