Agni 5 Test Fired Successfully (அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி)
அக்னி-5 ஏவுகணை சோதனையை விஞ்ஞானிகள் திங்கள்கிழமை வெற்றிகரமாக நடத்தினர். இந்த ஏவுகணை, 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமான தொலைவில் இருக்கும் எதிரிகளின் இலக்கைத் தாக்கும் வல்லமையுடையது.
இந்திய ராணுவத்துக்குத் தேவையான ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து சோதனை நடத்தி வருகிறது. இதில், டிஆர்டிஓ தயாரித்து அளித்துள்ள கீழ்கண்ட ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விட்டன
- அக்னி-1 (700 கிலோ மீட்டர் தூரம்),
- அக்னி-2 (2,000 கிலோ மீட்டர்),
- அக்னி-3 (2,500 கிலோ மீட்டர் தூரம்),
- அக்னி-4 (3,500 கிலோ மீட்டர்)
இந்நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எதிரிகளின் இலக்கைத் தாக்கி அழிக்கும் அக்னி- 5 ஏவுகணையை டிஆர்டிஓ அமைப்பு தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை, கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி முதல் முறையாக ஏவப்பட்டு சோதிக்கப்பட்டது. அதையடுத்து, 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ஆவது முறையாகவும், 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ஆவது முறையாகவும் சோதிக்கப்பட்டது.
இதையடுத்து, அக்னி-5 ஏவுகணை 4-ஆவது முறையாக திங்கள்கிழமை மீண்டும் சோதிக்கப்பட்டது. ஒடிஸா மாநிலம், அப்துல் கலாம் தீவில் இருந்து திங்கள்கிழமை காலை 11.05 மணிக்கு மொபைல் லாஞ்சர் மூலம் அக்னி-5 ஏவுகணை செலுத்தப்பட்டது.
What are the Speciality of Agni-5
அக்னி-5 ஏவுகணையானது, 17.5 மீட்டர் நீளமும், 50 டன் எடையும் கொண்டது. தரையில் இருந்து பாய்ந்து சென்று மற்றொரு இடத்தில் இருக்கும் இலக்கைத் தாக்கும் வகையில் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏவுகணையில் துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்க வகை செய்யும் நவீன மேம்படுத்தப்பட்ட மைக்ரோ நேவிகேஷன் கருவி, ஏவுகணை செல்லும் திசையை தீர்மானிக்கக்கூடிய நவீன கணினி உள்ளிட்டவையும் பொருத்தப்பட்டுள்ளன என்று இந்திய பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
அக்னி-5 ஏவுகணையால், சீனாவின் எந்தப் பகுதியையும் தாக்கி அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Courtesy: Dinamani
Post a Comment