பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை உலக மொழிகள் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், உலக மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மனி மொழிகளிலும், இந்திய மொழிகளான மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும். இப்பணிகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு வந்துள்ள புதிய வரவு
விலங்குகள் பரிமாற்ற முறையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு நான்கு ரியா பறவைகள் (Greater Rhea) மற்றும் ஆறு வராக மான்கள் (Indian hog deer) 11.09.2016 அன்று கொணடுவரப்பட்டன. இவற்றில் 2 வெள்ளைநிற ரியா பறவைகளும் 2 பழுப்பு நிற ரியா பறவைகளும், 3 ஆண் மற்றும் 3 பெண் வராக மான்களும் அடங்கும். இவைகள் திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்டன. இவற்றிற்குப் பதிலாக இப்பூங்காவிலிருந்து 4 வெள்ளை மயில்கள் (ஆண்-2, பெண்-2), 4 கட்ட உடல் மலைப்பாம்புகள் (ஆண்-2, பெண்-2) ஆகியவை திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவிற்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய தொழில் கொள்கை அறிமுகம்
புதுச்சேரியில் புதிய தொழில் கொள்கையை முதல்வர் வி.நாராயணசாமி, சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை (09.09.2016) அன்று அறிமுகம் செய்தார்.
பாரதியார் குயில் பாட்டு எழுதிய இடத்துக்கு "குயில் தோப்பு' என பெயரிடப்படும்: முதல்வர் வி.நாராயணசாமி
மகாகவி பாரதியார் புதுச்சேரியில் குயில் பாட்டு எழுதிய இடத்தை "குயில் தோப்பு' எனப் பெயரிட்டு, அரசு பராமரிக்கும் என்று புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.
வடகொரியா அணு ஆயுத சோதனையால் நிலநடுக்கம்
வடகொரியா பியூங்கி என்னும் இடத்தில் 5-வது முறையாக அணு ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது. இந்த அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட போது அப்பகுதியில் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
ஆறு இன்ச் நீள தாடி வளர்த்த இளம்பெண்: புதிய கின்னஸ் சாதனை!
லண்டனை சேர்ந்த சீக்கிய இளம்பெண் ஒருவர் இளம் வயதில் நீளமான தாடி வளர்த்த சாதனைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். தென் கிழக்கு இங்கிலாந்தின் பெர்க்ஷையர் மாகாணத்தின் ஸ்லோஹ் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்மான் கவுர் (24). விளமபர மாடலாக உள்ளார். இவர் தனது முகத்தில் வளர்ந்த தாடியை பராமரித்து வந்தார். ஆறு இன்ச் அளவில் தாடி வளர்த்ததனால் இன்று அவர் மிக இளம் வயதில் நீளமான தாடி வளர்த்த பெண் என்ற சாதனைக்கு உரியவரானார். ச் நீள தாடி வளர்த்த இளம்பெண்: புதிய கின்னஸ் சாதனை!
"விமானங்களில் சாம்சங் நோட் - 7 போனை பயன்படுத்தக் கூடாது'
விமானப் பயணத்தின்போது பயணிகள் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தக்கூடாது என அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பேட்டரிகள் வெடிப்பதாக எழுந்த புகார்களையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய அணு உலை கட்டுகிறது ஈரான்
புதிய அணு உலைக்கான கட்டுமானப் பணிகளை ஈரான் சனிக்கிழமை தொடங்கியது. துறைமுக நகரான புஷெஹரில் அணு உலை கட்டுமானப் பணிகளுக்கான தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. 850 கோடி டாலர் (சுமார் ரூ. 57,000 கோடி) மதிப்பில் உருவாக்கப்படவிருக்கும் இந்த ஆலையில் இரு மின் உற்பத்தி நிலையங்கள் அமையவுள்ளது.
சுப்பிரமணியன் சுவாமிக்கு அமெரிக்காவில் "தமிழ் ரத்னா' விருது
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு அமெரிக்க தமிழ்ச் சங்கம், "தமிழ் ரத்னா' என்ற விருதை வழங்கி கெüரவித்துள்ளது. இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள அந்த அமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: தற்போது அமெரிக்கா வந்துள்ள மாநிலங்களவை எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி, ஊழலை எதிர்த்துப் போராடி வருவதற்காகவும், அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மைக்காக தீவிரமாக செயலாற்றி வருவதற்காகவும் அவருக்கு "தமிழ் ரத்னா' விருது வழங்கி கெüரவிக்கப்பட்டுள்ளது.
