TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வியாழக்கிழமை (ஜன.12) வெளியாகவுள்ளது. அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா வரும் 17-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினம் என்பதால் வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
4 இடங்களில் 100 படுக்கை வசதி கொண்டஇஎஸ்ஐ மருத்துவமனை
தமிழகத்தில் 4 இடங்களில் 100 படுக்கை வசதிகளைக் கொண்ட இஎஸ்ஐசி (தொழிலாளர் மாநில ஆயுள் காப்பீட்டுக்கழகம்) மருத்துவமனைகள் கட்டப்படும் என மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
தேசிய வேலைவாய்ப்புத் திட்டத்தில் 3.75 கோடி பேர் பதிவு: மத்திய அமைச்சர் தகவல்
தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை அளிக்கும் தேசிய வேலைவாய்ப்பு சேவைத் திட்டத்தில் வேலைக்காக 3.75 கோடி பேர் பதிவு செய்துள்ளனர் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
சிப்காட் சரக்கு முனையம் உள்பட ரூ. 12 ஆயிரம் கோடியில் புதிய தொழில் திட்டங்கள்
காஞ்சிபுரம் சிப்காட் சரக்கு முனையம் உள்பட ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய தொழில் திட்டங்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை (ஜன. 12) தொடங்கி வைக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.60 கோடியில் சோலார் தகடுகள் தயாரிப்பு ஆலை, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் சரக்கு முனையம், மகேந்திரா நிறுவனத்தின் ஆட்டோமொபைல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு என பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
மிதியடிகளில் தேசியக் கொடி: அமேஸான் இணைய விற்பனை அங்காடிக்கு சுஷ்மா எச்சரிக்கை
வட அமெரிக்கா நாடான கனடாவில் இந்திய தேசியக் கொடி பதிக்கப்பட்ட மிதியடிகளை தனது இணையதளம் மூலம் விற்பனை செய்வதை உடனடியாக "அமேஸான்' நிறுவனம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எச்சரிக்கை விடுத்தார். இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் விற்பனை செய்யப்பட்டுவரும் அனைத்து பொருள்களையும் அமேஸான் திரும்பப் பெற வேண்டும். இனி, அதுபோன்ற பொருள்களை அந்த நிறுவனம் விற்பனை செய்யக் கூடாது. அத்துடன், நிபந்தனையற்ற மன்னிப்பும் அந்த நிறுவனம் கேட்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் அந்த நிறுவன அதிகாரிகளுக்கு இந்தியா வர நுழைவு இசைவு (விசா) அளிக்கப்பட மாட்டாது. ஏற்கெனவே அந்த நிறுவன அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள நுழைவு இசைவு அனுமதியும் ரத்து செய்யப்படும் என்று சுஷ்மா ஸ்வராஜ் அந்தப் பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காற்று மாசு: இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் மரணம்: மாசு நகரங்களில் தில்லிக்கு முதலிடம்
காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், நாட்டிலேயே காற்று மாசு அதிகமாக உள்ள நகரம் தில்லி என்றும் கிரீன்பீஸ் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில் உள்ள 168 நகரங்களில் எந்தவொரு நகரமும், உலக சுகாதார அமைப்பால் (டபிள்யுஹெச்ஓ) வரையறுக்கப்பட்டுள்ள காற்றுத் தர மதிப்பளவுகளுக்கு இணங்கியதாக இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள முதல் 20 நகரங்களில், கடந்த 2015-ஆம் ஆண்டில் பிஎம்10 என்ற காற்று மாசு குறீயீட்டின் அளவானது 268/168 என்ற அளவில் இருந்துள்ளது. இந்தப் பட்டியலில் 268 என்ற குறீயிட்டு அளவுடன் தில்லி முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து 258 முதல் 200 என்ற குறீயிட்டு அளவுடன் காஜியாபாத், அலாகாபாத், பரேலி (உத்தரப் பிரதேசம்), ஃபரீதாபாத் (ஹரியாணா), ஜாரியா (ஜார்க்கண்ட்), அல்வார் (ராஜஸ்தான்), ராஞ்சி, குசுன்டா, பாஸ்டகோலா (ஜார்க்கண்ட்), கான்பூர் (உத்தரப் பிரதேசம்), பாட்னா (பிகார்) ஆகிய நகரங்கள் உள்ளன. இதில் 268 என்ற காற்று மாசு குறியீடானது, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்படும் தேசிய சுற்றுப்புற காற்றுத் தர மதிப்பீட்டு அளவை விட 4.5 மடங்கு அதிகமாகும். அதேவேளையில், உலக சுகாதார அமைப்பால் (டபிள்யுஹெச்ஓ) வரையறுக்கப்பட்ட அளவை விட 13 மடங்கு அதிகமாகும்.