நேபாள பிரதமர் பிரசண்டா செப். 15-இல் இந்தியா வருகிறார்
நேபாளத்தின் புதிய பிரதமர் பிரசண்டா, வரும் 15-ஆம் தேதி 4 நாள் பயணமாக இந்தியா வருகிறார். இந்தப் பயணத்தின்போது, மதேசிகள் விவகாரத்தில் எழுந்த கசப்புணர்வைப் போக்கி இரு நாடுகளுக்கும் இடையே வலுவான அடித்தளம் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்
ஐ.நா. பொதுச் செயலர் தேர்வு: குட்டெரெஸ் முன்னிலை
ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலர் பதவிக்கு நடைபெற்ற நான்காம் சுற்றுத் தேர்விலும் போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் முன்னிலை வகிப்பதாகத் தெரிய வந்துள்ளது.
சீனாவில் திறக்கப்பட உள்ள உலகின் மிக உயரமான பாலம்!
தெற்கு சீனாவின் குய்ஸோ மாகாணத்தில் உலகின் மிக உயரமான பாலம் இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலைப்பகுதிகள் நிரம்பிய சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது குய்ஸோ மாகாணம். இங்கே இரு மலைப்பகுதிகளில் நடுவே, ஆற்றுக்கு மேலாக கட்டப்பட்டுள்ளது பேய்ப்பன்ஜிங் பாலம். தரை மட்டத்தில் இருந்து 1854 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பாலம் 1341 மீட்டர் நீளம் கொண்டது. இந்த பாலம்தான் தற்பொழுது உலகின் மிக உயரமான பாலமென்று கருதப்படுகிறது.
உச்சத்தைத் தொட்டது உலக வெப்பம்!
உலகின் வெப்பநிலை, இதுவரை இல்லாத அளவு கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்டதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தெரிவித்துள்ளது. நாஸாவின் கொடார்டு விண்வெளி நுண்ணாய்வு மையம் மேற்கொண்ட மாதாந்திர கணக்கீட்டின்படி, கடந்த ஆகஸ்ட் மாத உலக வெப்பநிலை, அதற்கு முந்தைய அதிகபட்ச அளவான 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் வெப்பநிலையைவிட 0.16 டிகிரி செல்ஷியஸ் அதிகம் ஆகும்.
ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா - மோரீஷஸ் பேச்சுவார்த்தை
ராணுவம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இந்தியாவும், மோரீஷஸும் பேச்சுவார்த்தை நடத்தின
பாராலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்தியப் போட்டியாளரான வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மாரியப்பன் 1.89 மீ, வருண் சிங் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டினார்கள்.
பாரா ஒலிம்பிக் நிறைவு விழாவில் கொடியேந்திச் செல்கிறார் மாரியப்பன்
பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியாவின் சார்பில் தேசியக் கொடியேந்திச் செல்கிறார் தமிழக வீரர் மாரியப்பன்.
முருகப்பா கோப்பை ஹாக்கி: இந்திய ரயில்வே சாம்பியன்
முருகப்பா தங்க கோப்பைக்கான 90-ஆவது அகில இந்திய ஹாக்கிப் போட்டியில் இந்திய ரயில்வே அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஸ்குவாஷ் தரவரிசை: 10-ஆவது இடத்தில் ஜோஷ்னா
சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்க ஓபன்: மகளிர் ஒற்றையர் பிரிவில் ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார். நியூயார்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை (11.09.2016) அன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் கெர்பர் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவைத் தோற்கடித்தார்.
அமெரிக்க ஓபன்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் வாவ்ரிங்கா சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை (11.09.2016) அன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வாவ்ரிங்கா நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்தார்.
மல்யுத்த தரவரிசை: 4-ஆவது இடத்தில் சாக்ஷி மாலிக்
மகளிர் 48 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த தரவரிசையில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் தனது மல்யுத்த வாழ்க்கையில் அதிகபட்ச தரவரிசையை எட்டியுள்ளார் சாக்ஷி.
பாரா ஒலிம்பிக்: வெள்ளி வென்றார் இந்தியாவின் தீபா மாலிக்
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குண்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் தீபா மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் உலக சாதனை நிகழ்த்தி தங்கம் வென்றார் இந்தியாவின் ஜஜாரியா!
ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா, உலக சாதனை நிகழ்த்தி தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற போட்டியில், 63.97 மீ. தூரம் எறிந்து உலக சாதனை நிகழ்த்தினார் ஜஜாரியா. பாரா ஒலிம்பிக் போட்டியில் ஜஜாரியா பெறும் 2-வது தங்கம் இது. 2004 ஏதென்ஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் 62.15 மீ. தூரம் ஈட்டியை எறிந்து தங்கம் வென்றார்.
Post a Comment