புத்தக வடிவில் பிரதமர் மோடியின் "மனதின் குரல்' நிகழ்ச்சி உரை
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் அகில இந்திய வானொலியில் நிகழ்த்திய உரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி வரை "மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆற்றிய உரைகளை உத்தரப் பிரதேச மாநிலம், ஃபைசாபாத் நகரைச் சேர்ந்த ஆய்வு மாணவரான ராஜீவ் குப்தா (29) புத்தகமாகத் தொகுத்துள்ளார். தில்லியில் நடைபெற்றுவரும் உலக புத்தகக் கண்காட்சியில் இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மின்னணு விசாவில் இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
மின்னணு நுழைவு இசைவில் (இ-விசா) கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 1.62 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து மின்னணு முறையில் நுழைவு இசைவு பெற்று இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் இந்த வசதியைப் பயன்படுத்தி 1.62 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்தனர்.கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 1.03 லட்சமாக இருந்தது.
கடந்த டிசம்பரில் மின்னணு நுழைவு இசைவைப் பயன்படுத்தியதில் பிரிட்டன் (22.4%) முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவும் (16.4%), ரஷியாவும் (7.7%) உள்ளன. மின்னணு நுழைவு இசைவு வசதியை மொத்தம் 161 நாடுகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் மட்டும் இந்த வசதியைப் பயன்படுத்தி மொத்தம் 10 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2015-இல் 4.45 லட்சமாக இருந்தது.
பொலிவுறு நகரங்கள்: மேலும் 40 இடங்களைச் சேர்க்க மத்திய அரசு முடிவு
பொலிவுறு நகரங்களுக்கான பட்டியலில் அடுத்த மாதத்தில் மேலும் 40 நகரங்கள் சேர்க்கப்படும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். இந்தியாவில் உள்ள நகரங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர் விநியோகம், இணையதள வசதி, மின்னணு நிர்வாகம் உள்ளிட்ட சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பொலிவுறு நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, 2022-ஆம் ஆண்டுக்குள் 100 பொலிவுறு நகரங்களை உருவாக்குவது என்றும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
கென்யாவுக்கு ரூ.683 கோடி கடனுதவி: மோடி-கென்ய அதிபர் முன்னிலையில் கையெழுத்து
கென்யாவின் விவசாயத் துறை வளர்ச்சிக்காக, 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.683 கோடி) கடனுதவி வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம், தில்லியில் பிரதமர் மோடி, கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா முன்னிலையில் புதன்கிழமை கையெழுத்தானது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும்: உலக வங்கி கணிப்பு
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், நிகழ் நிதியாண்டில் 7.6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி ஏற்கெனவே கணித்திருந்த நிலையில், உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கை காரணமாக, அது 7 சதவீதமாகவே இருக்கும் என்று தற்போது கணித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸால், நிகழ் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் அடுத்தடுத்த நிதியாண்டுகளில் 7.6, 7.8 சதவீதமாக அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேபாள நதிநீர்த் திட்டங்களுக்கு இந்தியா ரூ.38.82 கோடி நிதியுதவி
நேபாளத்தில் மூன்று முக்கிய நதிகளுக்கு கரைகளைக் கட்டுவதற்காக ரூ.38.82 கோடி நிதியுதவியை இந்திய அரசு புதன்கிழமை அளித்துள்ளது. நேபாளத்தில் லால்பகேயா, பாக்மதி, கமலா ஆகிய மூன்று நதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, தாழ்வான பகுதிகளுக்கு வெள்ளம் பாய்வதைத் தடுப்பதற்காக நதிக்கரைகள் கட்டப்படவுள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகளுக்கு இந்தியாவின் பங்களிப்பாக, ரூ.38.82 கோடி நிதியதவியை நேபாள அரசுக்கு இந்திய அரசு அளித்துள்ளது. இதற்கான காசோலையை நேபாள நீர்வளத் துறை அமைச்சர் தீபக் கிரியிடம் நேபாளத்துக்கான இந்தியத் தூதர் ரஞ்சித் ரேவ், காத்மாண்டில் புதன்கிழமை அளித்தார்.
நிகராகுவா அதிபராக ஓர்டேகன் பதவியேற்பு
மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவின் அதிபராக டேனியல் ஓர்டேகன் (71), மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவரது மனைவி ரோஸாரியோ முரில்லோ துணை அதிபராகப் பதவியேற்றார். நிகராகுவாவின் உயரிய இரு பதவிகளை ஒரு தம்பதி வகிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.